காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாணசபை என்பது ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரசும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இணைந்து உருவாக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜக்கியசபை. எனவே நாம் ஒருபோதும் தமிழ்மக்களை புறக்கணித்து அல்லது ஒதுக்கி எந்தவொரு பொது வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கமாட்டோம். என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகரதிட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தன்னைச்சந்தித்த கல்முனைத் தமிழர் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
அத்துடன் எதிர்வரும் மார்ச் 04ஆம் திகதி கல்முனைக்கு நேரடியாக விஜயம்செய்து கல்முனை தமிழ்மக்களைச் சந்தித்து மாகரசபையினரின் தமிழ்மக்கள் புறக்கணிப்பு விவகாரம் தொடர்பாக உரிய தீர்வுகாண்பதாகவும் உறுதியளித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனைத்தமிழர் பிரதிநிதிகளுக்குமிடையிலான ஆக்கபூர்வமான சந்திப்பு நேற்றுமுன்தினம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைச்சரின் அலுவலகத்தில் சிநேகபூர்வமாக நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரெலோ உபதலைவர் ஹென்றிமகேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது.
கல்முனைத்தமிழர்கள் சார்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்; மூத்த உறுப்பினரும் கல்முனை மாகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான எல்லைக்காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம் முன்னாள் மாகரசபை உறுப்பினர் அழகக்கோன் விஜயரெத்தினம் கல்முனையின் பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆ.வினாயகம்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு தூதுக்குழுவினர் அமைச்சரிடம் மகஜரைச் சமர்ப்பித்து பின்வரும் விடயங்களை எடுத்துரைத்தனர். கல்முனை மாகரசபை ஆட்புல எல்லைக்குள் வரும் கல்முனை தமிழ்ப்பிரதேசங்கள் திட்டமிட்டு கல்முனை மாகர சபையினரால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மாகர சபைக்கு வரிப்பணம் செலுத்தியும் அங்கு தமிழர் பிரதிநிதிகள் இருந்தும் தமிழர்பிரதேசம் அனைத்து செயற்றிட்டங்களிலும் புறக்கணிக்கப்பட்டுவருகின்றது.
குறிப்பாக வீதி அபிவிருத்தி வீதி மின்விளக்குகள் பொருத்துதல் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட சகல விடயங்களிலும் தமிழ்மக்களையும் தமிழழர் பிரதேசங்களையும் வேண்டுமென்றே மாகரசபை நிருவாகம் புறக்கணித்து வருகின்றது. உதாரணமாக கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கல்முனை பஸ் பிரதான தரிப்பு நிலையம் வரையிலான பிரதான வீதியைப்பாருங்கள். அது தமிழர் வாழும் பிரதேசம் என்பதால் மின்விளக்குகள் ஒளிர்வதில்லை. அதற்கு அப்பால் ஏனைய வீதிகளில் விடியவிடிய மின்விளக்குகள் ஒளிர்கின்றன. எனவே கட்சி அமைச்சர் என்ற வகையில் தாங்கள் இதற்கு உரிய தீர்வைப்பெற்றுத்தரவேண்டும் என்று கோரினர்.
அந்த இடத்திலேயே இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டிற்கு தொலைபேசியூடாக அமைச்சர் ஹக்கீம் பேசினார். உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார்.
தூதுக்குழுவிற்கு அமைச்சர் ஹக்கீமின் பதில்!
நீங்கள் கொழும்புவந்து இந்தப்பிரச்சினையைக் எழுத்துமூலம் தெரிவித்துள்ளீர்கள். கவலையாகவிருக்கிறது. நிச்சயம் எதிர்வரும் 04ஆம் திகதி அங்கு வந்து தமிழ் மக்களைச்சந்தித்து பிரச்சினைகளைக் கேட்டறிந்து உரிய தீர்வு காண்பேன்.நீங்கள் கவலைப்படவேண்டாம்.
கிழக்கு மாகாணசபை ஆட்சியை நாம் அமைப்பதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பூரண ஆதரவைத்தந்து பங்காளி யாகவுள்ளது. எனவே அங்குள்ள சகல வேலைத்திட்டங்களும் இனவிகிதாசாரப்படி வழங்கப்படவேண்டும். நாம் ஒருபோதும் தமிழ்மக்களை வெறுத்து அல்லது புறக்கணித்து எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கமாட்டோம்.
கல்முனை மாகரில் தமிழ்மக்களும் முஸ்லிம் மக்களும் சந்தோசமாக ஒற்றுமையாக வாழவேண்டும். அதுவே எனது 100வீத எதிர்பார்ப்பு. ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டு எதனையும்செய்துவிடமுடியாது. அது எதிரிக்குப் பலம்.எனவே நாம் ஒற்றுமைப்பட்டால் மட்டுமே சிறுபான்மையினருக்குரிய அதிகாரங்களையும் உரிமைகளையும் பெறலாம். நாம் பேசுவோம். உள்ள பிரச்சினைகளைத்தீர்த்து இருசமுகங்களும் ஒற்றுமையாக வாழ்வோம். என்றார்.