ஸ்டான்லி ஜெயராஜ். அஷ்ரஃப்பின் அத்யந்த நண்பர்.
ஒரு தந்தி வருகிறது.
'Job available, come immediately - Ashraff'
தந்தியைக் கவனித்தார் ஸ்டான்லி.
கொடுக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு நாட்கள் பிந்தியிருந்தது.
அஷ்ரஃப் ஊரில் தனது கல்வியை 'ஒருகை' பார்த்துவிட்டு அதையே 'மறுகை' பார்க்க கொழும்பு வந்திருந்த தருணம்.
மச்சானும் மாவட்ட நீதிபதியுமான உசேனின் வீடு உறைவிடம்.பாணந்துறை இடம்.
அஷ்ரஃப் ஊரிலிருந்து புறப்படுகையில் ஸ்டான்லி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
'மச்சான் நீ கொழும்பு போனதும். உன்ட மச்சான்ட சொல்லி எனக்கொரு வேலைக்கு ஏற்பாடு செய்ய வேணும்'
உசேன் நீதிவானின் இல்லம் புகுந்த அஷ்ரஃப், வருகையின் உபசரிப்பு முடிந்த மறுகணமே முன்வைத்த வேண்டுகோள் -
''எங்கட ஸ்டான்லிக்கு ஒரு வேலை எடுத்துக் கொடுக்க வேண்டும்....''
உசேன் நீதிபதிக்கு ஸ்டான்லியை ஊரில் வைத்தே தெரியும்.
வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.
தந்தி கிடைத்து மூன்றாம் நாள் ஸ்டான்லி பாணந்துறை வந்தார்.
"ஏன் மூன்று நாள் சுணக்கம்?" கேள்வி எழுப்பினார் உசேன்.
அஷ்ரஃப்புக்கு இது ஆச்சர்யம். ஸ்டான்லி தந்தியைக் காட்டினார்; கிடைத்த திகதியைக் கூறினார்.
உசேன் நீதிபதி, உடனடியாக அஷ்ரஃப்பைக் கொண்டு தபாலதிபருக்கு கடிதமொன்று எழுத வைத்தார்.
இரண்டு தினங்களில் -
நடந்த தவறுக்கான மன்னிப்புக் கோரி, தந்திக் கட்டணமான எழுபத்தைந்து சதமும் திருப்பியனுப்பப்பட்டிருந்தது.
இது அன்றைய இலங்கையின் சிவில் நிர்வாகம்!
அஷ்ரஃப் எதிர்கொண்ட,
முதலாவது சிவில் நிர்வாகச் சீர்திருத்தம்.
(அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள்)
எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
ஓட்டமாவடி (கல்குடா)