இனவாதிகளை அரவணைத்தால் என்ன நேரும் என்பதற்கு மஹிந்த ஓர் உதாரணம் - கிழக்கு முதல்வர்

பெரும்பான்மை மக்களை திருப்தி படுத்துவதன் ஊடாக மாத்திரம் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெறலாம் என அரசாங்கம் நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

பெரும்பான்மை மக்களை முதன்மைப்படுத்தி சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நசுக்க முயன்ற மஹிந்த ராஜபக்ஸவுக்கு நேர்ந்த கதி அதற்கு சிறந்த எடுக்காட்டாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார்,

நல்லாட்சி அரசாங்கத்தின் சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த விடயத்தினை சுட்டிக்காட்டினார்.

தமது தேர்தல் தொகுதிகளில் பெரும்பான்மையினர் அதிகம் உள்ளதால் அவர்களும் கடும்போக்காக சிந்திப்பார்கள் எனக் கருதி இனவாதிகளுடன் கூட்டு சேர்ந்து அவர்களை திருப்திபடுத்தலாம் என முட்டாள்தனமாக கணக்குப் போட்டு இன்று சில அமைச்சர்கள் செயற்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,

அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பொதுபல சேனா அமைப்பினரிடையே மோதல்கள் உருவாகியுள்ள நிலையில் அவர்களின் இருப்பு குறித்தே தற்போது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அவர்களுடன் கூட்டணி சேர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது நகைப்புக்குரிய விடயம் என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே இனவாதிகளை அரவணைக்கும் அமைச்சர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது பரிவாரங்கள் போன்று மக்களால் நிராகரிக்கப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதுடன் தமது அரசியல் சுயலாபத்துக்காக நீதியமைச்சர் போன்றோர் இன்று இனவாதிகளுடன் கூட்டு சேர்வது நாட்டிற்கு உகந்த விடயமல்ல என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

சிறுபான்மையினரின் அபிலாஷைகளை மையப்படுத்தி நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து அனைவரையும் திருப்திபடுத்தும் விதமான தீர்வொன்றை தருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே சிறுபான்மையினர் நல்லாட்சி அரசுக்கு வாக்களித்ததாாகவும் ஆனால் இன்று சில அமைச்சர்களின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் நல்லாட்சி மீது நம்பிக்கை இழந்து வருவதுடன் இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

எனவே சிறுபான்மை மக்களின் அபிலா​ஷைகளையும் உரிமைகளையும் நசுக்கி முன்னேற முயன்ற எந்த அரசாங்கமும் நீடிக்கவில்லை என்பதை கருத்திற் கொண்டு மாகாணங்கள் தொடர்பில் மேலும் கரிசனை செலுத்தி அவற்றுக்கான அதிகாரங்களில் தலையீடு செய்யாமல் நியாயமாக மாகாணங்களுக்கு வழங்க வேண்டிய அதிகாரங்களை வழங்கி அரசாங்கம் உண்மையான நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மாகாணங்களுக்கான அதிகாரங்களுக்காக தாம் இவ்வளவு குரல் கொடுப்பது அவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அல்லவெனவும் சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் தமக்கான அபிலாஷைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் யாரிடமும் கையேந்தக் கூடாது என்பதற்காகவுமே என கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -