தொண்டர் ஆசிரியர் நியமனத்திற்கு இறுக்கமான சுற்றறிக்கையை தவிர்த்து, அனைவரும் உள்வாங்கப்பட வேண்டும்

அஸ்லம் எஸ்.மௌலானா-

தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனத்திற்கான கல்வித் தகைமைகள் தொடர்பில் இறுக்கமான சுற்றறிக்கையை வெளியிடாமல், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரிடம் அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர், செயலாளர் ஏ.வஹாப், திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவர் எம்.அனஸ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாய்ந்தமருதில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். 

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்;

"கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, கடந்த இருபது வருட காலமாக மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற எமது தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் கடந்த ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. எனினும் இந்த நல்லாட்சியில் எமது தொண்டர் ஆசிரியர்களின் இருண்ட வாழ்வுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது தொடக்கம் இவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டிப்பரீட்சை நடத்துவதையோ அதிகபட்ச கல்வித் தகைமைகளை கோருவதையோ விடுத்து, கிழக்கில் பணியாற்றுகின்ற 445 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் கிடைப்பதை கிழக்கு மாகாண சபை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

அதேவேளை எமது நீண்ட கால, தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கும் தீர்மானங்களை எமது தொண்டர் ஆசிரியர் சங்கம் நிறைவேற்றியுள்ளது.

அத்துடன் எமது முயற்சிகளுக்கு உறுதுணையாக செயற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்மந்தன், கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, முதலமைச்சர் நசீர் அஹமத், மாகாண கல்வி அமைச்சர் தண்டதாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர் அப்துர் ரஸ்ஸாக், மாகாணக் கல்வித் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் எம்சீ.எம்.ஷெரீப் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்" என்று குறிப்பிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -