இல்லாத குட்டிப் பூனை கொம்பன் யானையான கதை! கற்பனையில் பழி சுமத்துதல் கொடிய ஹறாமாகும்!

எஸ். ஹமீத்-

ருவன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட இன்னொருவன் வேடிக்கையாக, ''வீதியில் குட்டிப் பூனை ஒன்று கிடக்கிறது. பார்த்துப் போ!'' என்று சொன்னான். சைக்கிளில் வந்தவரிடம் வேறொருவர் கேட்டார். ''உங்களிடம் அவர் என்ன சொல்லிவிட்டுப் போகிறார்?'' என்று. அதற்கு சைக்கிளில் வந்தவன், ''பூனையொன்று வீதியில் கிடக்கிறதென்று அவர் சொல்லிவிட்டுச் செல்கிறார்'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். இவரிடம் மற்றொருவன் கேட்டான். ''ஏதோ சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தீர்களே...என்ன விஷயம்...?'' 

இவர் சொன்னார்: ''வீதியில் பெரிய பூனையொன்று அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கிறதாம்!'' இதனைக் காதில் வாங்கிக் கொண்ட அவன் மற்றுமொருவனிடம் சொன்னான். '' உனக்கு விஷயம் தெரியுமா...? வீதியில் மிகப் பெரிய, ஆபத்தான பூனையொன்று நடமாடுகிறதாம்!'' அவன் வேறொருவரிடம் சொன்னான். ''ஆபத்தான பூனையென்று சொல்கிறார்கள்; பொதுவாகப் பூனைகள் ஆபத்தானவையல்ல; ஒருவேளை அது குட்டி யானையாக இருக்கலாம்!'' இதனைக் கொண்டு போய் இன்னொருவரிடம் சேர்த்தான் அவன். ''யானையொன்று ரோட்டில் நிற்கிறதாம்!''. அதனை வேறொருவன் திரித்துக் கூறினான். ''அது சாதாரண யானையல்லவாம். கொம்பன் யானையாம் மதம் கொண்டு அலைகிறதாம்!''

ஆக, சும்மா இருந்த வீதியில் மதம் கொண்ட கொம்பன் யானையைக் கொண்டு வந்து விட்டார்கள். இப்படித்தான் நமது இன்றைய சமூகத்தில் பெரும்பாலானோர் தமது கற்பனைகளினால் கட்டுக் கதைகளை உருவாக்கிப் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் றிசாத் அவர்கள் மீதும் இவ்வாறுதான் கதைகளை ஜோடித்துக் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள் பலர்.

இல்லாத ஒன்றை உருவாக்கிச் சொல்வதும், இருக்குமொன்றை மிகைப்படுத்திச் சொல்வதும் பலரது பொழுது போக்காகிவிட்டது. ஆனால், இது நமது புனித மார்க்கத்தில் மிகவும் வெறுக்கப்பட்டு, விலக்கப்பட்ட ஹராம் என்பதை அவர்கள் ஏனோ உணர மறுக்கிறார்கள்.

ஒருவர் மீது வீண் பழி சுமத்துவதும் நாம் மேலே குறிப்பிட்ட கதையைப் போன்றதுதான். ஒருவர் செய்யாத ஒரு குற்றத்தைச் செய்ததாகச் சொல்வதை பற்றித் திருக்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கிறது:

''மூஃமினான ஆண்களையும், மூஃமினான பெண்களையும் செய்யாததை (செய்ததாக) கூறி எவர்கள் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.'' (அல்குர்ஆன் 33:58)

இந்த ஹதீஸைப் பாருங்கள்:

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ''ஏழை மனிதர்கள் யார்?'' என வினவினார்கள் (அதற்கு தோழர்கள்) ''எங்களில் பொருள் வசதி இல்லாதவர்தான் ஏழை மனிதர்'' என பதிலளித்தார்கள்; அது சமயம் நபி (ஸல்) அவர்கள் ''கியாமத் என்னும் இறுதி நாளில் (நீங்கள் கூறிய நபர் அல்ல) அந்நாளில் ஏழை மனிதர். அவர் உலகிலிருந்து தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற எல்லா வகையான வணக்க வழிபாடுகளையும் கொண்டு வருவார். அத்துடன் அவர் எவரையாவது திட்டியிருப்பார். எவர் மீதாவது பழி சுமத்தியிருப்பார். எவருடைய பொருளையாவது சாப்பிட்டிருப்பார். 

எவரையாவது அநியாயமாக கொன்றிருப்பார். எவரையாவது அநியாயமாக அடித்திருப்பார். ஆக, இத்தகு குற்றங்களையும் கொண்டு வருவார். பின்பு இவருடைய நன்மைகளிலிருந்து (இவரால்) அநீதம் இழைக்கப்பட்டவருக்கு (நன்மை) வழங்கப்படும்; (இவரால்) மற்றொரு அநீதம் இழைக்கப்பட்டவருக்கும் இவருடைய நன்மைகளிலிருந்து வழங்கப்படும். (இப்படியே) இவருடைய நன்மைகள் எல்லாம் முடிந்துவிடும். (ஆனால்) மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் மீதமிருக்கும்; (ஆகவே) அம்மக்களின் குற்றங்களை அவர் மீது சுமத்தப்படும்; பின்பு அவரை நரகில் போடப்படும்.'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)

இன்று அமைச்சர் றிசாத்தைச் சிலர் 'ஊழல்வாதி' என நாக் கூசாமல் சொல்கிறார்கள். கை கூசாமல் எழுதுகிறார்கள். எந்தவித அடிப்படைகளுமின்றி, எவ்வித ஆதாரங்களுமின்றித் தமக்குத் தோன்றியவாறெல்லாம் அவரை விமர்சனம் செய்கிறார்கள். இத்தகையோருக்கு மறுமை நாளில் கிடைக்கப் போகும் தண்டனை எவ்வாறிருக்குமென்பதை மேற்சொன்ன, குர்ஆன் மற்றும் ஹதீதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -