பிறவ்ஸ் முஹம்மட்-
நீண்டகாலமாக கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் காணிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (23) பாராளுமன்றில் விசேட சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
யுத்தத்தினாலும், இன விரிசல்களினாலும் பாதிப்புக்குள்ளான மக்களின் உரிமைக்கான எழுச்சிப் பயணம் என்ற தொனிப்பொருளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது;
கடந்த காலங்களில் காணிகளை இழந்தவர்கள், காணி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு பிரதானமாக வனபரிபாலன திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் ஆகிய மூன்று அரச திணைக்களங்களே பிரதான காரணங்களாக உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் காணிப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்காக வனபரிபாலன திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்களின் அதிகாரிகள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாகாண காணி அளுநர் மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியோரிடையே விசேட சந்திப்பொன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். எதிர்வரும் வியாழக்கிழமை (23) பாராளுமன்றத்தில் இச்சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனது தலைமையில் நடைபெறும் இச்சந்திப்பில், அந்தந்த அமைச்சுகளின் செயலாளர்கள் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இச்சந்திப்பின்போது 3 திணைக்கள அதிகாரிகளுக்கும் மக்களின் காணிப் பிரச்சினைகளை நேரடியாக எடுத்துக்கூறவுள்ளோம். பல இடங்களில், பல்வேறு வகையில் பேசிவந்த பிரச்சினைகளை, நாம் இங்கு ஒரே மேசையில் வைத்து பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்தச் சந்திப்பினால் மக்களின் காணிப் பிரச்சினைகள் பலவற்றுக்கு உடனடி தீர்வு கிடைக்குமென நம்புகிறோம்.
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கமுடியாத காணிப் பிரச்சினைகளை, தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றம் சென்றாவது தீர்த்துக்கொடுப்பதற்கு எம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம். நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை இனியும் தள்ளிப்போட முடியாது.
வில்பத்து விவகாரம் தொடர்பாக மிகத்தெளிவான அறிக்கைகளை நாங்கள் தயாரித்துள்ளோம். எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இதுதொடர்பான செயலமர்வொன்றை நடாத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வில்பத்து எல்லை விவகாரம் தொடர்பில் பொய்யான தகவல்கள் பெரும்பான்மையினர் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. வில்பத்து விவகாரத்தை விமர்சிப்பவர்களிடம் ஒன்றுதிரட்டி நேரடியாக பேசி தீர்வுகாண வேண்டும். அதைவிடுத்து, எங்களது பக்க நியாயங்களை மாத்திரம் ஊடக மாநாடுகளை நடாத்துவதன் மூலம் எதுவும் நடந்துவிடப் போவதில்லை.
வட்டமடு பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியிடம் நேரடியாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் விரைவில் அதற்கான தீர்வைப் பெற்றுத்தருவோம்.
பொத்தானை பிரதேசம் தொல்பொருளியில் திணைக்களத்தினால் அண்மையில் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து வனபரிபாலன சபை திணைக்களத்திடம் நாங்கள் பேசியபோது, அவர் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் அதற்கான தடையை ஐந்து நிமிடத்தில் நீக்கினார். எந்தப் பிரச்சினையையும் நாங்கள் முறையாக அணுகும்போது அதற்கான தீர்வை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
மனித எழுச்சி நிறுவனம், காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செயலணி ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சிவில் அமைப்பு சார்பாக அதன் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம், மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், அப்துல் றஸாக் (ஜவாத்), முஸ்லிம் காங்கிரஸ் மூத்த சிரேஷ்ட தலைவர் முழக்கம் மஜீத், மு.கா. செயலாளர் மன்சூர் ஏ. காதிர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் மற்றும் காணிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.