இறக்காமம் மாணிக்கமடு விவகாரம்: கிழக்கு மாகாண சபையில் வாக்கு வாதம்

எம்.ஜே.எம்.சஜீத்-
றக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் எதுவித அபிவிருத்திப் பணிகளையும் மறு அறிவித்தல் வரை செய்ய வேண்டாமென அறிவிக்கப்பட்ட விடயம் குறித்து கிழக்கு மாகாண சபையில் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பேச முற்பட்ட போது அவ்விடயம் தொடர்பில் இங்கு பேச முடியாது என தவிசாளர் சந்திரதாச கலபெதி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் இன்றைய (22) அமர்வின் போதே தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில்; மாணிக்கமடு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் நிரந்தரமான கட்டிடங்களையோ, வேறுஎதுவித அபிவிருத்திப் பணிகளையும் மறு அறிவித்தல் வரை செய்ய வேண்டாமென இறக்காம பிரதேச செயலாளரினால் காணிச் சொந்தக்காரர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினைக் கண்டிப்பதுடன் இது தொடர்பான விசேட ஆணைக் குழு ஒன்றை நியமிக்க வேண்டுமெனக் கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஆரிப் சம்சுதினால் கிழக்கு மாகாண சபை தவிசாளருக்கு அவசர பிரேரணை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.

இவ்விடயம் குறித்து நேற்று (21) தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட போது தவிசாளர் சந்தரதாச கலப்பதி இது அம்பாரை மாவட்ட பிரச்சினையாக இருப்பதனால் இதனை மாவட்ட மட்டத்தில் பேசித் தீர்க்கலாம். ஆகவே, இதனை அவசரப்பிரேரணையாக எடுக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

இவ்வேளையில் எதிர்க்கட்சித் தலைவரான உதுமாலெப்பை மற்றும் மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் குழுக்களின் தலைவருமான அன்வர் ஆகியோர் இணைந்து இது முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணியாகும். கிழக்கு மாகாண காணி ஆணையாளர் இறக்காம பிரதேச செயலாளருக்கு வழங்கிய உத்தரவையே பிரதேச செயலாளர் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார். குறிப்பாக இது முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரச்சினை என்பதனால் இதனை அவரசப் பிரேரனையாக எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமரப்பிக்குமாறு தவிசாளர் கேட்டுக் கொண்டார். எனவே, இப்பிரச்சினையை அவரசப் பிரேரனையாக எடுக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (22) காலை கிழக்கு மாகாண சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கப்பதி தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் எழுந்து என்னால் சமர்ப்பிக்கப்பட்ட அவசரப்பிரேரணை எடுக்கப்படாமை மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறும் செயற்பாடாகும் என தவிசாளரைப் பார்த்துக் கூறினார்.

இதனைத் தொடந்து தவிசாளர் கூறுகையில் நேற்றும் இன்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் பேசி அவ்விடயம் சம்பந்தமாக அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண காணி அமைச்சரிடம் கோரியுள்ளோம். ஆகவே, இது தொடர்பில் நீங்கள் சபையில் பேச முடியாது தயவு செய்து அமருங்கள் எனக் கூறினார்.

இவ்வேளையில் எழுந்த கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குறுக்கிட்டு பேசுகையில் கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் மாணிக்கமடு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் எதுவித அபிவிருத்திப் பணிகளையும் செய்ய வேண்டாமென இறக்காம பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடமை நிமிர்த்தம் இறக்காம பிரதேச செயலாளர் குறித்த காணிச் சொந்தக்காரர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கிழக்கு மாகாண காணி ஆணையாளர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் எதுவித அபிவிருத்திகளையும் செய்ய முடியாது எனக் கூறியிருப்பதில் எதுவித நியாயமுமில்லை. எனவே இப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றுதான்; நாங்கள் கோரிக்கைகளை விடுக்கின்றோம். தவிசாளர் அவர்களே! நாங்கள் ஒருபோதும் இனவாதிகள் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளையே; இங்கு கூறுகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அம்பாறை மாவட்ட முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் மௌனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -