நாளை நடந்தேறப்போகும் சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலில் எம்மை காவு கொடுக்கப் போகிறார்கள்.
மீளவும் காடு வெட்டி வயல்வெளிகளில் மாடாய் உழைத்த என் உறவுகளின் காதுகளுக்கு இந்த செய்தி போய் சேரட்டும். LLRC கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவினால் என்னால் வட்டமடு விவசாயம் நிலம் தொடர்பில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக 2011.02.09. திகதி ஓர் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். நான் அதற்க்கு முன், இது தொடர்பில் நிறைய அரசியல் குளறுபடிகள் வட்டமடு தொடர்பில் எமக்குண்டு. வரலாற்று தேவையின் நிமித்தம் பேச வேண்டி இருக்கிறது.
2008 வட்டமடு விவசாயிகளின் நிலம் தொடர்பில் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணைகளின் பிரகாரம் விவசாயிகளுக்கு சாதகமான தீர்வு வழங்கப்படுகிறது. மேய்ச்சல் தரை தொடர்பில் தமிழ் சகோதரர்களே பேசினார்கள். நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் விவசாய நடவடிக்கைக்கு சென்ற தம்பி போடியாரும் ஹயாத்து முகம்மது பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். நீதிமன்ற தீர்ப்பை தமிழ் போராளிகள் அவமதிக்கிறார்கள்.
அவ்வாறு 2008 காலப்பகுதியிலிருந்து நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக நடந்து கொண்ட மேய்ச்சல் தரை வேண்டி நிற்பவர்களும் பயங்கரவாதிகளுமே வன்முறையாளர்கள். (இவ்வாறு கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுக்கு என்னால் சமர்பிக்கப்பட்ட 2011.01.30 திகதி அவர்களால் கருத்தில் கொள்ளப்பட்ட ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளேன். இது இழப்பீட்டு ஆய்வு மையத்தின் செயலாளர் என்கிற ரீதியில் அரசியல் நடவடிக்கைகளுக்கு வருவதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்டது) இது ஒரு புறமிருக்க,
எமது மூதாதையர் காடு வெட்டி விவசாய நிலமாக பல ஆண்டுகள் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்திய வட்டமடு விவசாயிகளுக்குரியதாக இருந்தாலும் இங்கு அரச திணைக்களகங்களின் மேலதிக ஆதிக்கத்தாலும் இனவாத விளிம்பு நிலை செயற்பாடுகளுமே வட்டமடு விவசாயிகளின் இன்றைய அவல நிலைக்கு காரணமாகும். விவசாய நிலத்தை கோரி நிற்போர்களின் நிலையும் அவர்களது எதிர் பார்ப்பதும் நியாயமானதாகவும் அவர்களின் நிலமென உறுப்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய காலகட்டத்தில் இதற்கான மாற்றுவழிகள் இல்லாத பட்சத்தில்தான் போராடுகிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. நல்லாட்சியை நம்பிய வட்டமடு விவசாயிகள் அரசியல் தலைமையொன்றின் பின்னால் எத்தனை தடவைகள் கிடையாக கிடந்தார்கள் ஒரு தரமேனும் இது தொடர்பில் கரிசணை கொண்டார்களா..?
அதற்கு முன்னர் நல்லாட்சியை உருவாக்குவதில் முக்கிய பங்குதாரர்களாக இருக்கின்ற தமிழ் தேசியம் இது தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது? ஆட்சியை உருவாக்கி பதவிகளுக்கு சோரம் போகாமல் அம்மக்களின் உரிமையில் மாத்திரம் கரிசணை கொண்டிருக்கும் தமிழ் தேசியத்துக்கு முன்னால் நல்லாட்சியை உருவாக்கும் முன்னரும் உருவான பின்னரும் தமது சுய நல பதவி நிலை அரசியலை முன்னெடுத்த தலைவர்கள் ஏதும் பேசத்தான் முடியுமா?
குறைந்த பட்சம் முஸ்லீம்கள் தொடர்பில் கரிசணையோடு நடந்து கொள்ளும் பா.உ.சுமந்திரன் ஐயாவுடனாவது இது தொடர்பில் பேசி இருப்பார்களா? முஸ்லீம்கள் விடயமாக மட்டக்களப்பு ஈஸ்ட்லகூனில் சுமந்திரன் ஐயாவை கூட்டி பேசத் தெரிந்த நமக்கு வட்டமடு தொடர்பில் பேச மறந்தது ஏன்..? (அது தொடர்பில் பேசவும் சர்வதேச தரகர்களின் பின்புலம் அவசியமா...?)
இது இரண்டு தரப்புக்கள் பேசி தீர்க்க வேண்டிய விடயம். பயந்து கொள்வதற்கு இங்கு யாரும் பயங்கரவாதிகள் இல்லையே..? ஏன் பேச மறுக்கிறீர்கள். நல்லாட்சியை உருவாக்கியது மக்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகதான் என்றால் ஜனாதிபதியுடன் இது தொடர்பாக அரைநிமிடமேனும் பேசி இருப்பார்களா? மாநாட்டுக்கு அழைத்து வந்த உங்களுக்கு ஏன் மக்கள் குறையை பேச முடியாமல் போனது..?
அதாஉல்லாவை தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு உங்களை நம்பி வந்த சனம் அல்லவா..? ஏன் பேச முடியவில்லை இன்று வீதிகளில் நிற்கிறார்கள் எதற்காக..?
சம்பள உயர்வு வேண்டியா..?
தேசிய பட்டியல் கோரியா...?
இல்லை.
தமது நிலத்தை தாமே ஆள வேண்டும் என்பதற்க்காக அது அவர்களின் உரிமை
வட,கிழக்கை இணைத்து எமக்கான நிலத்தை தர வேண்டுமென்று தமிழ் தரப்பு கூறுகிற போது இந்த வட்டமடு காணியை அவர்களிடம் பேசியே நியாயமாக பெற்றுக் கொள்ளலாம்தானே? ஏன் முடியாது..? வட்டமடு அல்ல எமது ஒரு துண்டு நிலத்தையும் விட நாம் தயாரில்லை. புட்டம்பையையும் சேர்த்துதான் சொல்கிறோம்.
தலைவர்கள் சுய நலன்களுக்காக சமுகத்தின் உரிமைகளை அடகு வைத்தது 2002 உடன் முடிந்த கதை. இனி இயலாது போகும் அணைத்து துறையிலும் தேர்ச்சி பெற்ற விற்பன்னர்களை சமூகம் கொண்டிருக்கிறது. உங்களால் முடியாது போனால் உங்களை மாற்றும் சக்தி சமூகத்திடம் உண்டு. மீண்டும் பிற்படுத்தப்பட்ட நீதிகோருகின்ற LLRC யின் அடிப்படையில் செல்வதாக இருந்தால் இந்த அரசியல் அதிகாரம் நல்லாட்சி என்பன மக்களுக்கு நன்மை அளிக்க போவதில்லையா..? என்கின்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.