எம்.ரீ.ஹைதர் அலி-
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வாழைச்சேனை அல்-றஸாதிய்யா முன்பள்ளி பாலர் பாடசாலையின் 16வது மாணவர் வெளியேற்று விழா 2017.01.01ஆந்திகதி - ஞாயிற்றுக்கிழமை வாழைச்செனை அந்நூர் தேசிய பாடசாலையின் கேட்போர்கூடத்தில் முன்பள்ளி பாலர் பாடசாலையின் ஆசிரியை திருமதி. ஏ.பீ. நஸ்ரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்...
சிறுபான்மை மக்களின் உரிமைகள், வணக்கஸ்தலங்கள், கலாச்சாரம் மற்றும் பூர்விகங்கள் என்பன பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் பாரிய அர்பணிப்புகளுக்கு மத்தியில் இந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்திய போதும் தற்போது அந்த நம்பிக்கைகள் அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
மேலும், தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மதகுரு ஒருவர் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டபோது அவரது நடவடிக்கைகளுக்கு இந்நாட்டின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ் மதகுருவுக்கு ஆதரவாக நடந்து கொண்டமை இந்நாட்டின் நீதித் துறையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
நீதி அமைச்சரின் இவ்வாறன நடவடிக்கையினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆட்சி மாற்றத்தினூடாக இந்த நாட்டில் சமாதானமும் இன, மத ஒற்றுமையும் கட்டியெளுப்பப்படும் என்று நாங்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிராசையாகி போய்விடுமோ என்ற அச்சம் இன்று எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
ஒரு சில தினங்களுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் பரம்பரை பரம்பரையாக எமது முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவந்த வில்பத்து பிரதேசத்தினை வனவிலங்கு பிரதேசத்திற்குள் உள்வாங்க வேண்டும் என்று அதியுத்தம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று எல்லையிலுள்ள பொத்தானை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலினை சூழவுள்ள இடங்களை தொல்பொருள் ஆய்வுக்கான பாதுக்காக்கப்பட வேண்டிய பிரதேசம் எனவும் அந்த எல்லைக்குள் யாரும் உட்செல்ல முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ஷ் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் இந்நாட்டில் நடைபெறாத இத்தகைய விடயங்கள் கூட இன்று அதியுத்தம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் நடைபெறுகின்றது என்றால் இந்நாட்டில் ஆட்சி மாற்றத்தினால் மாத்திரம் எமது சுதந்திரத்தினை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனை தெளிவுபடுத்தியுள்ளது. ஆகவே சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்ட சமூகமாக மாற வேண்டும்.
அத்தோடு, எமது சிறார்களுக்கு சிறந்த ஒழுக்கத்துடன் இணைந்த கல்வியினை வழங்க வேண்டும்.
அத்தகைய நல்லொழுக்கமுடைய கல்வி கற்ற, சமூகத்திற்காக குரல் கொடுக்கக்கூடிய எதிர்கால சமூகம் ஒன்றை கட்டியெழுப்பதன் மூலமாகவே எமது சமூகத்தின் அபிலாசைகளை வேன்றெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு எனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் பாலர் பாடசாலைகளின் இணைப்பாளர் எம்.ஐ. மாஹிர், காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் எச்.எம்.எம். இஸ்மாயில், முன்பள்ளி பாலர் பாடசாலையின் செயலாளரும், அக்கரைப்பற்று வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளருமான எஸ். சுபைர், பாலர் பாடசாலையின் தலைவர், ஏ.ஜீ.எம். அஸ்லம், வந்தாறுமூலை நில அளவைத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஏ.எம். இஸ்மாயில் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இறுதியில் பிரதம அதிதியினால் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.