ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
நல்லாட்சியின் நாயகனான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நான் உட்பட இந்த நாட்டில் வாழ்கின்ற 99 சதவீதமான முஸ்லிம்கள் வாக்களித்தும் ஆதரவு தெரிவித்தும் அவரை ஆட்சிபீடமேற்றியபோது பெருமைப்பட்டோம்.
ஆனால், அவர் தனது இரண்டு வருட ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு அணுவளவேனும் நன்மை செய்யவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் ஹஸன் ஹுஸைன் பள்ளிவாசலில் ஞாயிறன்று (15.01.2017) இடம்பெற்ற பள்ளி வாசல் அபிவிருத்திப் பணிகளுக்கு அவரது நிதி ஒதுக்கீட்டில் நிதி வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் மத்தியில் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்ளூ கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகளுக்குத் தற்போதைய நல்லாட்சி அரசில் தீர்வு காணப்படாதது ஒரு புறமிருக்க, இப்பொழுது அதற்கும் மேலதிகமாக பேரின மதவாத விஷம சக்திகளின் நெருக்கடிக்கு முஸ்லிம்கள் முகங்கொடுக்கவும் நேரிட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் எரியும் நெருப்பாக பேரின மதவாதிகளால் தூண்டி விடப்பட்ட தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம், நுரைச்சோலை வீட்டுத் திட்டம், வடமாகாண முஸ்லிம்களுடைய மீள் குடியேற்றம், வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை என்பன தற்பொழுதும் தொடர்கின்றன.
நல்லாட்சி அரசு இந்தப் பிரச்சினைகளை ஒரு பொருட்டாக எடுக்காதது முஸ்லிம்களுக்கு அவநம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.
அதனையும் விட நல்லாட்சியின் நாயகனான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சி எனும் விடயம் முஸ்லிம்களின் பூர்வீக வாழ்விடங்களைக் குறிபார்த்து மேற்கொள்ளப்பட்டது என்பதையிட்டு முஸ்லிம் சமூகம் தற்போது அச்சம் கொண்டுள்ளது.
இது இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு மிக ஆபத்தான கட்டமா என்பதையும் குறிப்புணர்த்துவதாக அமைந்திருக்கின்றது.
ஆகவே, இத்தகையதொரு சூழ்நிலையில் நல்லாட்சியின் பங்காளிகள் என்ற வகையில் தற்போதைய நல்லாட்சி முஸ்லிம்களுக்கு பொல்லாத ஆட்சியாக மாறியிருப்பது குறித்து இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களாகிய நாங்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளோம்.
நல்லாட்சியின் நாயகனும் நல்லாட்சியை நடத்தும் ஏனையவர்களும் பேரின மதவாத ஆக்கிரமிப்பாளர்களுக்கு அனுசரணை வழங்குவதான போக்கையே காண முடிகின்றது.
நல்லாட்சி முஸ்லிம்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பறவாயில்லை உபத்திரவமாவது செய்யாமலிருக்கட்டும் என்ற விரக்தி நிலைக்கு முஸ்லிம்களை இட்டுச் சென்றிருப்பது கவலையளிக்கின்றது.
ஆயினும், முஸ்லிம் சமூகம் பொறுமை இழக்காது நிதானமாக இருந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
அதேவேளை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொள்ளாமல் ஓரணியில் திரண்டு தனித்துவ உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
அதேவேளை, மக்களை மார்க்க விடயங்களினூடாக நாட்டுப் பற்றும் அமைதி மற்றும் சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் வளர்ப்பதற்கு பள்ளிவாசல்கள் வழிகாட்ட வேண்டும்' என்றார்.