பெண்களும் ஆன்மீகக் கல்வியைக் கற்பது அவசியம் - அஷ்ஷேஹ் அப்துல் ஹாலிக்

மினுவாங்கொடை நிருபர்-
ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு இஸ்லாமிய வாழ்க்கை வழி முறைகளைக் கற்றுக் கொடுக்க முன் வரவேண்டும். குறிப்பாக, பெண் பிள்ளைகளுக்கு ஆன்மீகக் கல்வியை ஊட்டுவதன் மூலம், வீட்டுக்குள்ளிருந்தே தூய்மையான சமுதாயமொன்றை உருவாக்க முடியும் என்று, கொழும்பு மர்கஸ் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ் ஷேஹ், அல் ஹாபிழ் அப்துல் ஹாலிக் ( தேவ் பந்தி ) தெரிவித்தார். 

மினுவாங்கொடை - கல்லொழுவையில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட ஹுமைரா மகளிர் அரபிக் கல்லூரியின் ஆரம்ப நாள் நிகழ்வில், பிரதம சொற்பொழிவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அஷ் ஷேஹ் குறிப்பிட்டார். 

கல்லூரி அதிபர் எச். எம். ஸமீர் (தீனி) தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அஷ் ஷேஹ் தொடர்ந்தும் உரையாற்றும்போது கூறியதாவது, 

நபிகளாரின் ப்ரியமான மனைவியான அன்னை ஆயிஷா சித்தீக்கா ( ரழி ) அவர்களின் பேரும் புகழும் பெற்ற பெயர்தான் ஹுமைரா. இந்தப் பெயரில் இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டிருப்பது, மிக்க மகிழ்ச்சிக்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும். தனது 18 ஆவது வயது முதல் 60 ஆவது வயது வரை இரவு பகலாக ஒயாமல், சளைக்காமல் இஸ்லாமியப் பணிகளில் ஈடுபாடு கொண்ட , அல் குர் ஆன் அல் ஹதீஸ் கலைகளில் பாண்டித்தியம் பெற்று, அதி உயர் ஸ்தானத்தைப் பிடித்துக் கொண்ட, அதே போன்று, கவிதைகளை எழுதுவதிலும் வல்லமை பெற்ற அன்னை ஆயிஷாவின் புகழுக்குரிய நாமத்தை, இக் கல்லூரிக்கு சூட்டியிருப்பதன் மூலம், இந்தக் கிராமத்திற்கு தீனின் ஒளி மேலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் என்பதில், எந்தவித சந்தேகமுமில்லை. 

ஆணுக்கு நிகராகப் பெண்களும் ஆன்மீகக் கல்வியைப் பெறவேண்டும் என, நபிகளார் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள். இஸ்லாம் மார்க்கமும் பெண் கல்விக்கு மிக முக்கிய இடத்தை அளித்திருப்பதையும் பார்க்கிறோம். எனவே , இன்றைய சூழ் நிலையில், இவ்வாறான கல்விக் கூடங்கள், நமது சமூகத்துக்கு மத்தியில் அமைந்திருப்பது , மிகவும் அத்தியவசியத் தேவையாக உள்ளது. 

முன்பு ஒரு காலம் இருந்தது. வெளியே சென்றால் பாவம் என்றிருந்தது. ஆனால், தற்போது வீட்டுக்குள்ளேயே நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு பாவங்கள் இடம் பெற்று வருவதைக் கண் கூடாகக் காண்கின்றோம். 

இன்றைய உலகம் நவீனமயமாக்கப்பட்டுவிட்டது. தொலைக் காட்சி, பேஷ் புக் என இன்னும் எத்தனையோ நவீன கருவிகள் மலிந்து குவிந்திருக்கும் காலம் இது. 

இதன் பின்னணியில், நமது இளம் சமுதாயம் இன்று சீரழிந்து கொண்டிருக்கிறது. எனவே, பெற்றோர்கள் ஒவ்வொரு பிள்ளையின் விடயத்திலும் மிக மிக அவதானமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.ஆகவே, நமது பிள்ளைகளின் எதிர் காலத்தை, கேள்விக் குறிக்குள் தள்ளிவிடாமல், கருத்தில் எடுத்து அவர்களைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பும் கடப்பாடும், ஒவ்வொரு பெற்றோருக்கும் அவசியமாகவும் அவசரமாகவும் இருக்க வேண்டும் என்றார். கல்லொழுவை ஜும் ஆப் பள்ளி வாசல் நிர்வாக சபைத் தலைவர் அல் ஹாஜ் ஏ. எச். எம். முனாஸ் பிரதம அதிதியாகவும், தாருல் அர்கம் குர் ஆன் கல்விப் பீடத்தின் ஆலோசகர் அல் ஹாஜ் எம். ஜெளபர் சிறப்பதிதியாகவும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -