வாய்ச் சுகாதாரம் என்பது மிக முக்கியமானது - இம்ரான் MP

வாய்ச் சுகாதாரம் என்பது மிக முக்கியமானது. எனவே அது பேணப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். பல் மருத்துவர்களுக்கான முன்பயிற்சி தொடர்பான திருத்தச்சட்ட மூலம் தொடர்பான விவாதம் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

பல்மருத்துவர்களுக்கு உள்ளக முன்பயிற்சியினை வழங்குவது தொடர்பான இந்தத் திருத்தச் சட்டமூலத்தை நான் வரவேற்கிறேன். ஏனெனில் பல்மருத்துவக் கற்கையை நிறைவு செய்துள்ளவர்கள் நேரடியாக மக்களிடம் அதனை செயற்படுத்த வரும் போது உருவாகும் இடர்பாடுகளைக் களைவதற்கு முறைமைப்படுத்தப்பட்ட முன்பயிற்சி அவசியமாகின்றது.

பொதுவாக கல்வித்துறையும் மருத்துவத் துறையும் சேவைத்துறைகளாகும். இவை ஏனைய துறைகளில் இருந்து மிகவும் வேறு படுகின்றன. கல்வித் துறை மாணவ உள்ளங்களை நெறிப்படுத்தி நேர் வழிகாட்ட உதவுகின்றது. அதேபோல மருத்துவத்துறை மக்களின் உடல் நோய்களை குணப்படுத்தி அவர்கள் சுகதேகிகளாக வாழ துணைபுரிகின்றது.

மருத்துவத்தேவை படித்தவர் - பாமரர் உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற வேறுபாடின்றி சகலருக்கும் தேவைப்படுகின்றது. எனவே பாதிக்கப்பட்டவரின் உண்மையான நோயைக் கண்டறிந்து சிகிச்சை செய்வதில் தான் மருத்துவத்துறையின் வெற்றி தங்கியுள்ளது. பல் மருத்துவத் துறைக்கும் இது பொருந்தும். எனவே இதற்காக முறையான முன் பயிற்சிகள் தேவைப்படுகின்றன.

“பல்லுப் போனால் சொல்லுப் போச்சு” என்று சொல்வார்கள். பல் இருக்கும் வரை தான் ஒரு மனிதனால் தெளிவாகப் பேச முடியும் என்பது இதிலிருந்து தெரிகின்றது. இதனைவிட உண்கின்ற உணவுகளை பற்கள் சரியாக அரைத்துக் கொடுத்தால் தான் சரியான சமிபாடு இடம்பெறும். சரியான சமிபாடு இடம்பெறும் சுகதேகியாக வாழ்வது உறுதிப்படுத்தப்படும்.

பற்களில் ஏற்படுகின்ற சிதைவுகள் வாய்ப்புற்று நோயை உருவாக்குவதாகக் கூட இப்போது கூறப்படுகின்றது. எனவே வாய்ச் சுகாதாரம் என்பது மிக முக்கியமானது. நாட்டு மக்களின் வாய்ச்சுகாதாரம் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்காக பல் மருத்துவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகின்றது. அந்தவகையில் இந்தத் திருத்தச்சட்டத்தின் மூலம் பல்மருத்துவத்துறையின் வினைத்திறனை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும். அதன் மூலம் பொதுமக்கள் திருப்தியான சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எமது திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டு கால பயங்கரவாதத்தின் பின் தற்போது தான் அது முன்னேற்றம் கண்டு வருகின்ற மாவட்டமாகக் காணப்படுகின்றது. யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கியிருந்த ஒரு தலைமுறையினர் ஜனநாயகத்தின் வாடையினை இப்போதுதான் நுகர ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த மாவட்டத்திலே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் அவசியமாகத் தேவைப்படுகின்றது. திருகோணமலை கந்தளாய் பொது வைத்தியசாலைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இவ்வைத்தியசாலைகளின் பல் மருத்துவப் பிரிவு சிறப்பான முறையில் இயங்கி வருகின்ற போதிலும் அங்குள்ள வசதி வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது.

கிண்ணியா மூதூர் தள வைத்தியசாலைகளில் பல் மருத்துவப் பகுதிக்கு இன்னும் வசதிகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக பாடசாலைப் பற்சிகிச்சைப் பிரிவை வலுப்படுத்த வேண்டியுள்ளது. தம்பலகமம் முள்ளிப்பொத்தானை போன்ற வைத்தியசாலைகளில் தனியான பற்சிகிச்சைப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

புல்மோட்டை, பதவிசிறிபுர, கோமரங்கடவெல, மொரவௌ, வெருகல், செருவில போன்ற பிரதேசங்கள் திருகோணமலை நகரத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. இப்பகுதிகளில் பற்சிகிச்சைக்கான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளன. அவசரத் தேவைக்கும் இம்மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே இவற்றைக் கவனத்தில் கொண்டு இங்குள்ள வைத்தியசாலைகளுக்கு தனித்தனியான பல் வைத்தியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

சம்பூர் மீள்குடியேற்றப் பிரதேசமாகும். இப்பகுதி மக்கள் தற்போது தான் மீளக் குடியேற்றப்பட்டு வருகின்றார்கள். இங்கு தற்போது தான் புதிய வைத்தியசாலையொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. எனவே இம்மக்களின் வசதி கருதி நிர்மாணிக்கப் படும் இவ்வைத்தியசாலையிலும் தனியான பற்சிகிச்சைப் பிரிவொன்றை உருவாக்க வேண்டும்.

எனது இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வைத்தியர்கள் போதாமலிருந்தால் நடமாடும் பற்சிகிச்சைப் பிரிவொன்றை திருகோணமலை மாவட்டத்தில் தாபித்து சகல கிராமப் புற வைத்தியசாலைகளிலும் பற்சிகிச்சை சிறப்பாக நடைபெற வழிசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -