மருதமுனையில் பிரபலம் பெற்ற வீதியான காரியப்பர் வீதி காபட் வீதியாக புனரமைப்பதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் அபிவிரித்தித் திட்டமிடல் இணைப்பாளருமான சட்டத்தரணி துல்கர் நயீம் தெரிவித்தார். மேற்படி வீதியானது மிக நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாது பள்ளமும் படுகுழியுமாகக் காட்சியளிக்கின்றது. இதனால் இந்தப்பாதையால் போக்குவரத்தில் ஈடுபடுவோரின் விசனத்துக்கும் உள்ளாகியிருந்தது.
ஏற்கனவே துல்கர் நயீம் மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் மருதமுனையின் உள்வீதிகளில் முக்கியமான வீதிகள் அனைத்துமே ஜப்பானிய ஜெய்கா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு கொங்கிறீட் வீதிகள் இடப்பட்டிருந்தன. இந்நிலையில் பிராந்திய ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் மருதமுனையின் முக்கிய நான்கு வீதிகளையும் புனரமைக்க போவதாகவும் இவ்வீதிகளை ஜெய்கா திட்டத்தின் கீழ் உள்வாங்க வேண்டாம் என மாற்றுக்கட்சி பிரமுகர்கள் வேண்டிக் கொண்டதை அடுத்து காரியப்பர் வீதி உட்பட அல் ஹம்றா வீதி , லைப்ரறி வீதி , பாக்கியதுஸாலிகா வீதி ஆகியவற்றை உள்வாங்காது விட்டிருந்தார். வருடங்கள் பல கடந்தும் வீதி புனரமைக்கப்படாது விட்டதனால் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்னோக்கினர்.
இதனை அடுத்து முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நயீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதனை அடுத்து தனக்கு ஒதுக்கப்பட்ட திறைசேரியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் இருந்து 15.5 மில்லியன் ரூபா நிதியினை இதற்காக ஒதுக்கீடு செய்ததோடு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கும் கூடியவிரைவில் இவ்வீதியை இந்நிதி ஒதுக்கீட்டின் மூலம் காபட் வீதியாக புனரமைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணிப்புரையும் விடுத்துள்ளார்.