மலையகத் தமிழ் மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய சிறந்த தலைமைத்துவமாக தமிழ் முற்போக்குக் கூட்டணியை மலையகத் தமிழ் மக்கள் தெரிவு செய்துள்ளதால் இந்திய வீடமைப்புத்திட்டத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்யவேண்டிய தேவை தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஏற்படவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
> அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
> மலையக மக்களின் வீடில்லா பிரச்சினைகளைத் தெரிந்து கொண்ட இந்திய அரசாங்கம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நுவரெலியா மாவட்டத்திலும் பதுளை மாவட்டத்திலும் வாழும் தோட்டப்பகுதி மக்களுக்கு நாலாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு முன்வந்தது. இதன் போது 2014 ஆம் ஆண்டு மலையகத்திலுள்ள குறிப்பிட்டதொரு தொழிற்சங்கம் தனது கட்சி கொடிகளை அலங்கரித்துக் கொண்டு வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வுகளை நடத்தியது.
இதற்கு மலையகத் தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் இந்திய வீடமைப்புத்திட்டப் பணிகள் மலையகத்தில் முறையாக ஆரம்பிக்கப்படாமல் கிடப்பில் கிடந்து. நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதன் பின்பு மலையகப் பகுதிகளில் தோட்டங்களைக் கிராமங்களாக மாற்றும் வகையில் மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அந்த அமைச்சுப் பொறுப்பு அமைச்சர் திகாம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறானதொருநிலையில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அமைச்சர் திகாம்பரம் 400 தனி வீடுகளைச் சிறப்பாக கட்டி முடித்ததன் காரணமாக அமைச்சர் திகாம்பரம் மீது மலையக மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய தூதரகத்துக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.
> இதன் பின்னணியிலேயே கிடப்பில் கிடந்த இந்திய வீடமைப்புத்திட்டத்தை அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சின் ஊடாக மேற்கொள்வதற்கான உடன்படிக்கையை இலங்கைக்கான இந்திய தூதரகம் மேற்;கொண்டது. இதன் பின்பு கொத்மலை டன்சினன் தோட்டத்தில் இந்திய வீடமைப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொகவந்தலாவையிலும் இந்திய வீடமைப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆரம்பிக்கப்படாமலிருந்த இந்திய வீடமைப்புத்திட்டம் அமைச்சர் திகாம்பரத்தின் ஊடாக நிச்சயம் முழுமைப் பெறுமென இலங்கைக்கான இந்திய பிரதி தூதுவர் பகிரங்கமாக பாராட்டுத் தெரிவித்தார்.
> மலையகத்தில் தற்போது நேர்மையான முறையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மலையகத்தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இதுவரை சாதிக்க முடியாத விடயங்கள் சாதிக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு நேர்வழியில் சேவையாற்றுகின்றவர்களை அறிந்து கொண்டு உரிய தொழிற்சங்க அரசியல் பலத்தை வழங்குவதற்கு மலையக மக்கள் தாமாகவே முன்வந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே தற்போது அரசியல் வங்குரோத்து நிலையடைந்துள்ள சிலர் காழ்ப்புணர்வோடு அறிக்கை விடமுடியுமே தவிர எம்மைப் போல சாதித்துக் காட்டுவதற்கு ஒருநாளும் முடியாது. எனவே இந்திய வீடமைப்புத் திட்டம் எவ்வகையில் முன்னெடுக்கப்படுகின்றதென்ற தகவல்கள் உடனுக்குடன் இலங்கைக்கான இந்திய தூதரகம் பெற்றுக்கொள்கின்றதென்பதையும் இதற்காக தரகர்கள் எவரும் தேவையில்லை என்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.