மட்டக்களப்பில் இடம்பெற்ற எழுக தமிழ் பிரகடனம் -வடமாகாண முதலமைச்சர்




ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

ரசு நினைத்தால் ஒருவர் பயங்கரவாதி, இல்லையேல் அவர் ஒரு சாதாரண குற்றவாளி.  என வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்ட பின்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து பேருரையாற்றி அவர்ளூ
உறங்குபவர்கள் போல பாசாங்கு செய்பவர்களை உசுப்பி உழுப்புவதே இந்த எழுக தமிழின் நோக்கம்.

பச்சத்தண்ணி கொண்டு முகத்தில் தெளித்தால் அவர்கள் எழும்பக் கூடும், எங்கள் நடவடிக்கைகள் பிழை என்றும் நாட்டின் இயல்பு நிலையைக் குழப்புகின்றோம் என்றும் எங்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது.
நாங்கள் வாய் பேசாது மௌனிகளாக இருந்தால் அல்லது பெரும்பான்மையினரின் விடயங்களுக்கு ஒத்தூதினால் எங்களுக்கு நற்சாட்சிப் பத்திரம் கிடைக்கும்.

துணிந்து நின்று  எமது பிரச்சினைகளைக் கூறினால் அது எமது ஒற்றுமையைச் சீர் குலைக்கும் செயல்கள் என்று கூறுகின்றார்கள்.
ஆக மொத்தம் எமக்கு எது தேவை என்பதிலும் பார்க்க தாங்கள் எதை விரும்புகிறார்களோ அதுவே எங்களுக்குத் தரப்படும் என்பதிலே குறியாக இருக்கின்றார்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்.
இன்னும் சில காலம் போனால் எங்களைப் பயங்கரவாதிகள் என்றும் கூறிவிடுவார்கள்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் அமுலில் இருந்து வருகின்றது. அதில் ஒரு அம்சம் பற்றி நான் தெளிவு படுத்துவது நன்மை பயக்கும் என நினைக்கின்றேன்.

ஒருவரை கொல்வது அல்லது அடித்துத் துன்புறுத்துவது எங்களது குற்றவியல் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் குற்றமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குற்றச் செயலை இனங்கண்டு குற்றச் செயலாக அல்லது பயங்கரவாதச் செயலாக நிர்ணயிப்பதற்கு அடிப்படை வரையறைகள் எவையும் சட்டத்தில் கூறப்படவில்லை.
இதனை, அரசு அரசு அதிகாரிகள் பொலிஸார் இராணுவத்தினர்தான் தீர்மானிக்கின்றார்கள்.

இங்குதான் எம்மக்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றார்கள்.

அரசு நினைத்தால் ஒருவர் பயங்கரவாதி, இல்லையேல் அவர் ஒரு சாதாரண குற்றவாளி. முன்னர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றங்காணப்பட்ட ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாரேயானால் அவை எவ்வாறு அடையாப்படுத்தப்பட வேண்டும் என்றோ அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே பயங்கராவத தடைச்சட்டத்தின் கீழ் ஒருவருக்கு குற்றப்பத்திரிகை தயாரிக்கலாமென்றோ சட்டத்தில் கூறப்படவில்லை.

அரசின் சாட்சிகள் ஒருவரைப் பய்ஙகரவாதி என்று அடையாளப்படுத்தினால் அதனை நீதி மன்றங்கள் ஏற்றுக் கொள்கின்றன.

குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் மற்றைய வழக்குகளில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அதை மட்டும் வைத்து இளைஞர்கள் யுவதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.
குற்ற ஒப்புதல் கூறும் குற்றமானது உண்மையில் நடந்தேறியதா என்பதைக் கூட நீதிமன்றங்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அவ்வாறு அறிந்து கொள்ள நீதிமன்றங்கள் சிரத்தை எடுப்பதுமில்லை. அவ்வாறான ஏற்பாடுகள் சட்டத்திலும் இல்லை. இவை என்னுடைய பலவருட நீதித் துறை சார்ந்த அனுபவங்கள்.

இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் ஆட்சியாளர்களின் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகள்.
அன்று வெள்ளையனே வெளியேறு என்றவர்கள் வெள்ளையன் வெளியேறியதும், அவர்கள் வெள்ளையனின் பார்வையில் துரோகிகளாகவும் சிங்கள மக்களின் பார்வையில் வீரபுருஷர்களாகவும் ஆனார்கள்.

இப்பொழுது எங்களைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கும் எமது சிங்கள சகோதரர்கள் எமது உரிமைகளுக்காக நாம் குரல் கொடுப்பது குற்றச் செயல் அல்ல அது தேசத்துரோகமரல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் எங்கள் இராணுவத்தை வடக்கு கிழக்கில் நிறுத்தியுள்ளோம், பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுலில் வைத்திருக்கின்றோம், 6வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தையும் தொடர்ந்து அமுலில் வைத்திருக்கின்றோம், பன்நாட்டு அரசாங்கங்களின் பரிந்துரைகளைப் பெற்றுள்ளோம், இவ்வாறிருக்கும்போது நீங்கள் உங்கள் உரிமைகளைக் கேட்கின்றீர்கள் என்றால் நீங்கள் பயங்கரவாதிகள் அல்லாமல் வேறு யார் என்றுதான் தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது.

உரிமைகள் அற்றவர்கள்தான் உரிமைகளையும் உரித்துக்களையும் கேட்பார்கள்.

எமக்கான உரிமைக்ள இருந்திருந்தால் ஏன் வெய்யிலில் கருகி குளிரில் கொடுகி மழையில் நனைந்து போராட வேண்டும். அவை இல்லாதததால்தான் இந்தப் போராட்டம்.

இதளை சிங்கள சகோதர சகோதரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடுமையான சட்டங்களாலும் இராணுவப் பிரசன்னங்களாலும் அரசியல் யாப்பு அனுசரணைகளுடனும் உரிமை மறுப்பைச்  சாதித்து வந்துள்ளார்கள்.
சர்வதேச பிரசன்னம், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெகுஜன ஊடகங்கள் எவருடைய பிரசன்னங்களும் இல்லாது இறுதிப்போர் சர்வதேசப் போர் விதிகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை சிங்கள மக்கள் உட்பட முழு உலகுமே அறியும்.

இறுதி யுத்தத்திலே விடுதலைப் புலிகள் மட்டுமல்ல சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் பெருவாரியாகக் கொல்லப்பட்டார்கள்.

கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை எந்த வித மனச்சாட்சியும் இல்லாது மிக சொற்ப தொகையாக திரிவுபடுத்தப்பட்டு சர்வதேசத்தி;ற்கு எடுத்துக் காட்டப்பட்டது.

இதனால் விளைந்ததுதான் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை முன்மொழிவு.

இதனை சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைந்து ஏற்றுக் கொண்டார்கள்.
இருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் ஒன்றரை வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் ஒன்றும் செய்யவில்லை.
கேப்பாப்பிலவில் காடடர்ந்த நிலங்களை ஏக்கர் ஏக்கராக கையகப் படுத்தி வைத்திருக்கின்றனர் படையினர்.

அவற்றிலே மக்களின் உறுதிக் காணிகளும் அடங்குகின்றன.
மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று குடியமர்வத்கு முப்படையினரும் தடையாக உள்ளார்கள்.
இதனை மக்கள் எதிர்த்தால் துன்புறுத்தப்படுகின்றார்கள்.
ஏன் இப்படி என்று கேட்டால் அது பாதுகாப்பு ஏற்பாடு என்கின்றார்கள். யாரின் பாதுகாப்புக்காக இந்த அடாவடித்தனம் ? எங்கள் பாதுகாப்பா உங்கள் பாதுகாப்பா அல்லது அரசியல்வாதிகளின் பாதுகாப்பா என்று கேட்டால் அதற்குப் பதிலில்லை.

எங்களுக்கு உங்கள் பாதுகாப்புத் தேவையில்லை என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றோம்.
போதிய பொலிஸார் இருந்தால் அவர்கள் பாதுகாப்புக்கு அவர்கள் பொறுப்பாக இருப்பார்கள் என்று கூறினால் அவர்கள் செவிசாய்க்கின்றார்கள் இல்லை.
அவர்கள் கையகப் படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளின் விஸ்தீரணங்களைப் பார்த்தால் இன்னும் 500 அல்லது 600 வருடங்களுக்கு அவர்கள் இங்கு நிலைகொண்டிருக்கப்போகின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.'

இந்த இரண்டு வருட காலத்தில் ஒரு துரும்புகூட நகர்த்தாத அரசாங்கம் வருகின்ற மார்ச் மாதம் ஐநா மனித உரிமைப் பேரவையில் ஏற்கெனவே கூறியது போன்று இன்னும் இரண்டு வருடம் கால அவகாசத்தை கேட்டவிருக்கின்றது. இந்த அரசாங்கத்தால் நிச்சயமாக எதனையும் செய்ய முடியாது. எங்களுக்குத் தேவை சர்வதேச விசாரணையே தவிர இந்த அரசாங்கத்திலிருந்து ஒரு துரும்பளவும் நீதியைக் கூட நாங்கள் எதிர்பார்க்க முடியாது என்பதை முதலில் எங்களது தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த எழுக தமிழுக்காக வெயிலுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டிருக்கின்றீர்கள் ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த எழுக தமிழ் பேரணி நடக்கக் கூடாது என்பதற்காக முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலபேர் வேலை செய்தார்கள்.

பொலிஸ் நிலையம் சென்று கூட தடை செய்ய வேண்டும் என அறிவித்தார்கள், ஆனால் இவ்வளவு தடைகளையும் உடைத்து பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வந்திருக்கின்றீர்கள் என்றால்  நிச்சயமாக தமிழ் மக்களினுடைய இரத்தத்திலிருந்து பிரிக்க முடியாத உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவே தவிர வேறு காரணத்திற்கு அல்ல என்பதை இந்த குறுகிய அரசியல் இலாபத்திற்காக சிந்திக்கக் கூடியவர்கள் இனிமேலாவது இதை புரிந்து கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் கூட இது நடந்தது இதை குழப்ப வேண்டும் என்று சில பேர் மூக்குடைபட்டார்கள். இங்கும் அது நடைபெற்றது அவர்கள் இப்போது மூக்கு உடைபட்டிருக்கிறார்கள்.

ஆகவே இன்னுமொரு தடவை இவ்வாறான தவறான கருத்துக்களுக்கும் சிந்தனைகளுக்கும் இங்குள்ளவர்கள் இடம்கொடுக்கக் கூடாது என்பதனை உங்கள் சார்பாக நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
அன்று 2015ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையில் யுத்தக் குற்ற விசாரணை,சர்வதேவ நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நீதிப் பொறிமுறையை உருவாக்கி இங்கு ஒரு பொறுப்புக் கூறல் இடம்பெற வேண்டும் பன்பது பற்றிய விடயங்கள் கூறப்பட்டது. இதற்கு இலங்கை அரசுக்கு 2017 மார்ச் மாதம் வரை  இரண்டு வருடங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

அவர்களுடன் இணைந்து செயற்படுவதனூடான இரண்டு வருடத்தில் அவர்களால் எதனையும் சாதிக்க முடியவில்லை. என்பதையும் எமது தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -