திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பொறுப்புவாய்ந்த பதவி எதிலும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இல்லை. எனவே ஏதாவது பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு முஸ்லிம் உத்தியோகத்தர்களை நியமிக்க ஏற்பாடு செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். எனினும் மாவட்ட செயலகத்தில் எந்தவொரு பொறுப்பு வாய்ந்த பதவியிலும் முஸ்லிம் அதிகாரிகள் இல்லை. இது குறித்து இம்மாவட்ட முஸ்லிம் மக்களிடம் பெருங்கவலை உள்ளது.
கடந்த அரசு காலத்தில் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் கெடுபிடியினால் இச்செயலகத்தின் கீழ் கடமையாற்றிய முஸ்லிம் உத்தியோகத்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்தக் குறைபாடு நமது நல்லாட்சி அரசு காலத்தில் நிவர்த்திக்கப்பட வேண்டும் என இம் மாவட்ட முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர். இது பற்றிய தொடர் கோரிக்கைகளை அவர்கள் எனக்கு விடுத்து வருகின்றனர்.
தற்போது இச்செயலகத்தில் திவிநெகும மாவட்டப்பணிப்பாளர் பதவி வெற்றிடமாக உள்ளது. எனவே இந்தப் பதவிக்கு முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிப்பதன் மூலம் போதுமான முஸ்லிம் உத்தியோகத்தர்களை நியமிக்கும் பணியை ஆரம்பிக்குமாறு அவர் ஜனாதிபதியைக் கேட்டுள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.