எம்.ரீ.ஹைதர் அலி-
அரசியல் என்பது பல்வேறு விடயங்களில் சாதகமாக உள்ள போதிலும் சில விடயங்களுக்கு அது தடையாக அமைந்து விடுகின்றது. ஒரு சில அரசியல் வாதிகளின் தவறுகளினால் அரசியல் வாதிகளை சமூகம் சார்ந்த பொது விடயங்கள் மற்றும் மார்க்க ரீதியான விடயங்களுக்குள் உள்வாங்குகின்ற போது அவர்கள் அரசியல் ரீதியான இலாபங்களை மையமாகக் கொண்டு செயற்படுவார்கள் என்ற ஒரு எண்ணம் சமூகத்தில் உருவாகியுள்ளது. இதனால் சில பொதுச் செயற்பாடுகளில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. என பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி சாகிரா விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கான பிரிண்டர் (Printer) மற்றும் திரையிடல் (Projector) சாதனங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் நான் இப்பாடசாலை நிருவாகம் உள்ளிட்ட பல்வேறு சமூகம் சார்ந்த பொது நிருவாகங்களில் உறுப்பினராக இருந்து பணியாற்றிய போதிலும் அரசியலில் ஈடுபட்டதற்கு பிற்பாடு அவற்றிலிருந்து வெளியேற வேண்டிய ஒரு நிலை எனக்கு ஏற்பட்டது.
நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்கு பின்னால் வந்த நான்கு கலீபாக்களும் ஆத்மீக தலைவர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் இருந்து எமது சமூகத்தை வழி நாடாத்தியிருக்கின்றார்கள். அத்தகைய ஒரு வழியை பின்பற்றி வாழ்கின்ற நாங்கள் அரசியலையும் ஆத்மீகம் சார்ந்த பொது விடயங்களையும் பிரித்துப் பார்ப்பது கவலைக்குரிய விடயமாகும்.
எனவே அரசியல் தலைவர்கள் ஆன்மீகம் மற்றும் சமூகம் சார்ந்த பொது விடயங்களில் சிறந்த பங்களிப்புக்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிலை உருவாக வேண்டும். இவ்வாறான பொது விடயங்களில் அரசியல் ரீதியான வேறுபாடுகளை மறந்து எமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி எம்மால் முடியுமான சேவைகளை செய்ய முன்வர வேண்டும்.
மேலும் இந்த பாடசாலையில் பார்வையற்ற மாணவர்களையும் உள்வாங்க வேண்டிய ஒரு தேவைப்பாடு காணப்படுகின்றது. எமது சமூகத்தை சார்ந்த பார்வையற்ற முஸ்லிம் ஆண், பெண் பிள்ளைகள் வெளி இடங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் காப்பகங்களுக்கு செல்லவேண்டிய ஒரு துரதிஸ்டமான நிலை காணப்படுகின்றது. அத்தகைய அதிகமான பாடசாலைகள் ஆண்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுவதனால் அங்கு பராமரிக்கப்படுகின்ற பெண் பிள்ளைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது. என தெரிவித்தார்.
மேலும், குறிப்பாக பார்வையற்ற பெண் பிள்ளைகளை பராமரிக்கக்கூடிய பெண்களால் நடாத்தப்படுகின்ற ஒரு நிலையமொன்றை எமது பிரதேசத்தில் அமைப்பதன் மூலம் எமது சமூகத்தை சார்ந்தவர்கள் மாத்திரமல்லாமல் ஏனைய சமூகத்தினரும் அதனூடாக பயன்பெற முடியும். எனவே அவ்வாறான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதோடு எதிர்வரும் காலங்களில் இப்பாடசாலைக்கும் இத்தகைய ஏனைய பொது நிறுவனங்களுக்கும் பல்வேறுபட்ட உதவித்திட்டங்களை பெற்றுக்கொடுக்கவும் உள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வானது சாகிரா விஷேட தேவையுடையோர் பாடசாலையின் தலைவர் பாவலர் சாந்தி முஹித்தீன் ஹாஜியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபையின் முன்னால் முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை, சாகிரா விஷேட தேவையுடையோர் பாடசாலையின் நிருவாக சபை உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.