வனப்பாதுகாப்பின் பெயரில் குறிவைக்கப்படுபவர்கள் யார்? YLS ஹமீட் கேள்வி

எஸ்.அஷ்ரப்கான்-
னங்கள் பாதுகாக்கப்படவேண்டும்; என்பதில் ஆட்சேபனையில்லை. ஆனால் வனப்பாதுகாப்பின் பெயரில் குறிவைக்கப்படுபவர்கள் யார்? அவர்கள் முசலி மக்களா? என்பதுதான் கேள்வியாகும். ' மீள் குடியேற்றம் செய்பவர்கள் வனத்தில் இருந்து தூரத்தே குடியமர்த்தப்பட வேண்டும்' என்ற பதம் அந்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

அண்மையில் வில்பத்து வனத்தை விரிவுபடுத்துமாறும் வனத்தில் கைவைப்பவர்களுக்கெதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

நோக்கம் இனவாதமாக இருந்தாலும் அவற்றைச் செயற்படுத்த சில காரணங்கள் தேவை. மறிச்சுக்கட்டிப் பிரதேசம் வனபரிபாலன திணைக்களத்திற்கு (Forest Department) சொந்தமானது என 2012 ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்மானி அறிவித்தல் கூறுகின்றது . மறிச்சுக்கட்டி வில்பத்து எல்லையில் இருந்து அரைக் கிலோமீற்றர் தூரத்திலேயே இருக்கின்றது . எனவே அவ்வாறு வில்பத்துவிற்கு அருகில் வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் முஸ்லிம்கள் வாழ்வது வில்பத்துவிற்கு ஆபத்தானது. எனவே வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான அக்காணியை வில்பத்தின் ஒரு பகுதியாக பிரகடனப்படுத்தி அதனை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் (wildlife department) கீழ் கொண்டுவருவது ஜனாதிபதியின் உத்தரவின் உள் நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம். அதே நேரம்3000 ஏக்கர் காணிகள் அமைச்சர் ஒருவரால் கையகப்படுத்தப் பட்டிருக்கின்றன; என்ற பலமான ஒரு குற்றச்சாட்டும் உலா வந்துகொண்டிருக்கின்றது. கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் அதில் 600 ஏக்கர் தொடர்பாக குறித்த அமைச்சரிடம்FCID இனர் விசாரணை நடாத்தியதாக ஊடகங்களில் செய்திகள் அடிபடுகின்றன. அதில் சிலவேளை ஆரம்பத் தடயங்கள் கிடைத்திருக்கலாம். எனவே அக்காணிகளை அரசுடைமையாக்குவதும் ஜனாதிபதியின் உத்தரவின் மற்றுமொரு நோக்கமாக இருக்கலாம்.

மறிச்சுக்கட்டிப் பிரதேசம் ஆண்டாண்டு காலமாக நமது மக்கள் வாழ்ந்த பூமி. ஆனால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் காரணமாக சட்டரீதியாக அந்த உரிமையை இழந்து நிற்கின்றோம். உரிமை இருந்தும் உரிமை இல்லாத ஒரு சமூகமாக நிற்கின்றோம். சிலவேளை மறிச்சுக்கட்டி இன்று தப்பினாலும் வர்த்தமானி வாபஸ்பெறப்படாதவரை என்றோ ஒரு நாள் அது பறிபோகக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இறைவன் பாதுகாக்க வேண்டும்.

இங்கு சில கேள்விகள் எழுகின்றன.

மூன்று மாவட்டங்களுக்கு இணைப்புக்குழுத் தலைவராக, சக்திவாய்ந்த அமைச்சராக இருந்தும் அவற்றையெல்லாம் சமூகத்திற்காக தூக்கிவீசிவிட்டு மைத்திரியை ஆதரிக்க வெளியில் வந்தோம் என்று அடிக்கடி பெருமையடிக்கக் கூடிய அந்தஸ்து உள்ள அமைச்சராக இருந்தும் 2012 ம் ஆண்டு குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்ட போது வனபரிபாலனத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஏன் அமைச்சர் றிசாட் பதியுதீனைக் கலந்தாலோசிக்கவில்லை என்பதும் வர்த்தமானி வெளியிடப்பட்டு சுமார் மூன்று வருடங்கள் வரை அவருக்கே அந்த வர்த்தமானி தொடர்பாக தெரிந்திருக்க வில்லை ( இது அவரே தெரிவித்தது) என்பதும் அதுவரை ஏன் G A அல்லது DS அது தொடர்பாக அமைச்சருக்கு தெரியப்படுத்தவில்லை என்பதும் அதுவரை அவரது தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதும் மறிச்சுக்கட்டி தொடர்பாக வெளியான ஒரு ஆபத்தான வர்த்தமானியைக் கூட மூன்று வருடமாக தெரிந்துகொள்ளாமல் எவ்வளவு கெட்டிதனமாக சேவை செய்திருக்கிறார் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த நல்லாட்சியில் நீங்கள் சக்தி வாய்ந்த பங்காளி என்று பெருமையடிக்கின்ற உங்களால் அந்த வர்த்மானியை ஏன் இன்னும் வாபஸ்பெறச் செய்ய முடியவில்லை.

இங்கு பொதுமக்களுக்கு சில உண்மைகளை தெளிவுபடுத்துத வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் மைத்திரிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தபோது மைத்திரி, ரணிலுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சமூகம் தொடர்பான சமூகம் தொடர்பான சில விடங்களில் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று எத்தனை தடவை நான் வலியுறுத்தினேன், என்று அவருக்கு வக்காலத்து வாங்குகின்ற சகோதரர்கள் அவரிடம் கேளுங்கள். இது தொடர்பாக கொழும்பில் உள்ள அவரது வர்த்தக நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் அவரும் நானும் மிகவும் காரசாரமான முறையில் வாக்குவாதப் படவில்லையா? என்றும் அவரிடம் கேளுங்கள். (இவற்றின் முழு விபரத்தை இன்ஷா அல்லாஹ் , எனது தொடர் கட்டுரையில் எதிர்பாருங்கள்) இறுதியாக சமூகம் தொடர்பாக ஏதாவது ஒப்பந்தம் செய்தோமா? என்றும் அவரிடம் கேளுங்கள். (அமைச்சுப் பதவி, பிரதியமைச்சர் பதவி, DCC chairman பதவி, தேசியப்பட்டியல் , எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிட அடுத்த தேர்தலில் சந்தர்ப்பம் போன்ற shopping list ஐத்தவிர)

அன்று, இந்த வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் வாங்குகின்ற விடயம், மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துதல், போன்ற பல விடயங்களை உள்வாங்கி ஒர் ஒப்பந்தம் செய்திருந்தால் இன்று மைத்திரி இவ்வாறு செய்யமுன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்திருக்க மாட்டாரா? நாம் அந்த ஒப்பந்தத்தை அவரது மேசையில் போட்டு பேசியிருக்க முடியாதா? அதற்கும் மசியவில்லை என்றால் அதனை எடுத்துக்கொண்டு சர்வதேச சமூகத்திடம் சென்றிருக்க முடியாதா? அன்று மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் பிரதேசம் என்று ஏற்றுக்கொண்டு வர்த்தமானியை வாபஸ் வாங்க உறுதியளித்து கையொப்பம் வைத்த மைத்திரி இன்று அதனை வில்பத்து' என்கின்றார், என்று ஐ நா சபைக்குச் சென்று கூறமுடியாதா? மைத்திரிக்கு தேர்தலில் ஆதரவளித்தது சரி, அதற்காக அந்த ஆதரவை ஏன் ' சும்மா அளிக்க வேண்டும்' இவற்றைத் தட்டிக்கேட்ட YLS ஹமீட் குற்றவாளி. ஆனால் இன்று நிலைமை என்ன? மறிச்சுக்கட்டி மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

உங்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. 
'ஆடு கொழுத்தால் இடையனுக்கு வாசி' என்பார்கள். அதுபோல், வில்பத்தில் யாராவது கைவைத்தால் அடித்தது 'ரேஸ்' என்று உங்களது கூலி எழுத்தாளர்களை முடுக்கி விடுகிறீர்கள். எரிகின்ற வீட்டிலும் அரசியல் செய்கின்ற அசிங்கத்தை நிறுத்துங்கள். மைத்திரியிடம் உங்களது ஐந்து MPக்களையும் அழைத்துச் சென்று உங்கள் பலத்தைக் காட்டி அந்த வர்த்தமானியை வாபஸ்பெறச் செய்யுங்கள். வில்பத்துவை எந்தத் திசையில் வேண்டுமானாலும் விஸ்தரிக்கட்டும். 25 வருடம் வேதனையைச் சுமந்து மீண்டும் தம்சொந்த மண்ணை நாடியிருக்கின்ற அந்தமக்களின் ஒரு அங்குல காணி கூட அந்த விஸ்தரிப்புக்குள் வரக்கூடாது; என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி ஜனாதிபதியிடம் கூறுங்கள். அதனை சாதித்துவிட்டு எனக்கு வாக்களித்த மக்களுக்காக இதனைச் சாதித்திருக்கின்றேன்; என்று அறிக்கை விடுங்கள் . அதைவிடுத்து ஆடை களைவது போல் பதவியைத் தூக்கி வீசுவேன், உயிரையும் தியாகம் செய்து போராடுவேன், என்று வீரவசனம் பேசுவதும் வில்பத்து பிரச்சினயா? உடனே முக நூலில் அடியாட்களை வைத்துப் போராடுவதும். போதும் இந்த வேசம் போடும் அரசியல்.

மறுமையை பயந்து கொள்ளுங்கள் . தனக்கு வாக்களித்த அவலப்பட்ட மக்களுக்காக சந்தர்ப்பம் கிடைத்தும் அவர்களது பிரச்சினை தொடர்பாக பேச, ஒரு ஒப்பந்தம் செய்ய ஆயத்தமில்லை. ஏனெனில் சமூகத்தைப் பற்றிப் பேசினால் ' கற்பகதருவான' அந்த அமைசைப் பற்றிப் பேசமுடியாது. எனவே அந்த அமைச்சைப் பற்றிப் பேசினீர்கள். பெற்றுக்கொண்டீர்கள். பாவம் சமூகம்.

அரசியலுக்காக எந்த பாவத்தையும் செய்யத் தயங்கமாட்டீர்கள்; என்பதை ' நீங்கள் கடந்த பொதுத்தேர்தலின் போது முசலியில் ஆற்றிய உரையொன்றின் ஒளிப்பதிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்க்கக் கிடைத்த போது புரிந்து கொண்டேன், அதில் ஹுனைஸ் பாரூக்கை ஏளனப்படுத்திப் பேசுகிறார்,அவ்வாறு பேசும்போது, ' நாங்கள் ஒப்பந்தம் செய்துவிட்டுத்தான் இந்தத் தேர்தலில் போட்டியிட வந்துள்ளோம். அதில் முசலியைப் பற்றியும் எழுதியிருக்கின்றோம். நாயகம் ( ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் , " ஒரு வியாபாரம் செய்வதென்றாலும் அழகிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளுங்கள்; என்று". ஆனால் ஹுனைஸ் என்ன ஒப்பந்தம் செய்து விட்டு வந்திருக்கின்றார்; என்று கேட்கின்றார்.

இதில் கவனிக்க வேண்டியவை, செய்யாத ஒப்பந்தத்தை செய்ததாக ' பொய் ' கூறுயது, அடுத்தது, செய்யாத ஒப்பந்தத்தில் முசலியைப் பற்றியும் எழுதியிருப்பதாக மகா பொய் கூறியது, இவை எல்லாவற்றையும் விட பஞ்சமா பாதகமானது, தனது பொய்யை நம்ப வைக்க அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் ( ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தியது.

அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். இனியாவது சந்தர்ப்பவாத, சுயநல, நடிப்பு அரசியலைக் கைவிடுங்கள். உங்களை நல்லவன் என்று நம்பித்தான் நீங்கள் இந்த பதிவிக்கு வர நாங்களும் பங்களிப்புச் செய்தோம். உங்களின் பாவங்கள் நாளை மறுமையில் எங்களையும் தொட்டுவிடக் கூடாது; என பிரார்த்திக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -