எழுக தமிழில்- முஸ்லிம்களுக்கும் தனியான சமஷ்ட்டி அலகு வழங்கப்படும் -முதல்வர் விக்னேஸ்வரன்.





ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ன்றைய நிலையில் இந்த நாட்டில் தமிழ் மொழியினை பேசுகின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் ஒன்றாக இணைந்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒன்றாக குரல் கொடுப்பதற்கும், அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவற்றினை பாதுகாப்பதற்கும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் அரசு ஈடுபட்டிருந்த வேளையில் தமது போர் யுத்திகளை முன்னெடுப்பதற்கும் இன்னும் பல்வேறு தேவைகளுக்கும், முஸ்லிம் அரசியல் கட்சிகளை தம்முடன் இணைத்து கொண்டும், அவர்களுக்கு மேலதீக அமைச்சுக்கள் என பல சலுகைகளை வழங்கி தமிழ் பேசும் மக்களிடையே பிரிவினையினை ஏற்படுத்த முயற்ச்சிக்கின்றது.

இன்று தமிழ் மக்களுக்கு எதிரான ஆயுத போராட்டம் முடிவடைந்த நிலையில் பெரும்பான்மை இனத்தின் கழுகு பார்வையை முஸ்லிம் சகோதரர்களின் பக்கம் திருப்பி முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களை உடைப்பதும், குடியேற்றங்கள் தொடர்பில் இன ரீதியான கருத்துக்களை முன்வைப்பதும், துவேச மனப்பான்மையினை வளர்ப்பதும் எதற்காக என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது.

எனது நண்பரும் தமிழ் பற்றாளருமான அமரர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் 1975ம் ஆண்டு தந்தை செல்வாவின் விசுவாசியாக இருந்துள்ளார். 1986ம் ஆண்டு பெப்ரவரி 2ம் திகதி புத்தளம் பள்ளிவாயலில் ஆறு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அன்று நாட்டில் இருந்த எந்தவொரு முஸ்லிம் தலைமைகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால் தந்தை செல்வா மாத்திரம் குறித்தவிடயம் சம்பந்தமாக எதிர்ப்பினை தெரிவித்து தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்கு வழி கோளும் காரணியாக இருந்தார்.

அது மாத்திரமல்லாமல் 1986ம் ஆண்டு பட்டுக்கோட்டை மாநாட்டில் தம்பி அஷ்ரஃப் பங்குபற்றியதாக எனக்கு ஞாபகம் இருக்கின்றது. இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் முஸ்லிம்களினுடைய அரசியல் தலைமைகள் தமிழரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியுடன் நாடாளுமன்றத்திற்கு சென்று தமிழ் முஸ்லிம் மக்களுக்கு வேறுபாடுகள் இன்றி சேவையாற்றியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் தேங்காயும் பிட்டும் போல் இரண்டர கலந்துள்ளதால் பிரிக்க முடியாது என காலம் சென்ற அஷ்ரஃப் ஆணித்தரமாக கூறியிருந்தார்.

மேலும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்று புலமையும் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். அது மட்டுமல்லாமல் இன்றும் தமிழ் மொழியினை மிகவும் நேசிப்பவர்களாகவும், தமிழ் மொழியினை மேம்படுத்துவதற்கு உழைப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். எங்களுடன் கிழக்கு முஸ்லிம் தமிழ் இளைஞர்கள் கொழும்பு கம்பன் கழகத்தில் பங்கு பற்றி தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிவருகின்ற சேவைகள் மறக்க முடியாத விடயமாக இருக்கின்றது.

ஆனால் 1980ம் ஆண்டின் நடுப்பகுதிகளின் பின்னர் துரதிஸ்ட்டவசமான சம்பவங்களும், அரசியல் வேற்றுமைகளும் இரண்டு சமூகத்துக்கிடையில் இடைவெளியினை உருவாக்கிவிட்டது. இருந்த போதிலும் உரிய திறமையான சந்தர்ப்பங்களில் இயற்கையாகவே நாம் சகோதரர்களாக மாறிவிடுவதனையும், ஒன்றுபட்டு உழைப்பதனையும் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. மேற்குறிப்பிட்ட சில சம்பவங்கள் இரண்டு சமூகங்களுக்கிடையிலும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதனை மறுக்க முடியதா விடயமாகும்.

இருந்த போதிலும் தமிழ் தாயின் பிறவிகள் என்ற வகையில் முன்னர் எவ்வாறு இரண்டு சமூகங்கமும் ஒற்றுமையினை நிலை நாட்டி இருந்தோமோ அவ்வாறே வேற்றுமைகளை களைந்து எமது உரிமைகள் ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்டு உதாசீனம் செய்யப்படுகின்ற பொழுது நாம் ஒன்று சேர்ந்து ஏகோபித்த குரலோடு எமது கோரிக்கைகளை முன்னெடுப்பதற்கும், வென்றெடுப்பதற்கும் முன் வர வேண்டும்.

தமிழ் முஸ்லிம் ஒற்றுமை முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்கள் பேரவை தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவதுடன், சகல இன பாதுகாப்பிற்காகவும் அல்லும் பகலும் பாடுபடும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம். எம்முடன் நீங்கள் அனைவரும் பிரதேசவாதங்கள், கட்சிபேதங்கள், ஆண்-பெண் பேதங்கள், இன மத பேதங்கள் இன்றி அரசின் தவறான நடவடிக்கைகளை தண்டிக்க முன் வர வேண்டும். தமிழ் பேசும் மக்களுகு ஒரே அரசியல் தீர்வாக விளங்க கூடிய சமஷ்ட்டி அரசியல் அமைப்பின் தேவையினை வழியுறுத்த வேண்டும். அதே போன்று முஸ்லிம் மக்களுக்கும் சமஷ்ட்டி அலகு வழங்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் பேரவையும் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம்.

இவ்வாறு வட மாகாண முதலமைச்சரும், ஓய்வு பெற்ற நீதியரசரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைதலைவர்களில் ஒருவருமான விக்னேஸ்வரன் இன்று மட்டக்களப்பு கல்லடியில் தமிழ் மக்கள் பேரவை கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் உணர்ச்சி பூர்வமாக நடாத்திய எழுக தமிழ் பேரணியில் உரையாற்றும்பொழுதே மேற் கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சிவலிங்கம் சோமசுந்தரத்தின் தலைமையில் இடம் பெற்ற குறித்த மட்டக்களப்பு எழுக தமிழ் பேரணியில் முக்கிய உரையாக பார்க்கப்பட் டதமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உரையானது இந்த நல்லாட்சியில் ஏற்கனவே மக்கள் எதிர்பார்த்திருந்த தீர்வுகள் தீர்க்கப்படாத சூழலில் புதிய புதிய பிரச்சனைகளும் தலைவிரித்தாடுகின்றது. ஆகவே இந்த நல்லாட்சி அரசு வெறும் வெற்றுப்பேசுக்களையும், கால இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்ளாமல் எமது மக்கள் எதிர்பார்க்கின்ற நிரந்தரமான தீர்வினை உடனடியாக வழங்க வேண்டும்.

வடகிழக்கு இணைப்பு என்ற உடன்பாட்டிலே நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இந்த நல்லாட்சியிலே கடந்த அரசாங்கத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கு நியாயம் வேண்டி இன்று ஊடகவியலாளர்கள் வீதிக்கு இறங்கி போராடுகின்றார்கள். எங்களினுடைய மக்களினுடைய பூர்வீக காணிகள் அபகரிக்கப்படுகின்றன. மட்டக்களப்பிலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகளும் இயற்கை வளங்களும் அழிகப்பட்டுகின்றது. எமது பண்ணையாளர்கள் வாழ்வா, சாவா என வீதிக்கு வந்து போராடி கொண்டிருப்பதனை நாங்கள் பார்க்கின்றோம்.

ஆகவே இன்று ஊடகவியலாளர்கள், பண்ணையாளர்கள், காணாமல்போன உறவுகள், பாடசாலை மாணவர்கள் என வடகிழக்கிலே எங்கு பார்த்தாலும் கவனயீர்ப்பு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களுமாகத்தான் இருக்கின்றது. வடகிழக்கில் தமிழ் மக்களினுடைய மேற்கூறிய உரிமை போராட்டங்களை பார்த்து இது அரசியல் தீர்வினை குளப்புகின்ற விடயம் என முத்திரை குத்துவதற்கு எத்தனிக்கின்றனர். இதற்கு தமிழ் தேசிய தலைவர்களும் ஆதரவளிக்கின்ற நிலைமையும்காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த எழுக தமிழ் நிகழ்ச்சியினூடாக நான் கூறிக்கொள்ள விரும்புவதானது- இன்று தென்னிலங்கையில் இடம் பெறும் போராட்டமானது தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஸவும் அவருடைய சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான போராட்டமாகும்.

ஆனால் மறு புறத்திலே எமது அழிக்கப்பட்ட, ஒழிக்கப்பட்ட, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு தேவையான, நீதியான, நியாயமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்கான போரட்டமே வடகிழக்கில் இடம் பெறுகின்ற தமிழ் மக்கள் மேற்கொள்கின்ற போராட்டமாகும். ஆகவே தென்னிலங்கையில் இடம் பெறுகின்ற போராட்டங்களை வடகிழக்கில் இடம் பெறுகின்ற போராட்டங்களுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என உணர்ச்சி பொங்க உரையாற்றியமையானது குழுமியிருந்த ஊடகவியலாளர்களினதும், மக்களினதும் கவனத்தினை ஈர்த்த விடயமாக பார்க்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவர்களில் ஒருவரும், நீண்டகாலமாக மட்டக்களப்பு பிராந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக கடமையாற்றிவரும் வசந்தராஜா உறையாற்றுகையில்- இலங்கை தீவின் வடகிழக்கு பிராந்தியம் தமிழர்களின் பூர்வீக தாயக பூமியாகும். மாறி மாறி ஆட்சியமைத்த சிறீலங்கா அரசாங்கங்கள்- குறிப்பாக கிழக்கினை இலக்கு வைத்து மேற்கொண்டு வரும் திட்டமிட்ட பெளத்த சிங்கள மயமாக்களினூடாக தமிழ் மக்களின் நிலத்தினையும், பொருளாதாரத்தினையும், பண்பாட்டையும், மொழியையும் அழித்து வருகின்றன.

அத்தோடு எல்லாவற்றுக்கும் உச்சமாக- தமிழ் தேசத்தை சிங்கள மயமாக்கி அதன் அடையாளத்தினையும் கூட்டிருப்பையும் சிதைத்து வருகின்றன. இது தொடர்ச்சியாக அரங்கேற்றபடும் ஒரு நீண்ட வரலாற்று பின்னணியில் தமிழர் தேசம் காக்கப்படுமாயின் தமிழினத்தின் நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு, அதன் தனித்துவமான அடையாளம் என்பன ஒட்டு மொத்தமாக ஒரேயடியாக காக்கப்பட வேண்டும் என்பதே இந்த பேரணியின் தீர்மானமாகும்.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் எமது இனத்தின் சமூக – பொருளாதார – அரசியல் தனித்துவம் காக்கப்பட வேண்டுமாயின் கிழக்கின் தமிழர்களாகிய நாம் எம்மிலிருந்து வடக்கு பிரிக்கப்படாதவாறான சமஷ்டி முறையிலான- சுயாட்சி அலகு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதையும், இந்த நிலைப்பாடு விட்டுக்கொடுப்பிற்கு அப்பாற்பட்டது என்பதையும்- மட்டக்களப்பில் நடைபெறும் இந்த எழுக தமிழ் பேரணியின் ஊடாக குறிப்பாகவும், திட்டவட்டமாகவும் பிரகடனப்படுத்துகின்றோம் என தெரிவித்தார்.



பெரும் மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் உணர்ச்சி பூர்வமாக இடம் பெற்ற குறித்த மட்டக்களப்பு எழுக தமிழ் பேரணியில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், புளொட் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் சுரேஸ் பிரேமசந்ர, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம், வைத்திய காலாநிதி சிற்றம்பலம் ஆகியோர் நிகழ்த்திய உணர்ச்சி பூர்வமான உரையின் விரிவான காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -