நினைவு கூறப்பட வேண்டிய நான்கு சுதந்திர தினங்கள் நம் நாட்டில் இருக்கின்றன-அப்துர் ரஹ்மான்

ஊடகப்பிரிவு-


"வ்வெரு வருடமும் பெப்ரவரி 4 ஆம் திகதிகளில் நாம் தேசத்தின் சுதந்திர தினத்தை அனுஸ்டிக்கின்ற போதிலும் நம் நாட்டின் வரலாற்றில் சுதந்திர தினங்களாக கொண்டாடப்பட வேண்டிய இன்னும் சில தினங்களும் இருக்கின்றன. அவற்றையும் நாம் நினைவு கூர்ந்தால் மாத்திரமே நாம் பெற்றுக் கொண்டுள்ள விடுதலையின் பெறுமதியினை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.


இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடு முகமாக NFGGயினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு விசேட உரையொன்றை ஆற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


காத்தான்குடியில் அமைந்துள்ள NFGGயின் கிழக்குப் பிராந்திய தலைமைக் காரியாலய வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
"அந்நியர்களின் ஆக்ரமிப்பில் மிக நீண்ட காலம் அகப்பட்டிருந்த எமது தேசம் 1948 பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி விடுதலை பெற்று சுதந்திர தேசமாக உருவானது. இதனை தேசிய சுதந்திர தினமாக வருடாவருடம் அனுஸ்டிக்கின்றோம். அந்த வகையில் 69 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை மகிழ்ச்சியுடன் நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். இது இலங்கை வரலாற்றின் முதலாவது விடுதலை தினமாகும். நாம் மகிழ்ச்சியுடன் அனுஸ்டிக்க வேண்டிய இன்னும் சில விடுதலை தினங்களும் இருக்கின்றன.


இந்நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கையினையும், தேசத்தின் ஒற்றுமையினையும் பெரும் சேதத்துக்குள்ளாக்கிய பிரிவினைவாத பயங்கரவாதம் 30 ஆண்டுகளாக நம் நாட்டை ஆக்ரமித்திருந்தது. 2009 மே மாதம் 18 ஆம் திகதி அந்த பயங்கரவாதத்திலிருந்து இந்த நாடு முழுமையாக மீட்கப்பட்டது. இது இந்த தேசத்திற்கு கிடைத்த இரண்டாவது விடுதலை தினமாகும்.


அது போலவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்களே அந்த மக்களின் நலன்களை நசுக்கி, அவர்களின் பொருளாதாரத்தைக் கொள்ளையடிக்கின்ற ஒரு மக்கள் விரோத ஆட்சியில் இந்த நாடு சிக்கியிருந்தது. அந்த ஆட்சியாளர்களிடமிருந்து கடந்த 2015 ஜனவரி 8ஆம் திகதி இந்த நாடு மீட்டெடுக்கப்பட்டது. அது இந்த நாட்டின் வரலாற்றில் நினைவு கூர வேண்டிய மூன்றாவது சுதந்திர தினமாகும்.


அது போலவேதான் இவ்வருடம் பெப்ரவரி 3ஆம் திகதி நமக்கு இன்னுமொரு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. நம்மை ஆட்சி செய்யும் நிர்வாகக் கட்டமைப்புக்களின் நடவடிக்கைகள் பற்றியும், நமது நலன்களோடு தொடர்புபட்ட ஏனைய நிறுவனங்களின் நடவடிக்கைகள் பற்றியும் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையே தற்போது கிடைத்துள்ள அந்த சுதந்திரமாகும். நாம் வழங்கும் அதிகாரத்தைக் கொண்டும், நாம் வழங்கும் வரிப்பணத்தைக் கொண்டும் எம்மை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியாதவாறு நாம் இதுவரை முடக்கப்பட்டிருந்தோம். தகவல் அறியும் சுதந்திரம் நமக்கு மறுக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து விடுதலையும் , தகவலறியும் உரிமையும் இவ்வாண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் எமக்குக் கிடைத்துள்ளது. இது எமது தேசத்தின் வரலாற்றில் நாம் நினைவு கூர வேண்டிய மற்றுமொரு சுதந்திர தினமாகும்.


ஆக, வரலாற்றில் எமது தேசம் கண்ட நான்கு வகையான விடுதலை தினங்கள் , மக்களாகிய நாம் அனுஸ்டிக்க வேண்டிய நான்கு வகையான சுதந்திர தினங்களாக எமக்கு இருக்கின்றன.
இன்றைய சுதந்திர தினத்தில் இதனை நாம் நினைவு படுத்திப் பார்ப்பது அவசியமானது. நம் நாடு வரலாற்றில் எவ்வாறான வேறுபட்ட ஆக்ரமிப்புக்களில் சிக்கியிருந்தது என்பதனையும் நமது சுதந்திரத்தின் உண்மையான பெறுமதியினையும் உணர்ந்து கொள்வதற்காக இதனை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.
எனவே, இன்றைய சுதந்திர தினத்தை சம்பிரதாயபூர்வமாக அனுஸ்டிப்பதோடு முடித்து விடாமல் நம் நாட்டிற்கு கிடைத்துள்ள விடுதலைகளினதும் சுதந்திரத்தினதும் பெறுமதியினை உணர்ந்து , அதனை பாதுகாக்கும் வகையில் விழிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நாம் ஒவ வொருவரும் செயற்பட வேண்டும்"
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -