சமகால ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் ஏற்பட்டுள்ள ஆடா அதிர்வுகளும், அசையா நகர்வுகளும்

தொடர் அறிக்கை: 01

பேரினவாதக் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்ட அன்றைய முஸ்லிம் தலைமைகளின் கொடுப்பதைப் பெறும் அரசியலில் இருந்து கேட்டுப்பெறும் அல்லது உரிமையோடு குரல் எழுப்பி சமூகத் தேவைகளை நிறைவேற்றும் அரசியலில் தடம்பதித்து முஸ்லிம்களுக்கென்று ஒரு தனித்துவமான கட்சியை தொடக்கிவைத்து தொலைநோக்குச் சிந்தனையுடன் செயற்பட்டவர்தான் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள். அவ்வாறான ஒரு அரசியல் தீர்க்கதரிசியின் தலைமையின் கீழ் இன்றைய தலைவர்களாகியுள்ள அன்றைய படித்த இளைஞர்கள், பாமர மக்கள் என்ற வேறுபாடின்றி இரத்தத்தையும் வியர்வையையும் இரண்டறக்கலந்து மரம் என்னும் சின்னத்துக்கு இரத்தத்தை நீராக்கி மறைந்த தலைவரின் மகத்தான பணிக்கு தோளோடு தோள்நின்று துன்பங்களில் பங்கெடுத்த மக்கள்தான் இந்தக் கட்சியை ஆலவிருட்சமாய் பலமாய் வேரூன்றி நிற்பதற்குக் காரணமாகும்.

இத் தொடரில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் தலைமையில் 1993 ஆம் ஆண்டு தன்னை இணைத்துக்கொண்ட முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள் தலைவரின் மரணத்தின்பின் ஏற்பட்ட தலைமைத்துவப் பிரிவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அணியிலிருந்து செயற்பட்டார். புதிய தலைவரின் கிங் மேக்கராக செயற்பட்ட இவரின் செயற்பாடுகள் காரணமாக இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சூழ்நிலைக் கைதியாக மாறவேண்டி ஏற்பட்டது. இதுவோர் மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட ஒரு நிகழ்வு என்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. இதன் தாக்கம் ஹக்கீம் பேரியல் முரண்பாடு, ஹக்கீம் நசீர் அஹமட் முரண்பாடு, ஹக்கீம் அதாவுல்லா முரண்பாடு, ஹக்கீம் ரிஷாத் அமீரலி முரண்பாடு எனப் பட்டியல் நீள்வதற்கு காரணமாக அமைந்திருந்தது.

இவர்கள் கட்சியின் ஆரம்பகால முக்கியஸ்தர்களாக இருந்து இந்தக் கட்சியை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியவர்கள். கட்சிக்குள் சமாந்தரமானவர்கள் தனக்கு ஈடாக இருந்தால், தனது வரப்பிரசாதங்களுக்கு தடையாக அமைந்துவிடும் என்பதற்காக சிறுசிறு விடயங்களும் பூதாகரமாக்கப்பட்டு அவர்களாகவே விலகிச் செல்லும் செயற்கையான உருவாக்கம் நடாத்தப்பட்டது. காலப்போக்கில் அரசியல் நீரோட்டம் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவர்களை தனிக்காட்டு ராஜாவாக நடைபோடுவதற்கு வழிவகுத்தது எனலாம். ஆனால் காலமாற்றமும் எதிர்பாராத சந்தர்ப்பங்களும் தலைமைத்துவத்தை மிஞ்சிய அதிகாரங்களை தனக்குள் ஏற்படுத்திக்கொண்டமையும் பஷீர் சேகுதாவூதிலேயே கட்சியிலுள்ள ஏனையவர்கள் தங்கியிருக்க வேண்டிய தோற்றப்பாடும் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் பஷீர் சேகுதாவூத் அவர்கள் கட்சியின் கடிவாளத்தை தன்னுடைய கைகளில் வைத்துக்கொண்டு செயற்பட்ட நிலைமையை அல்லது சந்தர்ப்பங்களை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மறக்கமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.   தொடரும்....


நன்றி.

A.அப்துல் நாசர் ,
முன்னாள் ஏறாவூர் நகரசபைத் தவிசாளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -