பதவி துறப்பதற்கு தயார் - நற்பிட்டிமுனையில் ஹரீஸ்

கரையோர மாவட்டத்தினை உருவாக்க மறுத்தால் பதவி துறப்பதற்கு தயாராகவுள்ளதகவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்  தெரிவித்தார். 

அம்பாறை நற்பிட்டிமுனை கிராமத்தில் திவிநெகும சமூர்த்தி வங்கி கிளை திறப்பு விழாவானது நேற்று மாலை பிரதம முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஷாலிக் தலைமையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

முஸ்லிம் சமூகம் இந்த நாட்டை ஆளப்பிறந்தவர்கள் எங்களுக்கும் உரிமை இருக்கின்றது.  மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் பல தசாப்த காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது கணவனை இழந்த 20,000 இற்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றது. அவர்களுக்கான உணவுகளை நாளாந்தம் வழங்குவதற்கு கூட கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்ட விதவைகளும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இதுதான் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரினதும் இயல்புமாகும். இந்த செயற்பாடு சில இடங்களில் மழுங்கடிக்கப்படுகின்றது.

இன்று இந்த நாட்டிலே கொண்டு வரப்படவிருக்கும் அரசியலமைப்பு சட்டத்தில் எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமை முற்றுமுழுதாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக எமது தலைவரும் நாங்களும் இரவு பகலாக பாடுபட்டு போராடிக்கொண்டு வருகின்றோம்.

இந்தநாட்டிலே வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுகின்ற போது இங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிரச்சனைக்கு சரியான தீர்வினை வழங்க வேண்டும். அப்போது தான் இங்குள்ள சமூகம் நிம்மதியாகவும் சுய மரியாதையுடனும் வாழ முடியும்.

இன்று இந்தியாவை எடுத்துக்கொண்டால் தமிழ் நாட்டில் என்ன நடக்கின்றது. மெரீனா கடற்கரையில் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களும், மாணவர்களும், மக்களும் ஒன்று பட்டு இருக்கின்றார்கள். அவர்களது பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. அது அவர்களது உரிமை அதனை விளையாட முடியாத நிலையில் டில்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் அதனை மறுத்திருக்கின்றது.

இவர்களது உணர்வுகளை இழுத்து மூடியதனால் இன்று தமிழகம் முழுவதுமே போராட்ட களமாக மாறியிருக்கின்றது. இவ்வாறு உணர்வுகளுக்கு பூட்டுப்போடுகின்ற நிகழ்வுகள் நடைபெறுகின்ற போது அது போராட்டமாக மாறுகின்றது என்பதனை உலகத்தலைவர்கள் மறந்துவிடுகின்றார்கள்.

அதே போன்றுதான் இந்த நாட்டிலே புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்க முற்படுகின்றது. அதில் நாங்கள் கூறுகின்றோம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தேர்தல் முறை இதுதான் சாதகம் அதனை செய்யுங்கள் என்றால் அதனை மறுத்து நாங்கள் செய்வதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று திணிப்பதற்கு முற்படுகின்றார்கள்.

அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் கையுயர்த்த வேண்டும், அவர்கள் சொல்வதற்கெல்லாம் மகுடி ஊத வேண்டும் என்று தெற்கில் உள்ள சில தலைவர்கள் எண்ணுகின்றார்கள்.  அதற்கு விலை போவதற்காக தலைவர் அஷ்ரப் எங்களை உருவாக்கவில்லை. மாறாக எங்களை உருவாக்கியது எமது சிறுபான்மை சமூகம் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே.

முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரபின் பாசறையில் பிறந்தவர்கள் மன்னாருக்கோ அங்குள்ள அரசியல் தலைமைகளுக்கோ தலைகுனிந்து செவிமடுக்கின்றவர்கள் அல்ல நாங்கள் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் மிகவும் அக்கறையுடன் செயற்படுபவர்கள் அதனை அறியாமல் இந்தக்கட்டத்தினை தடுக்க வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்ததுடன் நிறுத்தி விடாது கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து இறுதியில் ஒன்றும் செய்ய முடியாது நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இன்று அம்பாறையில் என்ன நடக்கின்றது எமது பிரதேசத்தில் ஏஜென்டுகளை கொண்டு வந்து வாக்குகளை பெற்றுக்கொண்டு அம்பாறையில் ஒரு அமைச்சரை உருவாக்கினார்கள்.

எங்களது இறக்காமத்தில் போய் அவர்களது புனித சிலையை வைத்தார்கள். ஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கசப்புணர்வு. அது மாத்திரமா கல்முனையில் உள்ள மாவட்ட காரியாலயங்களை அம்பாறைக்கு மாற்ற முற்பட்டார்கள் அதனை தடுத்து நிறுத்தி வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம். அவர்கள் இது தொடர்பாக சரியான முடிவுகளை எடுப்பார்கள் நன்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கின்றது எனவும் எச்.எம்.எம்.ஹரீஸ் கூறினார்.

இதேவேளை இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல.எம்.நசீரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர்கள், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட்கனி, அம்பாறை மாவட்ட திவிநெகும பணிப்பாளர் சத்துறுவன் அனுறுத்த மற்றும் பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள், கிராமத்து பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -