கிழக்கு மக்கள் வழங்கிய ஆணையை காட்டிக்கொடுத்துவிட்டு கட்சி வளர்ச்சி பற்றி பேசுவது வேடிக்கையானது: சுபையிர் Mpc

எம்.ஜே.எம்.சஜீத்-

கிழக்கு மாகாண மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணையை காட்டிக்கொடுத்துவிட்டு கட்சி வளர்ச்சி பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்; மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிகளுக்கான விசேட கூட்டம் (16) ஜனாதிபதியின் ஆலோசகர் சம்பானி தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்; தலைமையகத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த 2008ஆம் ஆண்டு அமையப்பெற்ற மாகாண சபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் ஆட்சிப் பொறுப்பை பெற்றுத்தந்த அதே மக்கள் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் அந்த ஆணையைப் பெற்றுத்தந்தனர். இதன் மூலம் ஐ.ம.சு. கூட்டமைப்பு 14ஆசனங்களையும், த.தே. கூட்டமைப்பு 11ஆசனங்களையும், ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் 7ஆசனங்களையும், ஐ.தே.கட்சி 4ஆசனங்களையும், ஜே.வி.பி 1 ஆசனத்தினையும் பெற்று ஆட்சி நடைபெற்று வந்தது.

அதன் பின்னர் நல்லாட்சி எனும் போர்வையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கிழக்கு மாகாண மக்கள் ஐ.ம.சு கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணையை உதாசீனம் செய்து ஒரு அமைச்சுப் பதவியினை மாத்திரம் பெற்றுக்கொண்டு கிழக்கு மாகாண மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை காட்டிக் கொடுத்து பெரும் தவறிழைத்து விட்டு இப்போது கிழக்கு மாகாணத்தில் கட்சி வளர்ச்சி பற்றி பேசுவது மிகவும் கவலையான விடயமாகும்.


கிழக்கு மாகாண சபையின் கடந்த ஆட்சியின் போது ஐ.ம.சு. கூட்டமைப்பினால் தனக்கு வழங்கப்பட்ட பிரதி தவிசாளர் பதவி கூட புதிய முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டினால் எனக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு பறித்தெடுக்கப்பட்டதுடன், கடந்த நல்லாட்சி அமைவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நேரடி தொலைபேசி அழைப்பிற்காக அவரின் வெற்றிக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தேர்தல் கூட்டங்களை நடாத்தி ஜனாதிபதியின் வெற்றிக்காகவும், நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்கும் உதவிய எனது பதவி பறிக்கப்பட்ட விடயம் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் முதலமைச்சரைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் தொலைபேசி வாயிலாக மூன்று மில்லியன் தருவதாக என்னிடம் பேசினார். ஆனால் இறுதியில் பணங்களை கொடுத்தே ஹாபீஸ் நசீர் அகமட் அந்த முதலமைச்சர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். இதற்கு ஐ.ம.சு கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் சோரம்போய் இறுதியில் ஏமாற்றப்பட்டு வெறுங்கையுடன் திரும்பியது மாத்திரமல்லாமல் இந்த சூழ்ச்சியின் பிரதானியாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த செயற்பட்டதனையும் இச்சந்தர்ப்பத்தில் கூறியாக வேண்டும்.

எனவே மீண்டும் கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை கட்டியெழுப்புவதானால் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோரை அழைத்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று மக்களிடமிருந்து இழந்த செல்வாக்கை பெற்றுக்கொள்வதன் ஊடாகவே மீண்டும் ஐ.ம.சு.கூட்டமைப்பு கிழக்கில் ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்பதுடன் உள்ளுராட்சி சபைகளிலும் பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -