என்.எம்.அப்துல்லாஹ்-
வடக்கு முஸ்லிம் மக்களின் விவகாரங்கள் இலங்கைத் தமிழ் மக்களோடு இணைந்ததாக சர்வதேச சமூகத்தின் முன்ன்னிறுத்தப்படவேண்டும். என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள் தெரிவித்தார்கள.
இலங்கை அரசாங்கம் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாளுகின்ற விடயத்தில் தொடர்ந்தும் அசமந்தப் போக்கினை கடைப்பிடித்துவருகின்றது. 2009களிலே இலங்கையின் கொடூர யுத்தம் பல்வேறு மனிதஉரிமை மீறல்களோடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது, அதனைத் தொடர்ந்து சர்வாதிகார ஆட்சிமுறையொன்றினை முன்னைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது, மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தார்கள் 2015களில் இந்த நாட்டிலே இருக்கின்ற எல்லா சிறுபான்மை சமூகங்களும் ஒன்றிணைந்து இப்போதைய தேசிய அரசாங்கத்தை உருவாக்கினார்கள், அரசியலமைப்பு மாற்றம், சிறுபான்மை சமூகங்களுக்கான உரிமைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகள் என பல்வேறு விடயங்கள் இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிருந்தது. ஆனால் இதுவரை மேற்கொள்ள முடியுமான சாதகமான மாற்றங்கள் எதுவும் முன்னெடுப்பட்டதாக அறியமுடியவில்லை.
இதற்கு மாற்றமாக தமிழ் மக்களின் காணிப்பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடயங்கள், காணாமல்போனோர் தொடர்பிலான விடயங்கள் என பல்வேறு விடயங்களில் எவ்வித தீர்வுகளும் காணப்படவில்லை; அதே சந்தர்ப்பத்தில் வடக்கு முஸ்லிம்களின் விடயங்களிலும் எவ்விதமான காத்திரமான முன்னெடுப்புகளும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. மாற்றமாக முஸ்லிம் மக்களின் காணிகளையும் பறித்தெடுத்து அவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சிகளுக்கு இந்த அரசாங்கம் ஆதரவளித்துவருகின்றது.
வில்பத்து, கொண்டச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களில் காணப்படும் காணி அபகரிப்புகள் இதற்குச் சான்றாகவே அமைகின்றன. அதே சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாணசபையும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை கையாள்வதில் பல்வேறு குறைபாடுகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களோடு இணைந்து வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் சர்வதேச சமூகத்தின் முன்வைக்கப்படவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
இதன் மூலம் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களுக்கான தீர்வு விடயத்தில் வடக்கு முஸ்லிம் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் என நான் எதிர்பார்கின்றேன். எனவே இம்முறை இடம்பெறவிருக்கின்ற ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டிலே வடக்கு முஸ்லிம் மக்கள் தம்முடைய நிலைப்பாட்டை நேரடியாகத் தெரிவிப்பதும் சிறப்பானதாகும் எனவும் கருதுகின்றேன்.