எச்.எம்.எம்.பர்ஸான்-
தற்போதைய மாணவ சமூகத்தின் உணவுப்பழக்க வழக்கம் காரணமாக உடல் பலத்தை இழந்து வருகின்றார்கள். அவர்கள் இரசாயனங்கள் அதிகமாக கலக்கப்பட்ட உணவுகளையும் மற்றும் உடனடி உணவுகளையும் உட்கொள்வதன் மூலம் இவ்வாறான செயற்பாட்டிக்கு உள்ளாகின்றனர் என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத் அவர்கள் அண்மையில் ஓட்டமாவடி- பதுரியா நகர் அல்- மினா வித்தியாலயத்தில் நடந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
உணவுப் பழக்க வழக்கம் காரணமாக தற்போது ஆரோக்கியமற்ற ஒரு சமுதாயம் உருவாகி வருகின்றது. நாங்கள் கல்வி அறிவைப் பெற்றுக் கொள்வதாக இருந்தாலும் உணவுப்பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் ஆரோக்கியங்களினூடாகத்தான் பெற்றுக் கொள்ள முடியும்.
மாணவர்களின் உடல் ஆரோக்கியமும் உணவுப்பழக்க வழக்கமும் மாறுபட்டிருப்பதனால் நுண்ணறிவு விருத்தியிலும் மாணவர்கள் பின் தங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான தாக்கங்களிலிருந்து மாணவர்களை விடுவித்து, ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் முதற்படியாக பாடசாலைகள் திகழ்கின்றன. பாடசாலைகளில் கூறப்படும் உணவுப்பழக்க வழக்கம் உடற்பயிற்சி போன்றவைகளுக்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென்றும் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத் மேலும் தெரிவித்தார்.