எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் ஆசிரியர் சேவை தரம் 3-1 க்கு நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றி வழங்கப்படவுள்ள ஆசிரிய நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் 2017.02.17 ஆந்திகதி- வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளனர்.
இவ்விடயமாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் வழங்கப்பட்டுள்ள விபரம்...
கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பாடசாலை ரீதியாக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-1 க்கு 1180 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்து பரீட்சைக்கு தோற்றிய தமிழ் மொழி மூலமான சுமார் 5750 பட்டதாரிகளில் வரலாறும் குடியுரிமைக் கல்வியும், தமிழ் மொழி, தகவல் தொழில் நுட்பம் மற்றும் இரண்டாம் மொழி சிங்களம் போன்ற பாடங்களுக்காக வெறுமனே தமிழ் மொழி மூலம் 305 பட்டதாரிகள் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர்.
சித்தியடைந்த 305 பட்டதாரிகளும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும்
இவர்களுள் 164 பட்டதாரிகளுக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சினால் 2017.02.16ஆந்திகதி - வியாழக்கிழமை தொலைபேசி மூலம் 164 பட்டதாரிகளுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மிகுந்த சர்ச்சைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப்பரீட்சைகக்குத் தோற்றிய ஏனைய 141 பட்டதாரிகளும் பரிதவிப்பில் உள்ளனர். மாகாணம் முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் கணிசமான அளவு ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றிய இவர்களுக்கு நியமனங்கள் வழங்குவதில் ஏன் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கவனம் செலுத்தவில்லை...? இது அரசியல் பழி வாங்கலா...? இன வாதத்தின் உச்ச கட்ட வெளிப்பாடா...? என பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும், 2016.08.24 ஆந்திகதி கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் தமிழ் மொழி மூலம் 305 பட்டதாரிகள் சித்தியடைந்து 252 வெற்றிடங்கள் பெயர் குறிக்கப்பட்டிருந்தது. அதில் தற்போது 164 வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு மாத்திரமே நடைபெற உள்ளது. மிகுதமாகவுள்ள வெற்றிடங்களும் நிரப்பபடாமலே உள்ளது. அதேவேளை சிங்கள மொழி மூலம் பரீட்சையில் சித்தியடைந்த 61 பட்டதாரிகளில் 58 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட உள்ளது. இதனை விகிதாசார அடிப்படையில் நோக்கும்போது 164+58 = 222 அதில் தமிழ் மொழி மூலம் 53 சதவீதமும் சிங்கள மொழி மூலம் 95 சதவீமதான பட்டதாரிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதனை பார்க்கின்றபோது கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
அத்தோடு, நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றி ஆசிரிய நியமனங்களுக்கு அழைக்கப்படாமல் பாதிக்கப்பட்ட 141 பட்டதாரிகளுக்கும் பொதுக்கலை பட்டதாரி ஆசிரிய நியமனங்களை வழங்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
எனவே தமிழ் மொழி மூலமான பட்டதாரிகளுக்கு திட்டமிட்டு அநீதியிழைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடபில் கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண முதலமைச்சர், மாகாணக் கல்வி அமைச்சர், ஏனைய அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாக இருப்பதேன்...? நல்லாட்சி அரசாங்கத்தின் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனத்தினை வழங்குவதற்கு இச்சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்த முடியாதா...? என்ற ஆதங்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். நிச்சயமாக எங்களுக்கு இதில் நியாயமானதொரு தீர்வொன்று கிடைக்குமென்றும் அதற்காக எங்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் குரல் கொடுத்து நியாயமான தீர்வொன்றினை பெற்றுத்தருவார்கள் என்ற மன தைரியத்துடன் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தேசிய கல்வியல் கல்லூரியினை நிறைவு செய்தவர்களுக்கு மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆசிரிய நியமனத்தின் போது மத்திய அரசாங்கத்துடன் போராடி உரிய ஆசிரியர்களை அவர்களின் சொந்த மாகாணமான கிழக்கு மாகாணத்திற்கு நியமிப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு தனது அரசியல் சாணக்கியத்தை நிரூபித்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் காத்திரமான பணி இந்த பட்டதாரி ஆசிரியர் நியமனத்திலும் தொடருமா என பட்டதாரிகள் முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றனர்.