கிழக்கு மாகாண சபை |
16 ஆளும்கட்சி வாக்கு, 4எதிர்க்கட்சி வாக்கு
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைப் பறித்து, நகர அபிவிருத்தி அதிகார சபைகளுக்கு சுற்றுநிரூபத்தின் மூலம் கடந்த முதலாம் திகதி வழங்கிய சட்டத்துக்கு எதிராகப் பிரேரணையொன்று கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்டது. மாகாண சபை அமர்வு, சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் இன்று(21) இடம்பெற்றது.
இதன்போது, மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் இது தொடர்பான அவசரப் பிரேரணையை முன்வைத்தனர்.
மாகாண சபைகளிடமும் உள்ளூராட்சி சபைகளிடமிருந்தும் மத்திய அரசாங்கத்தால் பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரியே இப்பிரேரணையை அவர்கள் முன்வைத்தனர். இப்பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் 16 பேரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 4 பேரும் வாக்களித்தனர்.
ஆனால், தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர் ஜெயந்த விஜயசேகர மட்டும் இப்பிரேரணை மீதான வாக்களிப்பில் ஈடுபடவில்லை. மேலும், இச்சட்டம்; தொடர்பான தமது எதிர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனுப்பி வைப்பதற்கும் இந்த அமர்வில் முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த 30 வருடகாலமாக மாகாண சபைகளிடமும் உள்ளூராட்சி சபைகளிடமும் இருந்த இந்த அதிகாரங்களை இல்லாமல் செய்துவிட்டு, முக்கிய செயற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மத்திய அரசாங்கம் வழங்கி, நகர அபிவிருத்தி அதிகார சபையைப் பலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதைக் கண்டிப்பதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.