ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பிரதேசத்திலுள்ள 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து சமூர்த்தி உணவு முத்திரை தங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லையென தெரிவித்து கட்டைபறிச்சான்-நாவலடி சந்தியிலிருந்து மூதூர் பிரதேச செயலகம் வரை 5 கிலோ மீற்றர் தூரம் பொது மக்கள் அமைதி பேரணியொன்றினை நடை பவணியாகச் சென்று மூதூர் பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரினை இன்று 16 வியாழக்கிழமை கையளித்தனர்.
வறுமைக்கோட்டின் கீழ் அன்றாட ஜீவனோபாயத்தை நடாத்திவரும் அப்பிரதேச மக்கள் யுத்தம் முடிவடைந்து 2008 ஆம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்டும் இன்னும் சமூர்த்தி உணவு முத்திரை தங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லையென விசனம் தெரிவித்தே இவ் அமைதி பேரணியை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.
இவ் அமைதி பேரணியினை மூதூர் கிழக்கு சமூர்த்தி சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்ததோடு,ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூதூர் கிழக்கு பகுதியில் சமூர்த்தி உணவு முத்திரை பெறுவதற்கு தகுதியான 4674 குடும்பங்கள் இருக்கின்றன அதேவேலை 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் தொடக்கம் 2017 பெப்ரவரி வரை இன்னும் சமூர்த்தி உணவு முத்திரை வழங்கப்படவில்லையென்பதோடு இக் காலப்பகுதியிலுள்ள அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டுமெனவும் பொது மக்கள் தெரிவித்தனர்.
இந்நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் வாக்களித்தே உருவாக்கினோம் சாதாரன சமூர்த்தி முத்திரையைக் கூட இவ் அரசாங்கம் எமக்கு ஒரு மாத இடைவெளிக்குள் செய்யாவிட்டால் அடுத்துவரும் நாட்களில் எமது அடிப்படை வாழ்வாதாரத்திற்காக உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அம்மக்கள் மூதூர் பிரதேச செயலாளரிடம் குறிப்பிட்டனர்.
மக்களின் மகஜரினை பெற்றுக்கொண்ட மூதூர் பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உரிய அதிகாரிகளுக்கு மக்களின் இக்கோரிக்கையினை அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டார்.