எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனைக் கல்வி வலையத்தில் சம்பள நிலுவைகள் பெறாது உள்ள ஆசிரியர்கள் சுமார் 1200 பேர்களின் சம்பள நிலுவையை பெற்றுத் தருமாறு கோரி அமைதியான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இலங்கை ஆசிரியர் மகா சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (22) புதன்கிழமை 3 மணியளவில் கல்முனை இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள வலையக் கல்விப் பணிமனை முன்பாக இடம் பெற்றது.
இலங்கை ஆசிரியர் மகா சங்கத் தலைவர் ஏ.எம். அஹுவர் தலைமையில் நடந்த இந்த அமைதி கவனயீர்ப்பு போராட்டத்தில் கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகளும் கொட்டும் வெயிலிலும் கலந்து கொண்ட இதே வேளை அவர்கள் "கல்விப் பணிப்பாளரே, ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதி எங்கே ? இந்தப் பிராந்திய அரசியல் தலைவர்களே இந்த ஆசிரியர்களின் தீர்க்க யார் பொறுப்பு, அரச அதிகாரிகளே பொறுப்புடன் செயற்படுங்கள், எமது ஆசிரியர்களின் அவலத்திற்கு யார் காரணம், என்பன போன்ற பல சுலோகங்களை ஏந்திய வண்ணம் தமது போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் மகா சங்கத் தலைவர் ஏ.எம். அஹுவர் கல்முனை கல்வி வலயத்திலுள்ள சுமார் 1200 ஆசிரியர்களின் சம்பள நிலுவையை பெற்றுத்தரக் கோரும் அமைதி கவன ஈர்ப்புப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனூடாக நாம் சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிவிப்பது எமது ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய சம்பள நிலுவையை உடனடியாக பெற்றுத் தர ஆவண செய்யப்பட வேண்டும். அல்லாது போனால் எமது சங்கம் சம்பள நிலுவையை பெற்றுக் கொடுக்கும் வரை ஜனநாயக ரீதியாக, சட்ட திட்டங்களுக்கு அமைவாக இந்த அமைதிப் போராட்டத்தினை தொடர்ந்தும் நடத்துவோம் என்று தெரிவித்தார்.
கல்முனை வலயத்திற்குட்பட்ட சுமார் 1200 ஆசிரியர்கள் நீண்ட காலமாக தமது சம்பள நிலுவையைப் பெறாமல் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனைப் பெற்றுக் கொடுப்பதற்காக இலங்கை மகா ஆசிரியர் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் கிழக்கு மாகாண ஆளுணர் முதற்கொண்டு கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பல முறை தெரியப்படுத்தியும் எவ்வித பயனுமில்லை.
இந்நிலையில்தான் எமது சங்கம் இந்த அமைதிப் போராட்டத்திற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டு வீதிக்கு இறங்கியுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட தரப்பினரால் எமது சம்பள நிலுவைகளை பெற்றுத் தர ஆவண செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.