எம்.எஸ்.எம்.ஸாகிர்-
தம்புள்ளைப் பள்ளிவாசலை இடமாற்றிச் செல்வதற்கும் வாகனத் தரிப்பிடம் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டு போதுமான இடவசதியுடைய காணிகளை அதாவது, 80 பேர்ச்சஸ் காணியை பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முஸ்லிம் முற்போக்கு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம்.அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
தம்புள்ளைப் பள்ளிவாசலை வேறு இடத்துக்கு கொண்டு செல்வதற்குத் தேவையான போதிய இடவசதிகளை பள்ளிவாசல் நிர்வாகிகள் கேட்டிருப்பது குறித்து தற்பொழுது பள்ளிவாசலுக்குச் சொந்தமான 18 பேர்ச்சஸ் காணியை விட ஓர் அங்குலமேனும் மேலதிகமாகத் தரமுடியாது என அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விடயம் மரத்தால் வீழ்ந்தவனை மாடு மிதிப்பது போன்ற ஒரு செயலாகும். ஏனெனில், பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்ட தம்புள்ளைப் பள்ளிவாசலை அன்றிலிருந்து அகற்றுவதற்கு இந்த அரசாங்கத்தின் கீழ் இணங்கிய பள்ளிவாசலின் தர்மகர்த்தாக்களுக்கு இடி விழும் செய்தியாக தரப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சியின் கீழ் பல இடையூறுகள் பள்ளிவாசலுக்கு நேர்ந்துள்ளதாக அன்று பலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால், அனைவருக்கும் சாதாரண நீதியைச் செலுத்துவோம் என முஸ்லிம்களுடைய பூரண ஆதரவுடன் தழைத்து வந்த இந்த நல்லாட்சியின் உறுப்பினராகிய அமைச்சர் சம்பிக ரணவக இப்படிக் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது.
மஹிந்த ஆட்சியில், பிரதம அமைச்சராக இருந்த டி.எம். ஜயரத்ன, தம்புள்ளைப்பள்ளியை இடமாற்றம் செய்து போதுமான இடவசதி உள்ள காணிகளைத் தருவதாகவும் இடமாற்றம் செய்த காணிகளில் வாகனத் தரிப்பிடம் மற்றும் பூங்காவனம் போன்ற வசதிகளை அமைத்துத் தருவதாகவும் கூறியதை இந்த நேரத்தில் நான் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
ஷரீயா நீதியையே கண்டித்து நூல் எழுதிய ஒருவரிடமிருந்து முஸ்லிம்கள் எந்தவிதமான நீதியையும் எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகத் தலையிட்டு தம்புள்ளைப் பள்ளிவாசலை இடமாற்றிச் செல்வதற்கும் வாகனத் தரிப்பிடம் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டும் போதுமான இடவசதியுடைய காணிகளை அதாவது, 80 பேர்ச்சஸ் காணியை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பது நல்லிணக்க அரசாங்கத்தின் முஸ்லிம்களுக்கு செய்யக் கூடிய பெரு கைங்கரியமாகும் என்றும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம் - என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.