நேற்று (21) மாலை அக்கரைப்பற்று கடற்கரைத் தென்னை வாடியில் இடம்பெற்ற ‘’சமகால அரசியல்’’ என்ற கருத்துப் பரிமாற்ற அரங்கிலும் இராப்போசனத்திலும் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கருத்துக் கூறுகையில்,
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், சீன நாட்டின் முதலீடுகள் அதிகரித்து வருவதே இவ்வாறான அரசியல் குழப்பங்களுக்குப் பிரதான காரணமாகும். புவியியல் சார் அரசியலில், இந்து சமுத்திரத்தின் ஆதிக்கம் யார் கையில் இருப்பது என்பதில் ஏற்பட்டிருக்கும் பலப்பரீட்சையே தற்போது இடம்பெற்று வருகிறது.
இதனால், எல்லா கட்சிகளுக்குள்ளும் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி, இலங்கை அரசியலின் ஸ்தீரத்தன்மையைக் இல்லாமல் செய்து, தமது காலடியில் சரணாகதியடையச் செய்வதே இதன் நோக்கமாகும்.
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித் பிரேமதாச குழுவினர், ஜாதிக ஹெல உறுமய கட்சியில் ரத்ன தேரர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுரேஷ் பிரேமசந்திரன் குழுவினர் என எல்லாக் கட்சிகளிலும் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன.
மஹிந்த தோற்று 2 வருடங்களின் பின்னர் மிக அண்மையில் சர்வதேச ஊடகவியலாளர்கள் மாநாடு நடாத்துவதற்கும், இந்த வருடத்தில் ஆட்சியைப் புரட்டுவோம் என்று பகிரங்க அறைகூவல் விடுத்ததற்கும் பின்னால் இவ்வாறான சக்தியே இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேவழியில்தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகிறன. இலங்கை முஸ்லிம்களின் பலமிக்க அரசியல் இயக்கத்தை பலவீனப்படுத்திக் கூறுபோடுவதினூடாக தமக்குத் தேவையானவற்றைச் சாதித்துக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கெனவே முஸ்லிம் காங்கிரஸினுள்ளிருந்த விலை போகக்கூடியவர்களைத் தெரிந்தெடுத்து பெரும் பொருளாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, இரண்டாம் தர இலத்திரனியல் ஊடகங்களையும், கட்டுரையாளர்களையும் தேர்ந்தெடுத்து ஊடக யுத்தமும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதன் அண்மைக்கால நிகழ்வே மாவடிப்பள்ளியில் நடந்தேறிய இராக்கால ஊடகவியலாளர் இரகசிய சந்திப்பாகும்.
அரபு / முஸ்லிம் உலகில் சக்திமிக்க தலைவர்களை இழந்து தவிக்கும் ஈராக், லிபியா, எகிப்து போன்ற நாட்டு மக்களின் தற்கால விதியை, இலங்கை முஸ்லிம்களுக்கும் வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்கத் துணை போவோர் வழிகோலுகின்றனர் என்பதே உண்மை.
இவ்வாறானவர்களை மிகச்சரியாக முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவர்களின் நோக்கத்தைத் தவிடுபொடியாக்க வேண்டும். அந்நியக் கைக்கூலிகளின் அரசியல் சதியை முறியடிக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம்களின் இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும்.