தமிழகத்தின் முதலமைச்சரானார் எடப்பாடி பழனிச்சாமி..!

மிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்தியாசாகர ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுவதால் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாலை 4.10 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள ஏனைய சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களில் 3ஆவது அரசு பதவியேற்பு நிகழ்ச்சி இதுவாகும். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். 2 மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென ராஜினாமா செய்து, அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை கேட்டுக் கொண்டார். ஆனால் நேற்று சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பை அழைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் 2 முறை ஆலோசனை நடத்தினார். சந்திப்பின் முடிவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்

இன்று முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், தமிழகத்தின் 12ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவிப்பிரமாணம் செய்து கொண்டமையினால் பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் தர்மம் மறுபடியும் வெல்லும். தர்ம யுத்தம் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். தவிர, எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக குழப்பமான நிலை இருந்தது, உடனடியாக ஆட்சி அமைய திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆளுநரை சந்தித்தும் எடுத்து கூறியிருந்தோம். இந்நிலையில் ஆளுநரின் அறிவிப்பு காலம் கடந்து வெளியிட்டாலும் உள்ளபடியே வரவேற்கத்தக்கது.

15 நாட்களுக்குள் என்பது பெரிய அவகாசம், இது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை . இதற்குள் பல குதிரை பேரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஏதும் நடக்காமல் ஆளுநர் பார்த்து கொள்ள வேண்டும். ஆளுநர் ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறேன் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய நிலையில் தமிழக அரசியலில் நீடித்து வந்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -