ஹசன் அலி பேராளர் மாநாட்டை பகிஷ்கரித்து பதவிகளை எதிர்பார்ப்பது எதிர்ப்புக்களை ஏற்படுத்தும்

ஞாயிறன்று(12.02.2017) நடந்து முடிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு மற்றும் சமகால அரசியல் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நவமணியின் தமிழ்நாட்டு செய்தியாளர் எம்.கே. சாஹுல் ஹமீதுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டி இங்கே தரப்படுகிறது.

கேள்வி: பேராளர் மாநாடு எப்படி இருந்தது?

பதில்: இம்முறை வழமைக்கு மாறாக பேராளர்கள் கூடுதலாக வருகை தந்திருந்தார்கள். கட்சியின் ஆதரவாளர்கள், பேராளர்களாக தாங்களை அழைக்காவிட்டாலும், அணி அணியாக வந்து கலந்துகொண்டார்கள். ஏதாவது குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்துகொண்டிருந்த வேளையில் பேராளர்களும், போராளிகளும் இவ்வாறாக அணி திரண்டு வருவது அதன் அடையாளமாக இருந்தது. எனவே இந்த பேராளர் மாநாடு வழமைக்கு மாறாக கட்சித் தலைமைத்துவத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது. கட்சியை பாதுகாப்பதற்கு இதனுடைய ஆளணி திரண்டு நிற்கிறது என்பதை பறைசாற்றிய பேராளர் மாநாடாக இது அமைந்தது. 

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸை பிரிப்பதற்கு யாருடைய பின்னணியில் யார் செயற்படுகிறார்கள்? 

பதில்: இலங்கை அரசியலில் எல்லா கட்சிகளிலும் பலவீனமான உள்முரண்பாடுகள் உருவாகும் காலமாக இது மாறியிருக்கிறது. இந்த நிலையில் இதனை தீர்ப்பதற்காக நாங்கள் பலவிதமான முயற்சிகளை எடுத்துவருகிறோம். ஒருசிலருடைய சுயநல நோக்கங்களினால் சுமுகமான தீர்வு என்பது இயலாமல் போயுள்ளது. இயலாத பட்சத்தில் நயவஞ்சகமாக நடந்துகொள்பவர்களுக்கு இனிமேலும் கட்சியில் இடமளிக்க முடியாது. 

ஒருசிலர் இந்த மாநாட்டுக்கு வருவதற்கு முன்பே கட்சிக்குள்ளே எந்த விடயம் பற்றியும் கதைக்காமல் வெளியே விமர்சனம் செய்யக்கூடிய அவசியம் என்ன என்பது கட்சிப் போராளிகள் மத்தியிலும், பேராளர்கள் மத்தியிலும் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. அந்த உற்சாகத்தின் பிரதிபலிப்பு தான் கட்சியின் கடைசிமட்ட கூட்டத்தில் தலைமை பரிந்துரைத்த விடயங்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

கேள்வி: ஹசன் அலிக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்குவீர்களா?

பதில்: கட்சியின் அரசியல் அதிகாரமுள்ள பதவி ஒன்றை பெறுவதாக இருந்தால் பொதுச் செயலாளர் பதவியில் இருக்க முடியாது என்ற யாப்புத் திட்டம் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை ஒரு பிரச்சினையாக்கி கட்சிக்குள்ளே இந்த உள் முரண்பாடு தோன்றுவதற்கு அவர் கட்சியின் ஒருசில உறுப்பினர்களை தூண்டி எடுத்த நடவடிக்கை தேர்தல் ஆணையாளருடன் நடந்த விசாரணையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதற்கு பிறகு அவருக்கு உரிய கௌரவத்தை கொடுத்து அவருக்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றையும் வழங்குவதற்கு நாங்கள் இணங்கியிருந்தோம். தேசிய பட்டியல் ஆசனத்தை பேராளர் மாநாட்டுக்கு முன்பு வழங்குவதற்கான முயற்சியை வேறு பிரதேசங்களில் இருந்து வந்த எதிர்ப்புகள் காரணமாக சற்று பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இந்த கட்டத்தில்தான் கட்சியின் வெற்றிடமாக இருந்த தவிசாளர் பதவியை அவருக்கு வழங்க வேண்டும். தவிசாளர் மாநாட்டில் அவர் முழுமையாக கலந்து கொண்டு உள் முரண்பாடுகளுக்கு ஒரு தீர்வு பெற்றுத்தருவதுடன் தலைமைத்துவத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வினயமாக அவர் வேண்டிக்கொல்லப்பட்டார். இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்று சொன்ன போது நாங்கள் இந்த தவிசாளர் பதவியை வெற்றிடமாக வைப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இடைநடுவிலே அவர் கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது ஒரு வேதனைக்குரிய விடயமாக இருந்தது. 

அதன் பிறகு அவருடைய இல்லத்திற்கு சென்று அவரிடத்திலே சுமுகமாக பேசி, அடுத்தநாள் பேராளர் மாநாட்டுக்கு வருவதாக அவர் உறுதி அளித்த பிறகு திரும்பவும் நள்ளிரவுக்கு பிறகு தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு பேராளர் மாநாட்டை பகிஷ்கரித்திருந்தார். இது உண்மையிலேயே துரதிஷ்டவசமான, வேதனைக்குரிய விடயம். கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பவர்களோடு தொடர்புகளை பேணிக்கொண்டு அவர்களோடு ஆலோசனை செய்து அவர் செயற்படுகிறாரா என்ற சந்தேகம் இதன் காரணமாக வலிமையடைகிறது. இந்த விடயம் கட்சியின் இருப்புக்கு பாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெளிப்படை தன்மையுடன் நாங்கள் நடந்துகொள்ள வேண்டும். இவ்வளவு வெளிப்படையாக நடந்துகொண்ட பிறகும் உடன்பாடுகளை எட்டிய பிற்பாடும் இவ்வாறான பகிஷ்கரிப்பு நடவடிக்கை என்பது இந்த விடயங்களுக்குப் பிறகும் கட்சியின் அங்கத்துவத்தில் அந்தஸ்துள்ள பதவிகளை தனக்கு வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்பது கட்சியில் பலருடைய எதிர்ப்புகளை சம்பாதிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவே அமைகிறது. எனவே இது தீர ஆலோசித்து தீர்மானித்துக்கொள்ள வேண்டிய ஒரு விடயம். 

கேள்வி: நீங்கள் பேராளர் மாநாட்டில் பேசிய போது தலைமையை விட்டுக்கொடுக்க தயார் என்று கூறியிருந்தீர்கள்? 

பதில்: இல்லை. தலைமை என்பது ஒரு முள் கிரீடம் என்று நான் நினைக்கிறேன். இது பஞ்சு மெத்தை என்று ஒருசிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். இந்த பதவியில் கட்சியின் உறுப்பினர்களும், பேராளர்களும்,தான் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற வரை தான் நான் இந்த பதவியிலே இருக்கலாம். அதே நேரம் இது ஒரு ஜனநாயக முறைமையை பேண வேண்டிய கட்சி. அந்த அடிப்படையிலே இஸ்லாமிய சூரா அடிப்படையிலான பரந்துபட்ட கட்சிக் கலந்துரையாடல்களை கட்சிக்குள்ளே நடத்தி யாப்பு ரீதியாக நாங்கள் தலைமைத்துவத்தை நடத்தி வருகிறோம். 

என்னுடைய தலைமைப் பதவிக்கும் என்னை கௌரவ ஹசன் அலி முன்மொழிந்தார் என்பது குறித்தும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். அதேநேரம் கட்சியின் எல்லா உறுப்பினர்களும் அவரிடம் வினயமாக இருப்பதோடு இந்த கட்சிக்குள் பிளவுகள் வருவதற்கு இடமளிக்காமல் அவர் வேறொரு பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்து பகிஷ்கரித்துவிட்டு போவது என்பது இன்னும் இந்த கட்சிக்குள்ளே இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வராமல், இதை ஒரு தீராத பிரச்சினையாக வைத்துக்கொண்டிருப்பதன் மூலம் தங்களுடைய சுயலாப நிர்ணயங்களை அடைய நினைக்கின்ற வெளிச் சக்திகளுக்கு துணைபோகின்ற விடயமாக மாறிவிடுகிறது. 

எனவே இந்த விடயங்களைப் பற்றி இன்னும் பச்சாதாபத்தோடு, அது குறித்த கண்ணியத்தோடும் நாங்கள் நடந்துகொள்வது என்பது தொடர்ந்தும் செய்ய முடியாத ஒரு நிலவரமாக உருவாகியிருக்கிறது. இதற்காக நான் மிகவும் வேதனைப்பட்டாலும், இது குறித்து கடும்போக்கை கடைப்பிடிக்க வேண்டிய கட்டம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன். 

கேள்வி: உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நீங்கள் வழங்கும் பதில் என்ன?

பதில்: என் மீது எந்த குற்றச்சாட்டையும் இன்றும் யாரும் வெளிப்படையாக வந்து கூறவில்லை. திரைமறைவில் இருந்துகொண்டு அநாமதேயமாக துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுக்கொண்டு, முகவரி இல்லாத புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டு இருப்பவர்கள் சம்பந்தமாக கட்சியின் போராளிகள் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இது இந்த கட்சிக்கு மட்டும் உரிய விடயமல்ல. எல்லா கட்சிக்குள்ளும், வெளியே இருக்கின்ற சில கட்சிகள் உள்ளே இருக்கின்ற ஒருவரை இலக்கு வைத்துக்கொண்டு முடிந்தவரை குழப்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் கட்சியினுடைய யாப்பு, கட்டுக்கோப்பு, கட்சியின் உறுப்பினர்களுடைய உறுதி என்பன திடமாக இருக்கின்ற போது இந்த சலசலப்புக்கு நாங்கள் அஞ்சத்தேவையில்லை. மிக நேர்மையான இந்த இயக்கத்தின் வீரியமுள்ள பயணம் தொடரும் என்பதில் யாரும் ஐயம் கொள்ள தேவையில்லை. 

கேள்வி: இந்தியாவில் கடந்த வருடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டீர்கள். இந்த வருடம் நெல்லையில் மார்ச் மாதம் மாநாடு நடைபெறுகிறது. அது குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்: கடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி கண்டதோடு அங்கு கூடியிருந்த முஸ்லிம் மக்கள் ஒன்றாக இருந்ததையிட்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன். அதேபோன்று சிறந்த மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளுக்கு விருது கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பார்க்கும் போது அதுபோன்று சிறந்த மஹல்லா ஜமாஅத் பள்ளிவாசல்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக விரைவில் விருது வழங்குவது குறித்து ஆராயப்படும். இந்த வருட மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு, இலங்கை முஸ்லிம் மக்கள் சார்பாகவும்,என்னுடைய சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளேன். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், நேர்மையான தூய்மையான நான் மதிக்கின்ற மனிதருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மத் அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகளை சந்திக்கவுள்ளேன். 

தமிழகத்தில் உள்ள திருச்சி மாநகரத்தில் ஜமால் முஹம்மத் கல்லூரிக்கு கடந்த இரண்டு ஆண்டு

களுக்கு முன்பு சென்ற போது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதாக முடிவு செய்திருந்தேன். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் இலங்கையில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக செல்ல இயலாமை ஏற்பட்டது. அதனைப் போக்க திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரிக்குச்சென்று அங்குள்ள மாணவ மாணவிகளுடன் கலந்துரையாட வேண்டும் என்று ஆசை உள்ளது. இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் உலகத்தின் பல இடங்களிலும் தொழில்புரிந்து வருகின்றனர். நான் வெளிநாடுகளுக்குச் சென்ற இடங்களில் எல்லாம் தமிழர்களை சந்திக்கும்போது நீங்கள் எங்கே கல்வி கற்றீர்கள் என்று கேட்பேன். 90 சதவீதமானோர் நான் ஜமால் முஹம்மத் கல்லூரியில் படித்த மாணவன் என்றும் அங்கு படித்ததன் மூலம் நல்ல வேலைவாய்ப்பு, கிடைத்ததாகவும், ஒவ்வொரு மாணவரையும் அந்தக் கல்லூரி நல்ல பண்புள்ள மாணவர்களாக மாற்றும் என்றும் கூறினார். ஆனால் இந்த மாணவர்கள் சொல்லும்போது அந்தக் கல்லூரிக்குச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதை நிறைவேற்ற மார்ச் மாதம் திருச்சி செல்ல இருக்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -