முஸ்லிங்களை ஏமாற்றி தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாது - எதிர்க்கட்சித் தலைவர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மிழர்கள் முஸ்லிம் மக்களை ஏமாற்றி ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது. அதேபோன்றுதான் முஸ்லிம் மக்கள் தமிழ் சமூகத்தை ஏமாற்றி கிழக்கு மாகாணத்திலோ அல்லது வடக்கு கிழக்கில் எங்கணுமோ வாழ முடியாது என இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார்.

புதன்கிழமை மட்டக்களப்பு ஏறாவூருக்கு ஜனாதிபதியுடன் வருகை தந்த அவர் ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் பங்குபற்றி உரையாற்றினார்.

தொடர்;ந்து உரையாற்றிய சம்பந்தன், இந்த நாட்டில் எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் நாங்கள் ஒன்றாக இணைந்து எமது உரிமைகளைப் பெறுவதற்கு மற்றவர்களின் உரிமைகளை மதித்து அந்த மதிப்பின் அடிப்படையில் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுத்து வாழ வேண்;டும்.

சிறுபான்மையினராகிய நாங்களும் இந்த நாட்டில் கௌரவமாகவும் சுயமரியாதையுடனும்தான் வாழ விரும்புகி;ன்றோம்.

ஜனாதிபதியினுடைய கொள்கைகளின் அடிப்படையில் சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பல்வேறு பலவீனங்களையும் குறைபாடுகளையும் நீக்குவதற்கு சில திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் பாவனை, புகைத்தல், மதுபானம் பாவனை, வறமை ஒழித்தல், சுற்றுச் சூழலைக் காத்தல், அபிவிருத்தியை முன்னெடுத்தல் இவ்வதமாக பல திட்டங்கள் இவை சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற கருமங்களாகும்.

மேற்படி அனைத்துத் திட்டங்களிலும் சமுதாயத்திற்கு ஒரு பெரும் பங்கிருக்கின்றது. ஒட்டு மொத்த சமூகத்தின் உதவி ஒத்தாசை, பங்களிப்பு இல்லாமல் இந்தக் கருமங்கள் எதனையும் வெற்றிகரமாக நிறைவேற்றிட முடியாது.

இந்தத் திட்டங்களின் முக்கியத்துவத்தையும் அதன் பெறுமதியையும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதனைத் தெளிவுபடுத்தும் முகமாகத்தான் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இதனை எல்லாத் தரப்பினரும் சேர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

நீண்ட காலமாக இந்த நாட்டைப் பீடித்துள்ள தேசிய இனப் பிரச்சினைக்கு எப்பொழுது ஒரு அரசியல் தீர்வு வரப்போகின்றது என்பதே இப்பொழுது நம் எல்லோருக்கும் முன்னாலும் இருக்கின்ற முக்கியமாக கேள்வியாகும்.

தேசியப் பிரச்சினைக்கு ஒரு தேசியத் தீர்வு காண்பது சம்பந்தமாக இப்பொழுது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த நடவடிக்கையிலே ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் நாடாளுமன்றம் ஆகிய தரப்புக்கள் முக்கிய பங்காளித்துவத்தை வகிக்கின்றன.

இந்த முக்கிய பங்காளிகளின் ஒத்துழைப்புடன் ஒரு அரசியல் சாசன சபை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது விடயமாக பல்வேறு நடவடிக்கைக் குழுக்கள் இயங்குகின்றன. பல்வேறு கருமங்கள் பல்வேறு மட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேவேளை பல்வேறு கருத்துக்களும் கூறப்படுகின்றன.

கிழக்கு மகாணத்திலே மூவின மக்களும் வாழ்கின்றார்கள் என்பது ஒரு சிறப்பான அம்சமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபான்மை இனமான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கூடுதலாக வாழ்கின்றார்கள்.

தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடியதாக வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் உள்ளன.

எமது நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றி எமது பிறப்புரிமைகளைப் பெற்று நாங்களும் இந்த நாட்டில் சம பிரஜைகளாக சமத்துவமாக சக வாழ்வு வாழ்வதற்குத்தான் ஏங்கிக் கொண்டிருக்கின்றோம்.

இந் எதிர்பார்ப்பு எமது பிறப்புரிமை இதனை எவரும் குறைத்து மதிப்பிடவோ மாற்றவோ முடியாது.

உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு சமூகங்களையும் இனங்களையும், மதங்களை கலாச்சாரங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

அந்தந்த நாடுகளிலுள்ள மக்கள் யாவரும் தங்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு தங்களுடைய சமூகத்தின் சுயமரியாதையைப் பேணிப் பாதுகாப்பதற்கு அரசியல் சாசன ரீதியாக ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அந்த மக்கள் தங்களுடைய உரிமைகளை சமத்துவமாகப் பெற்று வாழ்வதற்கு ஆட்சி முறையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், துரதிருஷ்டவசமாக எமது நாட்டில் இன்னமும் ஒரு நிரந்தரமான தீர்வு ஏற்படவில்லை.

எனினும், நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்பட்டு அத்தகைய ஒரு தீர்வை அடைந்துகொள்வதற்குப் பாடுபட வேண்டும்.

இதற்காக என்னென்ன தியாகங்களைச் செய்ய முடியுமோ அதனைச் செய்ய வேண்டும். நன்கு சிந்தித்து நீதி நியாயத்தின் அடிப்படையில் எங்களுடைய பிரச்சினைகளையும் மற்றவர்களுடைய பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து எங்களினதும் அவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் பாடுபட வேண்டும்' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -