உத்தரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, குஜராத்தில் பிறந்த என்னை உத்தரப் பிரதேசம் தத்தெடுத்துக் கொண்டது. நான் உத்தரப் பிரதேசத்தின் தத்துப் பிள்ளை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் உ.பி. ரேபரேலி யில் நேற்று நடந்த கூட்டத்தில் சோனியா காந்தி மகள் பிரியங்கா காந்தி பேசியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஒருவர் (மோடி) வாக்குறுதி களை அள்ளி வீசினார். ஆனால் அந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி அவர் மீண்டும் வாக் குறுதிகளை அள்ளி வீசுகிறார்.
உத்தரப் பிரதேசத்துக்கு தத்துப் பிள்ளைகள் தேவையில்லை. அவர்கள் மாநில மக்களின் நலன்களை மறந்துவிடுவார்கள்.
மண்ணின் மைந்தர்கள் (முதல்வர் அகிலேஷ் யாதவ்) மட்டுமே இங்கேயே தங்கியிருந்து மக்களின் நலனுக்காகப் பணி யாற்றுவார்கள். உங்கள் ஓட்டு தத்துப் பிள்ளைக்கா அல்லது மண்ணின் மைந்தருக்காக என் பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலின் போது வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி கங்கை எனது தாய் என்று கூறினார். கங்கையை தூய்மைப்படுத்து வேன். அதன் படித்துறைகளை நவீனப்படுத்துவேன். வாரணாசியில் ரிங் ரோடு போடுவேன், போஜ்புரி திரைப்பட நகரம் அமைப்பேன் என எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் எதையுமே நிறைவேற்றவில்லை.
அதேபோல பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலின்போது, அந்த மாநிலத்துக்கு சிறப்பு நிதியுதவி வழங்குவேன் என்று கூறினார். இதுவரை எந்த நிதியையும் அவர் வழங்கவில்லை.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை யின்போது நாட்டு மக்களை வங்கிகள், ஏடிஎம் வாயில்களில் நீண்ட வரிசையில் காக்க வைத்து துன்பப்படுத்தினார். ஆனால் கறுப்பு பணம் எதையும் மீட்கவில்லை என்று தெரிவித்தார்.