குழந்தைகளைக் குதறும் கழுகுகள்: அவதானம் மிக அவசியம்!

எஸ்.ஹமீத்-
ண்மைக் காலங்களில் குழந்தைகள் மீதான காமுகர்களினதும் கள்வர்களினதும் வக்கிரங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. ஒன்றுமேயறியாத பச்சிளம் குழந்தைகள் தொடக்கம் பதின்ம வயதுடைய சிறார்களின் மீதான- குறிப்பாகச் சிறுமிகள் மீதான கொடுமைகளும் கொடூரங்களும் பாலியல் வன்மங்களும் அதன் விளைவான கொலைகளும் எல்லா நாடுகளிலும் ஒப்பீட்டளவில் கூடிக் கொண்டே வருகின்றன. இந்த நிலைமையில் தமது குழந்தைகளின் மீது பெற்றோரும் உடன் பிறப்புகளும் மிக அவதானமாக இருப்பது அத்தியாவசியமாகும்.

அன்புக்கும் காமத்திற்கும் வித்தியாசம் அறியாதவர்கள் நமது குழந்தைகள். உள்ளத்தினுள்ளே நஞ்சை வைத்துக் கொண்டு, உதடுகளில் சிரிப்பைக் காட்டி ஒரு குழந்தையைப் பெற்றோர் அல்லது உடன் பிறப்பில்லாத ஒருவர் அணைத்துக் கொள்வதன் ஆபத்தை நாம் இனம் காணாத வரை, நமது குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.

ஒருவர் தன்னை அணைத்துக் கொள்கிறாரென்றால், அணைத்து முத்தம் தருகிறாரென்றால் குழந்தைகள் நெகிழ்ந்து விடுகிறார்கள். அவ்வாறான நெகிழ்வு குழந்தைகளின் இயல்பு. ஆனால், தன்னை அணைப்பவரின் அந்த அணைப்பிற்கும் முத்தங்களுக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் கபட நெஞ்சத்தையும் காமுக எண்ணத்தையும் குழந்தைகளினால் அறிந்து கொள்ள முடிவதில்லை. ஆக, இந்த விடயத்தில் பெற்றோரும் குழந்தையின் வயது வந்த உடன்பிறப்புகளுமே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

நமது மிக நம்பிக்கைக்குரிய இரத்த சொந்தங்களைத் தவிர வேறு யாரும் நமது பெண் குழந்தைகளுடன் நெருங்கிப் பழக அனுமதித்தல் ஆகாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் நண்பர்களென்றோ, தெரிந்தவர்களென்றோ நமது குழந்தைகளை அவர்களோடு பயணம் செய்வதற்கோ, தனியாக இருப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது. இந்த விடயத்தில் எல்லோரையும் சந்தேகத்தோடு அணுகினாலும், அது நமது குழந்தையைத் துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்காகவே என்பதனால், அந்தச் சந்தேக எண்ணம் நமக்கிருப்பதில் தப்பேயில்லை.

அநேகமாக வெளியார் ஒருவரினால் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்குள்ளாகுவதை விட, நமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவே பாதிக்கப்படுகிறார்கள் என்று பல ஆய்வுகள் தெளிவாகத் தெரிவித்துள்ளன. ஆதலால், தயவுதாட்சண்யமின்றி இந்த விடயத்தில் நமது குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் நடத்தையில் சிறிய மாறுதல் தென்பட்டாலும் உடனடியாகக் குழந்தைகளுடன் பேசுங்கள். அன்பாகவும் ஆதரவாகவும் அவர்களை அணுகி, அவ்வாறான மாற்றத்திற்கான காரணத்தை அறிய முற்படுங்கள். தான் பாதிக்கப்பட்டதைப் பயத்தினாலோ, வேறு காரணங்களினாலோ மறைத்துத் தனக்குள்ளேயே போராடும் குழந்தைகள், நமது அக்கறையும் பாசமும் கலந்த அணுகுமுறையினால் நம்மிடம் உண்மைகளைக் கூற நிறைய வாய்ப்புகள் உள்ளன.

குழந்தைகளைக் கடைகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அல்லது விழாக்கள் நடைபெறும் இடங்களுக்கோ தனியே அனுப்பாதீர்கள். பிரத்தியேக வகுப்புகளுக்கு உரிய நேரத்தில் சென்று உரிய நேரத்தில் குழந்தை திரும்புவதையும் உறுதிப்படுத்துங்கள். அத்தோடு குழந்தையின் முக, உடல் தோற்றங்களிலும் நடத்தையிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றதா என்பதையும் அடிக்கடி கண்காணியுங்கள்.

பக்கத்து வீட்டு இளைஞனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட ஏழு வயதுச் சிறுமி ஹாசினியின் கதையை நாம் மறப்பதற்குள் மூன்று வயதாகும் சிறுமி ரித்திகாவின் கொலை தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது. அதுவும் பக்கத்து வீட்டுப் பெண்ணொருவர் அன்போடு கூட்டிச் சென்று, பின்னர் அங்குள்ள ஆண் ஒருவரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

குழந்தைகளைக் குறி வைத்துக் குதறும் காமுகக் கழுகுகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. அக்கழுகளிடமிருந்து நமது குழந்தைகளைக் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு நமது கைகளில்தான் இருக்கிறது. பொறுப்பற்ற பெற்றோராக, உடன்பிறப்புகளாக நாம் இருந்துவிட்டுப் பின்னர் கைசேதப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆகவே, அனைவரும் விழிப்புடன் இருப்போம்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -