இனவாதிகளை முதலமைச்சராக்க முயற்சித்தவர்கள், இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்

 கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை சபை உறுப்பினர் ஆர். எம் அன்வர்
கிழக்கு மாகாண சபையில் கிடைத்த இரண்டு ஆசனங்களை தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்கள் மாகாண சபையை கைப்பற்றுவது தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது என திருகோணமலை மாவட்ட கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை சபை உறுப்பினர் ஆர். எம் அன்வர் தெரிவித்தார்.

தமக்கு கிடைத்த இரண்டு மாகாண சபை ஆசனங்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்கள் அவர்களுக்கு மாகாண சபை கிடைத்தால் இரண்டு நாட்களில் தாரை வார்த்து விட்டு நிற்பார்கள் என்பதை எம்மால் உறுதியாகக் கூறமுடியும், திருகோணமலையில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம் அன்வர் இதனைக் கூறினார்.

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலையில் நடத்திய கூட்டமொன்றில் கிழக்கு மாகாணத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த விதமான அபிவிருத்திகளையும் செய்யவில்லை என்றும் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை நாக்கூசாமல் சொல்லிச் சென்றனர்,

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு பாரிய வெற்றிடம் உள்ளது என்பதை முதலில் எடுத்துக்காட்டியதே நமது ஆட்சியே என்பதை குற்றஞ்சுமத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் இந்நிலையில் கிழக்கு மாகாணத்துக்கு ஆசிரியர் பற்றக்குறை இருக்கையில் எமது மாகாண ஆசிரியர்களை வேறு மாகாணங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது கிழக்கு மாகாணமுதலமைச்சர் அவர்கள் கல்வியமைச்சில் தனி ஆளாக நின்று போராடி அந்த ஆசிரியர்களை எமது மாகாணத்துக்கு கொண்டு வந்தார் .

அப்போதெல்லாம் இன்று இங்கு வந்து வாய் கிழிய பேசும் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ,எதைச்சாதித்தார்கள்,அன்று வாய்மூடிய மௌனியாஇவாக இருந்து விட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள், மழைக்காலம் நெருங்கும் போது வரும் மழைக்குருவிகள் போல தேர்தலுக்காக இவர்கள் இன்று இங்கு வலம் வர ஆரம்பித்திருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறைக்காக கல்வியமைச்சுக்கு முன் போராட்டம் நடத்துமாறு சவால் விட்டார்கள் ஆம் அவர் நமது மாகாணத்து ஆசிரியர்களை மீட்டெடுக்க கல்வியமைச்சுக்கு முன் அல்ல கல்வியமைச்சு உள்ளேயே சென்று போராடினார்கள் அதற்கு வீடியோ ஆதாரங்கள் அல்லது வேறு ஆதாரங்கள் தேவைப்பட்டல் அவற்றை தரவும் நாம் தயாராக இருக்கின்றோம். நாம் உங்களுக்கு சவால் விடுக்கின்றோம் கடந்த பல ஆண்டுகளாக வில்பத்து பிரச்சினை தீர்வின்றி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது உங்களுக்கு ஜனாதிபதி மாளிகை முன்சென்று போராடி அந்த மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்திருக்கலாமே ஏன் செய்யவில்லை.அந்த மக்களுக்கு தீர்வு கிடைத்து விட்டால் தமக்கு அரசியல் செய்ய முடியாது என்பதாலா.இல்லை இதை விட்டால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதாலா.

அத்துடன் திருகோணமலையில் நீங்கள் நடத்திய கூட்டத்தில் இந்த மண்ணுக்கு பாரிய அபிவிருத்தியை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி 10 அல்லது 15 சைக்கிள்களையும் சில தையல் இயந்திரங்களையுமே வழங்கினீர்கள் ,

இதையா உங்கள் கட்சி பாரிய அபிவிருத்தியாக எண்ணுகின்றது ஆனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸான நாம் இந்த மண்ணில் உள்ள மக்களின் பிரச்சினைகளை நன்கறிந்துள்ளோம். நாம் இந்த திருகோணமலை மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக உள்ள காணிப்பிரச்சினையை படிப்படியாக தீர்த்து வருகின்றோம் அண்மையில் எமது மாகாண சபையின் ஊடாக பலருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்தோம். அது மாத்திரமன்றி பல கோடி ரூபா செலவில் நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் வீதிப்புனரமைப்புக்கள் என பல அபிவிருத்திகளையும் முன்னெடுத்து கொண்டிருக்கின்றோம்.

அது மாத்திரமன்றி எமது பாடசாலைகளில் வளப் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கின்றது அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் மறுக்கவில்லை. ஏனெனில் எமது மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதுவும் உரிய நேரத்துக்கு கிடைக்கப் பெறாமையினால் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோகக் வேண்டியுள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது மகாண சபையுடன் உள்ள கோபத்தில் சில இனவாத அமைச்சர்களுடன் கூட்டு சேர்ந்து சில முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்கின்ற சதியினால் மாகாண சபைகளுக்கு கிடைக்க வேண்டிய பல சலுகைகள் கிடைக்கப் பெறுவதில்லை  இவை பொய்க்குற’றச்சாட்டு அல்ல அவற்றை நிரூபிக்க போதுமான ஆதாரங்களுக்கும் எம்மிடம் உள்ளன என்பதை உறுதியாக கூறுகின்றோம்.

அத்துடன் திருகோணமலை மண்ணில் தம்மை ஒரு பாரிய தியாகியே தன்னைக் காட்டிக் கொண்டு என்னை விமர்சித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமில் முஸ்லிம் சமுகத்துக்கு அவர் செய்த துரோகத்தை மறந்து விட்டார் என நினைக்கின்றேன்.


கிழக்கு மாகாண சபையை தற்போது முஸ்லிங்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் தயாகமகேவுக்கு தாரை வார்த்து இனவாதியான அவரை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் மாகாணத்தில் முதலமைச்சராக அழகு பார்க்க வேண்டும் என துடியாய் துடித்தவரே ஜெமீல் என்பதை மக்கள் மறந்து விடவில்லை. எனக்கு அமைச்சர் ரிஷாட்டின் மூலமாக அரச துறையில் உயர் பதவியொன்றை பெற்றுத் தருவதாகவும் பணமும் தருவதாகவும் கூறி தயாகமகேயை முதலமைச்சராகக்க உதவி புரியுமாறு கோரியமையை ஜெமில் அவர்கள் மறந்து விடக் கூடாது.

ஆனால் நாங்கள் உங்களைப் போன்று பணத்துக்காகவும் பாசாங்கு வார்த்தைகளுக்காகவும் தலைமையையோ கட்சியையோ காட்டிக் கொடுப்பவர்கள் அல்லர்,கட்சி மீதான பற்றும் பக்தியும் எம்மில் இருந்ததால் தான் ஜெமில் போன்ற நயவஞ்சகர்களின் சதித்திட்டத்தை கட்சித்தலைவரிடம் எடுத்துரைத்து எமது மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரொருவரை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன் என்பதை கூறிக் கொள்கின்றேன்.

பணத்திற்காகவும் பிணந் தின்ன வல்ல இவர்கள் இன்று தம்மை யோக்கியர்களாக காட்டிக் கொண்ட இவர்கள் இந்த மண்ணில் பிறந்து இந்த மண்ணுக்காக எந்த விதமான சுயலாபமும் இன்றி பாடுபடும் எங்களை விமர்சிக்கின்றார்கள்,உங்கள் நயவஞ்சகத்தால் வீழ்ந்து விடுவதற்கு நாம் ஒன்று கோழைகள் அல்ல அஷ்ரப் எனும் விருட்சத்தின் நிழல் பெற்று வளர்ந்த போராளிகள் எமது மக்களுக்கான பிரச்சினைகளின் போது போராடும் மூர்க்கக் குணம் எம்மிடம் இன்னும் உள்ளது.

அத்துடன் அம்பாறை மாவட்ட மக்களாலேயே துரத்தியடிக்கப்பட்ட ஜெமிலைப் போன்ற நயவஞ்சகரை நம்பி ஏமாறுவதற்கு திருகோணமலை மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும், எமது மக்களுக்கு எந்த நேரம் பிரச்சினைகள் வந்த போதிலும் நாம் ஒரு போதும் அவர்களை கைவிடுவதில்லை.

எமது மீனவர்களுக்கு கடற்படையால் பிரச்சினை வந்த போது நாமே முன்னின்று அதனை தீர்த்து வைத்ததுடன் அவர்களின் வாழ்வாதாரத்த்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தா வண்ணம் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் காசுக்காக கட்சியை கைவிட்டவர்கள் நாளை மக்களை கைவிட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சியம் இருக்கின்றது

ஆகவே தேர்தல் காலத்துக்கு வந்த சத்தமிடும் மழைக்குருவிகளை கண்டு ஏமாறமல் மக்கள் அவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம் அன்வர் வேண்டுகோள் விடுத்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -