கிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையம்; எமது உறவுகளுக்காக உதவிடுவோம்

[ஏறாவூரில் நிர்மாணிக்கப்படவுள்ள கிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிக்கான நிதி திரட்டல் நிகழ்வும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூரில் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையொட்டி பிரசுரிக்கப்படும் விசேட கட்டுரை]
எம்.ஐ.முபாறக்-

லங்கையில் புற்றுநோய் அதிகரித்துக்கொண்டு போவது மிகவும் கவலைக்குறிய அதிர்ச்சியான செய்தியாகும்.இருதய நோயை விடவும் புற்றுநோய்தான் எதிர்காலத்தில் அதிகரித்துக் காணப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஓரிரு நாட்களுக்கு முன் கூறியமையும் இந்த ஆபத்தான நிலையை அடிப்படையாக வைத்துத்தான்.

புற்றுநோய் எவ்வளவு பயங்கரமானது என்று பாமர மக்களுக்குக்கூட தெரியும்.ஆனால்,அதில் இருந்து தப்புவதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறைதான் மிக மிகக் குறைவாக இருக்கின்றது.இதையும் தான்டி அவர்கள் அந்த நோயால் பாதிக்கப்பட்டுவிட்டால் அவர்களைக் காப்பாற்றுவது எமது கடமையாகும்.

அப்படி இருந்தும் அவர்கள் காப்பாற்றப்பட முடியாத ஆபத்தான நிலையை அடைந்துவிட்டார்கள் என்றால் குறைந்த வேதனையுடனாவது அவர்கள் அவர்களின் இறுதிக் கட்டத்தை நெருங்குவதற்கு நாம் உதவ வேண்டும்.மிகவும் பரிதாபத்துக்குறிய நிலைக்கு நாம் அவர்களைத் தள்ளிவிடமுடியாது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதிப் பயணத்துக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்ற எத்தனையோ நோயாளிகள் உரிய பராமரிப்பின்றி வீடுகளில் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.அவர்களின் உறவினர்களால் வைத்திய செலவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.

வைத்தியத்துக்காக அலையும் உறவினர்கள் நோயாளியை விடவும் அதிக துன்பத்துக்கு -சிரமத்துக்கு-இன்னும்பல அசௌகரீகங்களுக்கு ஆளாகின்றனர்.இவ்வாறான ஒட்டுமொத்த காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு-இவற்றுக்கெல்லாம் ஒரே கூரையின் கீழ் தீர்வை வழங்குவதை நோக்காகக் கொண்டு உதயமாகப் போவதுதான் ''கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம்''.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விஷேட வைத்தியர் ஏ.இக்பால் அவர்களின் சிந்தனையில் உதித்ததுதான் இந்த நிலையம்.தனது இந்த யோசனையை சக வைத்தியர்களிடமும் நண்பர்களிடமும் முன்வைத்ததும் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இன்று அது செயல்வடிவம் பெரும் நிலையை அடைந்துள்ளது.

நோயாளிகளுக்கு ஏற்ற மிகவும் அமைதியான சூழல் ஒன்று ஏறாவூரில் தெரிவு செய்யப்பட்டு இந்த நிலையத்தை அமைக்கும் பனி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இரண்டு கோடி ரூபா செலவிலான இதன் நிர்மாணப் பணிக்கு மக்கள் அனைவரினதும் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று அதிகமானவர்கள் விரும்பியதால் மக்களின் பணத்தைக் கொண்டும் அவர்களின் சரீர உதவியைக் கொண்டும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையம் நோயாளியின் சொந்த வீடு போன்றதாகவே இருக்கும்.நோயாளியுடன் உறவினர்கள் எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கி இருந்து அவர்களின் சிகிச்சைக்கு உதவ முடியும்.சமைத்து உண்ணக்கூடிய அனைத்துவிதமான வசதிகளுடன்தான் இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளது.

அனைத்துமே இலவசம் என்பதால் ஏழை நோயாளிகளுக்கு இது ஒரு வரப் பிரசாதமாகவே அமையும்.வைத்தியம் , தங்குமிடம்,உணவு மற்றும் பயணம் ஆகியவற்றுக்குமான செலவுகள் அனைத்தையும் இந்த நிலையம் இல்லாமல் செய்யப் போகின்றது.

தனது சொத்துக்களைக்கூட விற்று புற்றுநோய்க்கி வைத்தியம் செய்வதை நாம் காண்கிறோம்.பணக்காரர்களால் இந்த சுமையைத் தாங்கிக்கொள்ள முடியும்.ஏழைகளால் அவ்வாறு முடியுமா?.அதுபோக,பணக்காரர்களோ ஏழைகளோ நோயாளிகளை வீட்டில் வைத்து பராமரிக்கக்கூடிய வைத்திய அறிவு அவர்களுக்கு உண்டா?ஆகவே,இவ்வாறான பிரச்சினைகள் அனைத்தையும் கருத்திக்கொண்டுதான் இவ்வாறான நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து ஏறாவூரில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலமும் இந்த நிலையத்தின் நிர்மாணிப்புக்கான நிதி திரட்டல் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.

இதனைத் தொடர்ந்து நிமானப்பணியை பூர்த்தி செய்வதற்கான அனைத்து பணிகளும் துரிதகதியில் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்த மேலான பனி தொடர்பில் இதன் காரணகர்த்தாவான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விஷேட வைத்தியர் ஏ.இக்பால் கூறுகையில்:

மிகக் கொடிய நோயான புற்றுநோயின் பிடியில் இருந்து தப்புவதற்கு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.அதையும் மீறி அந்த நோய் ஆட்கொண்டுவிட்டால்-குணப்படுத்த முடியாத நிலையை அடைந்துவிட்டால் அந்த நோயாளிகளை இறுதிவரைக்கும் வைத்துப் பராமரிப்பதற்கான ஒரு நிலையான அமைவிடம் இன்றைய கால கட்டத்தில் தவிர்க்கமுடியாததாகிவிட்டது.

இந்தச் சிக்கல் நிலையை சமாளிப்பதற்காக எமது எண்ணத்தில் உதித்ததுதான் கிழக்கு புற்று நோய் பராமரிப்பு நிலையம்.இந்த யோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முயற்சியில் நாம் இப்போது இறங்கியுள்ளோம்.

இது ஒரு வைத்தியசாலை அல்ல.மாறாக குணமாக்க முடியாது என நாட்குறிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அமைதியான சூழலுடன் கூடிய அவ்வப்போது காணப்படும் வலிகளுக்கான அல்லது குணங்குறிகளுக்கு நிவாரணம் வழங்கும் ஒரு நிலையமாகும்.

குணப்படுத்த முடியாத நிலையை அடைந்த-மரணத்தை எதிர்பாத்து இருக்கின்ற புற்றுநோயாளிகளை இறுதி வரைக்கும் வேதனை இன்றிப் பராமரிப்பதே இந்த புற்று நோய் பராமரிப்பு நிலையத்தின் நோக்கம்.

மேலும் வலியை ஏற்படுத்தும் எல்லா அறிகுறிகளுக்கும் நிவாரணம் வழங்குதல்,நோயாளியை ஆன்மீகரீதியாக-உளவியல்ரீதியாக தைரியப்படுத்துதல்,நோயாளி இறக்கும் வரை முடிந்தளவு இயங்குவதற்கு உதவுதல்,மரணம் தவிர்க்க முடியாதது என்பதை அவருக்கும் அவரது உறவுகளுக்கும் உயிரோட்டமாய் உணர்த்துதல் போன்ற பல பராமரிப்பு சேவையை இந்த நிலையம் செய்யவுள்ளது.

இதன்மூலம்,நோயின் தாக்கத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான பராமரிப்பு நிலையம் ஒன்று அவசியப்படுகின்றது.தேசிய சொத்தாக மாறப்போகும் இந்த நிலையத்தின் நிர்மாணத்துக்கு உதவ வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

மிகவும் அமைதியான சூழலில் நோயாளிக்குத் தேவையான- நோயாளிகளின் உறவினர்கள் கூடவே தங்கக்கூடிய அனைத்துவிதமான வசதிகளுடனும் இந்த நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கக்கூடிய radio theropy கருவி விரைவில் பொறுத்தப்படவிருப்பதால் அங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கிழக்கு மாகாண மக்கள் மாத்திரமன்றி நாட்டின் அனைத்துப் பாகங்களில் உள்ள மக்களும் மட்டக்கப்பு வைத்தியசாலையை நோக்கி வரும் நிலை ஏற்படும்.இதனால் நோயாளிகளுடன் கூட வரும் உறவினர்கள் தங்குவதற்குக்கூட சிரமப்பட வேண்டி வரும்.அவர்கள் வீண் செலவையும் வீண் சிரமத்தையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.நோயாளிக்கு வழங்கப்படும் மூன்று நிமிட சிகிச்சைக்காக உறவினர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக ஹோட்டல்களில் தங்கி இருக்க வேண்டி வரும்.இந்த நடைமுறைச் சிக்கல்கள் அனைத்தையும் எமது நிலையம் போக்கும்.

எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தூரநோக்குடன் நோக்குபவர்களுக்கு இந்த நிலையத்தின் தேவைப்பாடு தெளிவாக விளங்கும்.ஆகவே,இந்த நிலையத்தின் நிர்மானப் பனியை வெற்றி பெறச் செய்வதற்கு அனைவரும் உதவ முன்வர வேண்டும்.-புற்றுநோயின் கொடூரப் பிடியில் இருந்து அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக.

01-Name of Account:
Eastern Cancer Care Hospice
Amana Bank , Eravur Branch Acc. No: 0010273276001

02-Name of Account.
Eastern Cancer Care Hospice 
Peoples Bank Eravur Branch Acc.no: 1 2 3100100049812

தொடர்புகளுக்கு:
யூ.நூஹுலெப்பை [ ஆசிரியர் ] - 0773662821
எஸ்.எல்.ஹாலிதீன் [பொறியியலாளர்] -.0777006280
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -