இலங்கையில் இனப்பிரச்சினை தோன்றுவதற்கு அரசியல்வாதிகளே காரணம்.!

1931ம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு இலங்கை மக்களுக்கு வாக்குரிமையை கொடுத்தபோதுதான் அரசியல் வாதிகளுக்கு புரிந்தது மக்களின் வாக்குகளினால்தான் சட்ட சபைக்கு நாம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது.  அன்றிலிருந்து ஒவ்வொரு அரசியல் வாதிகளும், மக்களின் வாக்குகளை போட்டிபோட்டுக் கொண்டு அறுவடை செய்வதற்கும், அரசியல் களத்தில் ஜெயிப்பதற்கும், அவர்கள் பாவித்த ஆயுதம்தான், தங்களுடைய இனங்களை துவேசமான கருத்துக்களினால் சூடாக்கி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடியவிதமாகும்.

இதன் விளைவுகள் எப்படி அமையப்போகின்றதென்று, ஒரு துளிகூட கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக அவர்கள் நடந்து கொண்ட விதத்தினால்தான் தமிழ் பேசும் மக்களும், சிங்கள மக்களும் ஒருவரை ஒருவர் சந்தேக கண்கொண்டு பார்க்க துவங்கினார்கள்.

மக்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்படுவதற்கு முன் சிங்கள தலைவர்களும், தமிழ் தலைவர்களும் ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். எந்தளவு அவர்களின் ஒற்றுமை இருந்ததென்றால், தமிழ் தலைவர்களில் ஒருவரான சேர்.பொன்ராமநாதனை சிங்கள மக்களும், அதன் தலைவர்களும் தங்களது தலைவராக அன்று ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

1915ம் ஆண்டு சிங்கள தலைவர்கள் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டிருந்தபோது, அவர்களுக்காக இங்கிலாந்து சென்று கைது செய்யப்பட்ட சிங்கள தலைவர்களை மீட்டுவந்தார், அப்போது சிங்கள மக்கள் சேர்.பொன்ராமநாதனை தலையில் வைத்து சுமந்துவந்த வரலாறுகளும் நடந்திருந்தன.

ஒரு சந்தர்ப்பத்தில் டொனமூர் ஆணைக்குழு முன் அன்றய சிங்கள தலைவர்களில் ஒருவரான பண்டாரநாயக்கா அவர்கள் இலங்கைக்கு சமஸ்ட்டி ஆட்சிதான் வேண்டும் என்று கூறியபோது, சேர்.பொன்ராமநாதன் அவர்கள் அதனை மறுத்து முழு இலங்கைக்கும்தான் உரிமைவேண்டும் என்று கூறியிருந்தார்.

இப்படி ஒற்றுமையாக இருந்தவர்களுக்கு, முழு இலங்கை மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை ஆங்கில அரசாங்கம் கொடுத்தபோதுதான் ஞானமே பிறந்தது. அதன் பிறகு நாம் ஏமாந்துவிட்டோம் என்று உணர்ந்த தமிழ் தலைவர்கள், எங்களுக்கு "ஐம்பதற்கு ஐம்பது" உரிமை தரவேண்டும் என்று கேட்க துவங்கினார்கள். இதனை உரிமை போராட்டமாக தமிழ் மக்களிடம் அவர்கள் காட்டிக்கொண்டு வந்தாலும், அதற்குள் தங்களுடைய அரசியல் நலன்களைத்தான் முன்னிலைப்படுத்திக் கொண்டும் வந்தார்கள்.

அதே நேரம் சிங்கள சமூக தலைவர்கள், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை, வேறுவிதமாக சிங்கள மக்களிடம் சித்தரித்துக்கூறி, அவர்களை இனரீதியாக உசிப்பேத்தி அதன் மூலம் தங்களது அரசியல் ஆதாயத்தை அடைந்து கொள்ள முயற்சித்தார்கள். 

மறுபுறம் தமிழ் தலைவர்கள், சிங்களவர்கள் எம்மை அடிமையாக்கி விட்டார்கள் என்று கூறிக்கொண்டு, தமிழ் மக்களை சூடாக்கி அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் தமிழ் தலைவர்கள், (தமிழ் ஈழமே) நமக்கு தீர்வை பெறுவதற்கான ஒரே வழி என்றும் கூறியிருந்தனர். அதனை ஆக்ரோசமான முறையில் மேடைகளில் முழங்கி விட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின், அந்த கோரிக்கை பற்றிய முன்னெடுப்புகள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

தமிழர்களுடைய ஆயுத போராட்டத்தை, அந்த நேரத்தில் தனது அரசியல் நலனுக்கு சார்பாக பயன்படுத்தியது இந்தியா எனலாம். ஸ்ரீமாவோ அம்மையாரின் ஆட்சிகாலத்தில் தமிழர்களுடைய பிரச்சினைகளை அவ்வளவாக கண்டுகொள்ளாத இந்தியா, ஜே.ஆர் அவர்களுடைய ஆட்சியில் தமிழர்களுடைய பிரச்சினைக்கு பகிரங்கமாக ஆதரவு தெறிவித்திருந்தனர். இது தமிழர்களின் மேல் கொண்ட பாசத்தினால் அல்ல, மாறாக அமெரிக்க சார்வு கொள்கையை ஜே.ஆர்.ஆட்சி வழுகட்டாயமாக பின்பற்றியதே அதற்கு காரணம் ஆகும்.

இதனை அறிந்தும் அறியாதவர்கள் போல் தமிழ் போராளிகள், இந்தியாவை அன்போடு அரவணைத்துக் கொண்டார்கள். இந்த ஆயுத போராட்ட வடிவம் பின்னாலில் பல தமிழ் தலைவர்களையும், புத்திஜீவிகளையும் மறுலோகம் அனுப்பிய விடயங்களும் நடந்தேறின.

அதன் காரணமாக அரசியலில் அனுபவம் வாய்ந்த தமிழ் தலைவர்கள் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டியிருந்தது. அதே நேரம் சிங்கள தலைவர்களில் ஒருவரான ஜே.ஆர்.ஜேவர்த்தன அவர்கள் தன்னுடைய அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி,1978ம் ஆண்டய அரசியல் யாப்பில் பல மாற்றங்களை கொண்டுவந்தார், இனிமேல் முக்கியமான ஏதாவது அரசியல் தீர்வுகளோ, அரசியல் மாற்றங்களோ கொண்டுவருவதாக இருந்தால், பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன், மக்கள் ஆணையையும் பெறாமல் எதையும் செய்துவிட முடியாதபடி சட்டத்தை சடைந்து வைத்தார்.

இருந்தாலும் தமிழர்களுடைய போராட்டம் மிக கடுமையாக சென்ற போது, ஜே.ஆர். அவர்களினால், அன்றய பந்தோபஸ்து அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி அவர்களின் தலைமையில் பாரிய யுத்தம் ஒன்றை முன்னெடுத்தார், அதன் காரணமாக தமிழ் போராளிக் குழுக்கள் அடியோடு அழிக்கப்படும் நிலை வந்தபோதுதான், இந்தியா தலையிட்டு அதனை தடுத்தது.

போராளிக்குழுக்கள் அழிக்கப்பட்டால், இலங்கை இந்தியாவை விட்டு அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து விடும். அதனால் இந்தியாவின் பாதுகாப்புநிலை மோசமாவதற்கு அது வழிசமைத்து விடும் என்ற காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு, தமிழ் மக்களை காப்பாற்றுவதாக கூறிக்கொண்டும், மிராஜ் விமானத்தை இலங்கை வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைத்தது மட்டுமல்லாமல், உணவு பொட்டலங்களையும் போட்டுவிட்டு, இலங்கைக்கு மிக பாரதூரமான அதே நேரம் மறைமுகமான எச்சரிக்கையையும் இந்தியா இலங்கை மீது அன்று விட்டிருந்தது.

இந்த விடயத்தில் இந்தியாவின் தலையீடு சுயலாபமாக இருந்தாலும், இதன் மூலம் தமிழர்களுடைய பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்ற தமிழ் மக்களின் என்னம் புலிகளின் முரண்பாட்டால் பகல் கணவாகவே மாறியிருந்தது.

என்னதான் இருந்தாலும் இந்தியாவின் பின்னாலிருந்துதான் சிங்கள அரசாங்கத்திடமிருந்து தீர்வை பெறலாமே தவிர, மாறாக அவர்களை எதிர்த்துக் கொண்டு எந்த விடயத்தையும் சாதித்துவிட முடியாது என்று சொன்ன தமிழ் தலைவர்களையெல்லாம் புலிகள், துரோகிப் பட்டம் சூட்டி மறுலோகம் அனுப்பியிருந்தார்கள்.

உண்மையில், இந்தியாவை எதிர்க்காமல் அவர்கள் பின்னால் சென்று இனப்பிரச்சினைக்கான தீர்வைபெற முயற்சி செய்திருந்தால், பல நிலை நன்மைகளை தமிழ் மக்கள் இன்று பெற்றிருப்பார்கள். தமிழ் மக்களின் அரசியல் தீர்வை, ஜனநாயக ரீதியில் இலங்கை அரசியல் யாப்பினூடாக பெறுவதுதென்பது குதிரை கொம்பான விடயமாகும்.

ஆனால் இந்திய அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளாமல் அவர்களின் பின்னால் சென்று இலங்கை அரசாங்கத்தை கட்டுப்படுத்தி தமிழ் மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வை பெற்றிருக்கலாம்.  ஆனால் அந்த சந்தர்ப்பம் இப்போது கைநழுவி போய்விட்டதென்றே கூறலாம்.

என்னதான் இருந்தாலும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் விரும்பக்கூடிய தீர்வு திட்டம் ஜனநாயக ரீதியில் கிடைக்கப்போவதில்லை, அதற்கு சிங்கள அரசியல் வாதிகளும் துணியப்போவதுமில்லை.. சந்தர்ப்பங்களை தவற விட்டு விட்டு, நடவாத ஒன்றுக்காக காத்திருப்பது போன்றே எங்களுக்கு என்னத் தோன்றுகிறது...
எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -