எதிர் வரும் மாகாண சபை தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்குடா தொகுதியில் இருந்து தேர்தலில் குதிக்க இருக்கின்ற வேட்பாளர்கள் யார்? என்பதனை தீர்மானிக்கும் விடயத்தில் கல்குடா பிரதேசத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அமைப்பாளரும், கல்குடா மக்களும், தேசிய தலைவர் ஆகிய மூன்று தரப்பினருமே இறுதி தீர்மானங்களை எடுப்பவர்களாக இருக்கின்றார்கள். இதில் வெளியூர் அரசியல் வாதிகளோ அல்லது வேறு நபர்களோ கல்குடா வேட்பாளர்களை தீர்மானிக்கின்ற விடயத்தில் தலையிடவோ அனுமதிக்கப்படவோ மாட்டார்கள்.
ஆகவே மக்களிடம் மசூறா அடிப்படையில் கலந்தாலோசிக்கப்பட்டு அதன் சாராம்சம் கட்சியின் தலைமையிடம் என்னால் எத்திவைக்கப்பட்டு அதற்கு பிற்பாடே கல்குடா பிரதேசத்திலிருந்து மாகாண சபை தேர்தலில் யாரை களமிறக்குவது என்ற தீர்மானம் எடுக்கப்படும். ஆகவே வேறு எவராவது வந்து மூக்கை நுளைப்பார்கள் அல்லது குட்டையை குளப்புவார்கள் என்ற விடயத்தில் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. என்ற கருத்தினை வருகின்ற மாகாண சபை தேர்தலில் யாருடைய தலைமையில் கல்குடாவை பிரதி நிதித்துவ படுத்தி வேட்பாளர்கள் களமிறக்கப்பட இருக்கின்றார்கள்? அல்லது முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினுடைய ஆலோசனையின் அடிப்படையிலே கல்குடாவிற்கான வேட்பாளர்கள் களமிறக்கப்பட இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வரும் விடயம் சம்பந்தமாக உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கே கல்குடா தொகுதியின் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான கணக்கறிஞர் றியாழ் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மேலும் தனது கருத்தினை தெரிவித்த கணக்கறிஞர் றியாழ்…மாகாண சபை தேர்தலினை நோக்குகின்ற பொழுது கல்குடா பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதிகாரமிக்க அரசியல்வாதிகள் விரல் விட்டு எண்ணுவதற்கும் இல்லை என்ற காரணத்தினால் ஏனையோர் கல்குடா அரசியலில் மீன் பிடிக்க முயற்சிப்பதானது சர்வசாதாரண விடயமாக இருந்து கொண்டிருக்கின்றது. அதனை நாம் ஒரேயடியாக இல்லாதொழிக்கவும் முடியாது. ஆனால் முதலமைச்சரை பொறுத்தமட்டில் பாரிய அதிகாரத்தினை கையில் வைத்து கொண்டிருக்கின்றார். உள்ளூரில் அரசியலினை மேற்கொண்டு வரும் நபர்கள் முதலமைச்சரை அணுகி செல்வது தவிர்க்க முடியாத யதார்த்தமாகவே இருக்கின்றது.
செல்வாக்கினை பொறுத்தமட்டில் கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை கட்டி எழுப்புவதாக இருந்தால் கல்குடா மகன் ஒருவனினால் முடியுமே தவிர.. வேறு எவராலும் அதனை சாதிக்க முடியாது என்பதே எனது கருத்தாகும். கல்குடாவினை பொறுத்தமட்டில் மக்களை அவ்வாறே அரசியல்வாதிகள் பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். எனவே கடந்தகால அரசியல் மனக்கசப்புக்கள், அனுபவங்கள் போன்றவற்றினால் மக்களிடம் உருவாகியுள்ள மன நிலையாகவே இதனை நான் பார்க்கின்றேன். என தெரிவித்தார்.
அத்தோடு உயர் பீட உறுப்பினரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளான..
கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் நீங்கள் கல்குடாவிற்கு இம்முறை விஜயம் செய்துள்ளதாக பேசப்படும் விடயம் சம்பந்தமாக உங்களின் கருத்து என்ன?
அண்மையில் ஓட்டமாவடி பிரதேச சபையில் இடம் பெற்ற குடி நீர் சம்பந்தமான நிகழ்வில் முதலமைச்சர் உங்களை விழித்து உரையாற்றியதுடன் எல்லோரும் மாவட்டத்தில் ஒற்றுமைப்பட்டு அரசியலினை மேற்கொள்ள வேண்டும் என்ற அழைப்பினை விடுத்திருந்தார் அது சம்பந்தமாக நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள்?
கல்குடாவிற்கான குடிநீர் சம்பந்தமாக அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்ற நீங்கள் பிரதேச சபையில் இடம் பெற்ற குறித்த குடி நீர் சம்பந்தமான நிகழ்வில் கலந்திராத நிலையில் உங்களின் நிலைப்பாடு என்ன? உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லையா?
கல்குடாவில் அதிகமான விழாக்களிலும், நிகழ்வுகளிலும் உங்கள் கட்சியினை சார்ந்த அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் அதே இடத்தில் நீங்கள் கலந்துகொள்ளாமைக்கான காரணமும் அதே போல் வெளியூர்களிலே இடம் பெறுகின்ற முக்கிய நிகழ்வுகளுக்கு நீங்கள் அழைக்கப்படாமைக்கான காரணம் என்ன?
கல்குடா சார்பில் ADP.றியாஸ், சாட்டோ மன்சூர், சேகு அலி, இஸ்மாயில் ஹாஜியார், ஹாமிட் மெளலவி, நெளாசாட் ஆசிரியர் போன்றவர்களின் பெயர்கள் வருகின்ற மாகாண சபை தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக பேசபடுகின்றது. அப்படி என்றால் இவர்களில் யார் வேட்பாளர்களாக களமிறங்க இருக்கின்றார்கள்?
இவ்வாறு பலர் வேட்பாளர் பெயர் பட்டியலில் தங்களை புகுத்திக்கொள்வதற்கு முற்படுகின்ற நிலையில் கட்சியின் தலைமை உங்களை சிபார்சு செய்து மாகாண சபை வேட்பாளராக களமிறங்குமாறு கூறினால் உங்களுடைய முடிவு எவ்வாறு இருக்கும்?
1400 மில்லியன் செலவில் கல்குடாவில் ஆரம்பிக்கப்பட உள்ள குடி நீர் விநியோகத்திட்டத்திற்கு உங்களுடைய காய் நகர்த்தல்களும், பங்கும் எந்தளவில் இருந்தது?! மேலும் இருக்க போகின்றது?
பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு கல்குடாவில் பிரதி அமைச்சர் அமீர் அலி, மற்றும் முதலமைச்சர் நசீர் அஹமட், ஷிப்லி பாரூக், அலிஷாஹிர் மெளலானா போன்றவர்கள் மேற்கொள்ளும் அபிவிருத்திகளுடன் ஒப்பிடுகின்ற பொழுது நீங்கள் களமிறக்க இருக்கும் வேட்பாளர்களின் அல்லது நீங்கள் களமிறங்கினால் உங்களுடைய வெற்றி வாய்ப்பில் தற்பொழுது உங்களுக்கு கல்குடாவில் இருக்கின்ற செல்வாக்கு எவ்வகையான தாக்கத்தினை செலுத்தும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு நீங்கள் கல்குடாவிற்கு விஜயம் செய்வதில்லை என்றும், போராளிகள் மற்றும் ஆதரவாளர்களை சந்திப்பதில்லை என பரவலாக உங்கள் மீது குற்றம் சுமத்தப்படுவதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
கடந்த பேராளர் மாநாட்டில் சாட்டோ மன்சூர் உறையாற்றும் பொழுது வெற்றிடமாய் இருக்கும் தவிசாளர் பதவியினை கல்குடாவினை பிரதி நிதித்துவப்படுத்தி பகிரங்கமாக உங்களுக்கு கொடுக்குமாறு தலைவரை வேண்டியமையானது உங்களுடைய சிபார்சிற்கு அமைவான சாட்டோ மன்சூரினுடைய கருத்தா? அல்லது ஒட்டு மொத்த கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் கருத்தா?
கட்சியின் தலைமையகத்தினை பற்றி தாறுஸ்ஸலாத்தின் மர்மங்கள் என்ற போர்வையில் பேசப்பட்டு வருகின்ற நிலையில் தாறுஸ்ஸலாத்தின் அதிகாரங்கள் அனைத்தும் உங்களின் கைகளிலே இருப்பதாக போராளிகள் பேசிக்கொள்வது சம்பந்தமாக உங்களின் கருத்தென்ன?
தாறுஸ்ஸலாத்தின் மர்மங்கள் எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கறிக்கைகள், தஸ்தாவேஜுகள், என்பன சம்பந்தமாக பிரபல கணக்கறிஞர் என்ற பார்வையில் உங்களுடைய கருத்து எதுவாக இருக்கின்றது?
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசிற்கு பெரும் எதிர்ப்பு சக்தியாக இருக்கின்ற முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீண்டும் முஸ்லிம் காங்கிரசிற்குள் இணைந்து கொள்வதற்கான முஸ்தீபுகள் நடை பெற்றுவருவதாக அறியக்கிடைக்கின்றது. அந்த வகையிலே குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியின் தலைமையோடு நெருங்கிய தொடர்பினை வைத்திருக்கும் உங்களின் கருத்து என்ன?
வருகின்ற மாகான சபை தேர்தலில் ஐந்துக்கு மேற்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் உங்களுடைய சிபார்சின் அடிப்படையில் ADP றியாஸ் மற்றும் சாட்டோ மன்சூர் ஆகியோர்கள் களமிறக்கப்பட இருப்பதாக பேசப்படுவதில் ஏதும் உண்மை இருக்கின்றதா?
கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், போராளிகள் மத்தியில் இருக்கின்ற பிரச்சனைகள் சம்பந்தமாகவும், எதிர்வருகின்ற தேர்தல்களை எவ்வாறு சந்திப்பது தொடர்பாகவும் கல்குடா மக்களுக்கும் உங்களுடைய ஆதரவாளர்களுக்கும் ஏதும் கூற விரும்புகின்றீர்களா?
போன்ற முக்கிய கேள்விகளுக்கு உயர் பீட உறுப்பினரும். முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா அமைப்பாளருமான றியாழ் தெரிவித்த பதில்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.