முன்னேற்றப்பாதையில் நாம் பயணித்துவருகிறோம் - ஜனாதிபதி

நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து, நாளைய தலைமுறைக்காக சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஒரு நாடு என்ற வகையில் சிறந்த பொருளாதாரத்துடன் முன்னேற்றப்பாதையில் இன்று நாம் பயணித்துவருகிறோம். சிலர் அதனை பிழையான கண்ணோட்டத்துடன் நோக்கி, பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தபோதிலும், நாட்டைக் கட்டியெழுப்பும் உன்னத நோக்கத்திற்காக தாமும் பிரதமரும் உள்ளிட்ட கூட்டு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

காலி லபுதுவ சிறிதம்ம கல்லூரியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற “நில மெஹவர” (உத்தியோகபூர்வ பணி) ஜனாதிபதி மக்கள் சேவையின் காலி மாவட்ட நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மக்களுக்கான அனைத்து சேவைகளையும் கிராமத்திலேயே பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு ஏற்ப உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “உத்தியோகபூர்வ பணி” நிகழ்ச்சித்திட்டம் மக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரதேச செயலாளர் பிரிவு மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டம் அண்மையில் ஜனாதிபதியின் தலைமையில் பொலன்னறுவையில் நடைபெற்றது. அதன் இரண்டாம் கட்டம் காலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெறுகிறது. காலி மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காக 19 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், முன்வைக்கப்பட்ட 1,40,956 பிரச்சினைகளில் 1,37,681 க்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களிடமிருந்து எந்தவொரு நிதியையும் அறவிடாது இலவசமாக பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், மரண சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டன. இலவச மருத்துவ மற்றும் கண் மருத்துவ சேவைகள், சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு, ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் ஏனைய அரசாங்கக் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள், சுயதொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையின் படி தேசிய மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களில் காலி மாவட்ட அபிவிருத்திக்காகவும் அங்கு வாழும் மக்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இங்கு மேலும் குறிப்பிட்டார்.

இன்று இடம்பெற்ற நடமாடும் சேவையில் இணைந்துகொண்ட ஜனாதிபதி, ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கூடத்தில் இருந்து மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

500 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்கள், லெப்டொப் கணனிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன உள்ளிட்ட அமைச்சர்களும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு உயரதிகாரிகளும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -