ஏ.ஜி.ஏ.கபூர்-
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளுடன் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ்கள் மீது கல்லெறிவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக் செயல் எனவும்; இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எமது அமைப்பு தெரிவிப்பதாக பயணிகள் நலன்புரிச் சங்க தலைவர் எம்.பி.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ரி எப் சி ஹோட்டலில் கடந்த திங்கட்கிழமை (20) இரவு இடம் பெற்ற அல்-றாசித் ட்ரவல்ஸ் இன் எட்டாவது பூர்த்தி நிகழ்வில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய தலைவர் தனதுரையில்:
இன்று இரவு கூட அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த அல்-றாஸித்திற்குச் சொந்தமான சொகுசு பஸ்மீது களுவாஞ்சிக்குடி கல்லாறு பிரதான வீதியில் வைத்து விஷமிகள் கல்லெறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளனர். இத் தாக்குதலின்போது சாரதியான எச்.எல்.முஹம்மட் அர்சாத் (33) காயமடைந்தார்.
இதேபோல் கடந்த 18 ஆம், 19ஆம் திகதிகளிலும் இந்த பஸ்மீது அம்பாரை மாவட்டம் அல்லிமுல்லை பிரதேச பிரதான வீதிகளில் வைத்து தாக்குதல் நடாத்தியுள்ளனர். இச்சம்பவங்களினால் பஸ்ஸிற்கும் சேதமேற்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறு பஸ்மீது தாக்குதல் நடாத்தி பயணிகளுக்கு உயிராபத்தையும், உளரீதியான தாக்கத்தையும், பயணத் தடங்கல்களையும் தொடாந்து விஷமிகள் ஏற்படுத்துவது வன்மையாகக் கண்டிப்பதோடு, பயணிகளின் ; நன்மை கருதி இது சம்பந்தமாக எமது அமைப்பு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அல்-றாசித் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவம் பயணிகளுக்கு பூரண பாதுகாப்பு வழங்கி அவர்களது பயணத்தை இறுதிவரைத் தடங்கலின்றி மேற் கொள்வதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தமை பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று அல்-றாசித் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.பி.அன்ஸார் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லெத்திப் கலந்து கொண்டு உரையாற்றியதோடு பயணிகள் நலன்புரி அமைப்பின் செயலாளர் டாக்டர் நக்பர் உள்ளிட்ட பலர் உரையாற்றியதோடு நூற்றுக்கனக்கான வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று அல்-றாசித் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.பி.அன்ஸார் அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டியமை குறிப்பிடத்தக்கது.