அலை அடித்து ஒரு நாளும் அலை விலகுவதில்லை - கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்





மது சகோதர்களின் இரத்தம் துடிக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும் ஆனால் நாங்கள் அவர்களிடம் சொல்கின்றோம் தம்பி கொஞ்சம் பொறு, அவர்கள் எங்களை உதறித் தள்ளவும் முடியும், தள்ளியும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் வேறு நாங்கள் வேறு அல்ல. அலை அடித்து ஒரு நாளும் அலை விலகுவதில்லை என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

செங்கலடி எல்லை நகரில் நடைபெற்ற செங்கலடி அக்னி இசைக்குழுவின் 17வது ஆண்டு நிறைவு மற்றும் பொங்கல் விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இந்த இலங்கையில் இருக்கக் கூடிய அரசியல் சூழ்நிலையில் எமது மக்கள் எவ்வாறு தங்கள் கவனத்தை எடுத்துக் கொள்ளப் போகின்றார்கள் என்கின்ற ஒரு கேள்வி எழுகின்றது. தமிழர்களாகிய நாம் காலாகாலமாக ஏமாற்றப்பட்டவர்களாக இருக்கின்றோம். சிலவேளைகளில் பேச்சுவார்த்தைகள் வரும் போது அத்தகைய பேச்சுவார்த்தைகள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அதற்கு அப்பால் செல்ல முடியாமல் இருந்திருக்கின்றது.

தற்போதைய இந்த அரசியல் நிலைமையைப் பார்க்கும் போது எமக்கு ரோசம் வருகின்றது கோபம் வருகின்றது. எல்லாம் உண்மை தான் ஏனெனில் எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் அலட்சியம் செய்யப்படுவது போன்ற எண்ணம் எம்முள் தோன்றுகின்றது.

எமது தலைவர்கள் மூன்று முக்கிய விடயங்களை எமக்கு சுட்டிக் காட்டியுள்ளார்கள். எமது மக்களுக்கான நிரந்த தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் இலங்கை நாட்டின் முக்கிய கட்சிகள் இரண்டும் ஒன்று சேர வேண்டும், உலக நாடுகள் எமது பிரச்சினையின் பக்கம் திரும்ப வேண்டும், அத்துடன் எமது தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே தலைமையின் கீழ் இருக்க வேண்டும். தற்போது மேற்கூறப்பட்ட இரண்டு விடயங்கள் இடம்பெற்றுள்ளன மூன்றாவது விடயம் பற்றி இந்தச் சூழ்நிலையில் இருந்து நாங்கள் எடுக்க வேண்டிய கவனம் எத்தகையது என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு அறுவைச் சிகிச்சை செய்கின்ற வைத்தியர் எவ்வளவு கவனம், நுணுக்கம், அவதானம் எடுக்க வேண்டுமோ அத்தளவுக்கு கவனம், நுணுக்கம், அவதானம் எமது தீர்வு விடயத்தில் எமது அரசியல் பிரமுகர்கள் அனைவரும் எடுக்க வேண்டும்.

எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்கின்றது. எமது செயற்பாடுகள் மிகவும் பக்குவமானதாகவும், நிதானமானதாகவும் இருக்க வேண்டும் என்று. ஆனால் இதை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இருக்கின்றது.

மகாபாரதத்தில் சூதாட்ட களத்தில் தர்மருக்கு அவரது சகோதரர்கள் நிதானம் இழந்து பக்குவம் இழந்து எவ்வாறெல்லாம் கதைத்தார்களோ அது போல் எமது தலைமைக்கு கதைக்கின்றார்கள். ஆனால் எமது தலைமை மிகவும் பொறுமையாக பக்குவமாக நிதானமாக எமது மக்களுக்குரிய தீர்வு விடயத்தில் செயற்பட்டு வருகின்றது. இதை எமது மக்களும் நன்கு அறிவார்கள்.

இப்போது ஒரு இணக்கப்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சர்வதேசமும் இதனை அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இதனை எந்த இடத்தில் முறித்துக் கொள்ள வேண்டும் எதுவரைக்கும் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதில் ஒரு கடப்பாடு இருக்கின்றது. இதனை எடுத்த கணமே முறித்துக் கொண்டு செல்ல முடியாது.

இவ்விடயங்கள் சர்வதேசத்தின் அனுசரணையுடன் தான் நடைபெறுகின்றன. எமது அர்ப்பணிப்புகளை நாம் சர்வதேசத்திற்கு நிரூபிக்க வேண்டும். இதற்கு மேல் நகர்த்த முடியாது என்பதை சர்வதேசமும் உணரும் வகையில் எமது நற் செயற்பாடுகள் இருந்திட வேண்டும்.

எமது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்பது பேசிவிட்டு முடிக்கின்ற விடயம் அல்ல இவ்விடயங்கள் தொடர்பில் பலவாறான செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இவ்விடயங்கள் எல்லாம் ஒருங்கே மேற்கொள்வதற்கு எமது மக்களின் நூற்றுக்கு நூறு வீத கவனம் இருத்தல் வேண்டும்.

எமக்குத் தெரியும் எமது சகோதர்களின் இரத்தம் துடிக்கின்றது. ஆனால் நாங்கள் அவர்களிடம் சொல்கின்றோம் தம்பி கொஞ்சம் பொறு, அவர்கள் எங்களை உதறித் தள்ளவும் முடியும், தள்ளியும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் வேறு நாங்கள் வேறு அல்ல. அலை அடித்து ஒருநாளும் அலை விலகுவதில்லை. ஒரே உணர்வால் நாங்கள் ஒன்றுபட்டவர்கள். ஒரே வீட்டுக்குள் இருப்பவர்கள்.

சிலவேளைகளில் கோபப்படுவதும் உண்டு. ஆனால் வீட்டுக்குள்ளேயே தான் இருப்போம். அவர்களுக்கு ஒரு சக்தி ஆவேசம் வந்திருக்கின்றது அது நல்லது தான் ஆனால் அது ஒரு போதும் எங்களையும் அவர்களையும் பிரித்து விடாது. நாம் ஒன்றாக இருப்போம், ஒன்றாக உழைப்போம், தமிழினத்தின் விடிவொன்று தான் எங்கள் எல்லோரதும் இலக்கு என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -