அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளைத் தெரிவு செய்யும் போது பரீட்சை மூலமே தெரிவுகள் இடம்பெறுகின்றன. குறித்த பரீட்சைகளில் புள்ளிகளை பெற்றுக்கொள்ளாமை காரணமாகவே பலர் இன்று போராட்டத்தில் ஈடுபடும் நிலமை ஏற்பட்டிருக்கிறது' எனத் தெரிவித்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ''யாரையும் நாம் தடை செய்ய வில்லை. நிர்வாக ஒழுங்குகளை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.
அண்மையில் பரீட்சைக்குத் தோற்றி இரண்டு பாடங்களிலும் 40க்கு மேல் புள்ளிகளைப் பெற்ற 164 தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கும் 58 சிங்கள மொழி மூல ஆசிரியர்களுக்கும் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மண்டபத்தில் இன்று (20) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்;
'இந்தப் பாடசாலைக்கு வெளியில் பட்டதாரிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொடர்பாக நாம் கவலையடைகிறோம். வரலாறு தமிழ் மொழி தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழி தொழில் நுட்பம் போன்ற பாடங்களுக்கு 250 வெற்றிடங்கள் நிரப்பும் வகையில் பரீட்சைகள் நடாத்தப்பட்டன. அவற்றில் 164 பேரே தெரிவாகியுள்ளனர். வரலாறு பாடத்துக்கான 89 வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
தமிழ் மொழிக்கு 120 வெற்றிடங்கள் இருந்த நிலையில் 51 பேரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சிங்கள மொழிக்கு 20 வெற்றிடங்கள் உள்ளன. அதற்கு 6 பேரே தெரிவாகினர். தகவல் தொழில்நுட்பம் 20 பேர் வெற்றிடம் இருந்த நிலையில் அதிலும் குறைவானவர்களே தேறியுள்ளனர். 205 வெற்றிடங்களுக்கு 164 பேரே தெரிவாகியுள்ளீர்கள்.
ஆகவே யாரையும் நாம் தடை செய்ய வில்லை. நிர்வாக ஒழங்குகளை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். நிர்வாக ஒழுங்கின் அடிப்படையில் நேர்முகம் மற்றும் போட்டிப் பரீட்சைகளின் மூலமே இந்தத் தேர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் யாரையும் பாதிக்கும் நோக்கோடு நாம் நியமனங்களை வழங்கவில்லை. இந்தவிடயத்தில் நிர்வாக அதிகாரிகள் ஆளுநர் மற்றும் எமது முதலமைச்சர் உள்ளிட்ட பலர் பல்வேறு முயற்சிகளைச்செய்தே இந்த நியமனங்கள் வழங்கப்படுகிறது' என்றார்.