க.கிஷாந்தன்-
அட்டன் டிக்கோயா நகரசபையினால் சேர்க்கப்படும் குப்பைகள் குடாகம பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடாகம பிரதேச மக்கள் 20.02.2017 அன்று காலை 11.00 மணியளவில் வீதியை மறித்து இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் பொதுப் போக்குவரத்து சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேல் பாதிப்புக்குள்ளாகின.
இதனைத்தொடர்ந்து இவ்விடத்திற்கு விரைந்த அட்டன் பொலிஸார் இக்குப்பை பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும் அந்த அதிகாரிகளின் நடவடிக்கையின் பின் இப்பிரச்சினை தீரும் என தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.
இதேவேளை குடாகம குப்பை பிரச்சினை தொடர்பாக 20.02.2017 அன்று நடைபெற்ற கினிகத்தேனை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் பேசப்பட்டன. இதன்போது அட்டன் நகரில் சேர்க்கப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு சரியான இடம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தற்போது இக்குப்பைகளை பிரச்சினை தீரும் வரை கொட்டகலை பிரதேசத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதனை தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்களில் ஒருவருமான கே.கே பியதாஸ அவர்கள் பிரதமருடன் பேசி குப்பையினை கொட்டுவதற்கு உடனடியாக ஒரு காணியினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த கினிகத்தேனை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.