2015ம் ஆண்டு தேசியப்பட்டியல் பிரச்சினையின் உண்மையான யதார்த்தம் என்ன? பாகம் 1

எஸ்.அஷ்ரப்கான்-

ல்லோரையும் ஒரே தராசில் போட்டு நிறுக்க முற்படுபவர்கள் ஒரு கணம் கண்களை அகலத் திறந்து உண்மையை உள்வாங்குங்கள். அதன்பின் உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள்.

2010 ம் ஆண்டு தேசியப்பட்டியல் விடயத்தில் வை எல் எஸ் ஹமீட் எவ்வாறு நடந்து கொண்டார்; என்பதை கடந்த பதிவில் கூறியிருந்தேன். அதாவது, தோற்றவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவதில்லை; என்ற மஹிந்த ராஜபக்சவின் தீர்மானத்தினால் அமீரலிக்கு அதனைப் பெற்றுக் கொடுக்கமுடியாத சூழ்நிலையில் கட்சிக்கு தருவதற்கு உடன்பட்ட தேசியப்பட்டியலை நியாயமாக வை எல் எஸ் ஹமீட்டிற்கு பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்; அதனை றிசாட் செய்யவில்லை, அதனால் கட்சியே தனக்குரிய நியாயமான ஒரு ஆசனத்தை இழந்திருந்தது. இருந்தாலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஏன் அந்த ஆசனத்தைப் பெற்றுத்தரவில்லை; என்று வை எல் எஸ் ஹமீட் கேட்டதுமில்லை; அதைப்பற்றி எங்கும் கதைத்ததுமில்லை. ( அதனை விட்டுக் கொடுத்துத்தான் பசில் ராஜபக்ச மூலமாக வர்த்தக கைத்தொழில் அமைச்சைப் பெற்றுக்கொண்ட கதைகளை அண்மையில் கேள்விப்பட்டேன், இருந்தாலும் அதற்குள் செல்ல விரும்பவில்லை).

எனவே தேசியப்பட்டியலுக்காக ஆலாய்ப்பறத்திருந்தால் அன்று றிசாட்டுடன் போராடியாவது அதனைப்பெற வை எல் எஸ் ஹமீட் முயற்சித்திருப்பார். அன்று றிசாட் கட்சியில் ஒரு சாதாரண அங்கத்தவராக கூட இருக்கவில்லை. கட்சி முழுக்க முழுக்க வை எல் எஸ் ஹமீட்டின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் அது. றிசாட் அதனைச் செய்யவில்லை; என்றால், கட்சியை எடுத்துக்கொண்டு அன்றே வந்திருக்கலாம். நீதிமன்றம் செல்லவேண்டிய தேவைகூட ஏற்பட்டிருக்காது.

அல்லாஹ் நாடினால், பாராளுமன்றம் செல்லக் கிடைத்தால், அல்ஹம்துலில்லாஹ் . அவ்வாறு கிடைக்காவிட்டாலும், அல்ஹம்துலில்லாஹ்.
சமூகத்திற்காக, அல்லாஹ் விடம் அதற்குரிய நற்கூலிகளை எதிர்பார்த்து பாராளுமன்றம் செல்லவேண்டும்; என்று நினைப்பவர்களுக்கு இரண்டும் ஒன்றுதான்.,அவர்கள் தனிப்பட்டமுறையில் இழப்பதற்கு எதுவுமில்லை. தனக்காக பாராளுமன்றம் செல்லவேண்டும்; என்று நினைப்பவர்களுக்கு அது பாரிய இழப்பு. எனவே அவர்களது விரக்தி அவர்களது செயல்களில் வெளிப்படும். எனவேதான் 2010 ம் ஆண்டு றிசாட் அவ்வாறு நடந்துகொண்டபோதும் வை எல் எஸ் ஹமீட்டிடம் இருந்து எந்தவித மாற்றமும் ஏற்பட வில்லை. ( அவ்வாறு நடந்துகொண்டதுதான் வை எல் எஸ் ஹமீட்டின் பலஹீனம், என்று நினைத்துத்தான் இம்முறையும் அவர் தனது விளையாட்டைக் காட்டியிருக்கின்றார்

அதேபோன்றுதான் 2015ம் ஆண்டும் றிசாட் தனது கைவரிசையை காட்டியபோதும் வை எல் எஸ் ஹமீட் அதற்கெதிராக கிளர்ந்தெழவுமில்லை, கூட்டங்கள் போடவுமில்லை, அறிக்கைகள் விடவுமில்லை. இன்னும் அவர் தனது கட்டுப்பாட்டை இழக்கவுமில்லை. ஆனாலும் வை எல் எஸ் ஹமீட் இன்று றிசாட் தொடர்பாக சில அறிக்கைகளை வெளியிடுகின்றார், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் சில உண்மைகளை வெளிக்கொணர்கின்றார்; என்றால் ஏன், இதுவரை அவர் கூறிய விடயங்கள் என்ன? அவர் கூறிய விடயங்கள் உண்மையின் அடிப்படையானவை இல்லையா? றிசாட் மறுத்து அவற்றைப் பொய் என நிரூபித்திருக்கின்றாரா? அல்லது அவற்றுக்குப் பின்னால் வலுவான நியாயங்கள், சமூகநோக்கு இல்லை என்று நிறுவியிருக்கின்றாரா? அல்லது இதில் அவ்வாறு எதுவுமில்லை, இது தேசியப்பட்டியல் விரக்தி, என்றாவது அவரால் நிறுவமுடியுமா?

எந்த உண்மைகள் எந்த நல்நோக்கத்திற்காக கூறப்பட்டபோதும் அந்த உண்மைகள் தன்னைச் சுடுகின்றன; என்பதற்காக கூலிப்பட்டாளத்தை வைத்து கொச்சைப் படுத்துவதால் உண்மைகளை உறங்க வைக்க முடியாது. எனவே 2015ம் ஆண்டு தேசியப்பட்டியல் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு ஒப்புவிக்கின்றேன். எல்லோரையும் ஒரே தராசில் போட்டு நிறுப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்; பதவி கிடைக்காத போது மக்கள் மன்றத்திடம் பதறியடித்துக்கொண்டு முறையிட ஓடிவந்தவர் அல்ல, வை எல் எஸ் ஹமீட் அல்லது மேடைபோட்டு றிசாட்டின் வண்டவாளங்களையெல்லாம் தண்டவாளத்தில் ஏற்றவுமில்லை; அவ்வாறு ஏற்ற வேண்டுமானால் அது பெரிய வேலையுமில்லை. அதன்பின்பு றிசாட் தலையில் முக்காட்டுடன்தான் திரியவேண்டும்.

பொதுத்தேர்தல் நடந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை தனக்கு தேசியப்பட்டியல் விடயத்தில் என்ன நடந்தது; என்று எங்கும் விபரிக்கவில்லை. எத்தனையோ பேர், பொதுக்கூட்டம் போட்டு அல்லது பத்திரிகையாளர் மாநாடு வைத்து அனைத்தையும் கூறுங்கள் என்று வற்புறுத்தினார்கள் ; அவ்வாறிருந்தும் செய்யவில்லை; ஆனால் அன்று அல்ஹம்துலில்லாஹ் எவ்வாறு சமூகத்திற்காக குரல்கொடுத்தோமோ அதே உளத்தூய்மையோடு சில உண்மைகளைக் கூறுவதை கொச்சைப்படுத்த இவர்கள் முனைகின்றபொழுது, நடந்த உண்மைகளை இனியும் வெளியில் சொல்ல தாமதிக்க முடியாது. எனவே இந்த தேசியப்பட்டியல் விடயத்தில் என்ன நடந்தது, வை எல் எஸ் ஹமீட் கூறுகின்ற விடயங்களில் நியாயம் இருக்கின்றதா, என்று உங்கள் மனச்சாட்சியிடம் கேளுங்கள்

இதில் வேடிக்கை அல்லது மாபெரும் நயவஞ்சகத்தனம் என்னவென்றால், ஒருவருக்கு ஒரு அநியாயத்தை அல்லது ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதென்பது அவர்களது சமூகவிரோத செயல்களை அந்த பிழை செய்யப்பட்டவர் எந்த சந்தர்ப்பத்திலும் சுட்டிக் காட்டுவதற்கான disqualification ஆக பார்க்கப் படுவது அல்லது காட்ட முற்படுவது. அதாவது இவருக்கு நாங்கள் ஏற்கனவே ஒரு பிழை செய்திருப்பதால் எங்களுடைய வேறு எந்தப் பிழைகளையும் இவர் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு சுட்டிக்காட்டினால் அவருக்கு நாங்கள் ஏற்கனவே ஒரு பிழை செய்ததனால்தான் அவர் இவ்வாறு கூறுகின்றார்; என்று கூறி தப்பித்துக் கொள்வோம். எங்களது பிழைகளையும் தொடர்வோம். அதை நம்புவதற்கு சமூகத்தில் ஒரு கூட்டம் தயாராக இருக்கின்றது. அந்தக் கூட்டத்தை நம்பித்தானே நாங்களும் தொடர்ந்தும் பிழை செய்கிறோம். என்ற இவர்களின் நிலைப்பாட்டை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

எனவே இந்த தேசியப்பட்டியல் விடயத்தை தெளிவுபடுத்தியதன் பின் இன்னும் பலவிடயங்களை இன்ஷா அல்லாஹ் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.

2015ம் ஆண்டு தேசியப்பட்டியல் விவகாரம்
------------------------------------------------
2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட அரசியல் களநிலவரத்தில் தளம்பல் ஏற்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் 50,000 முதல் 55000 வாக்குகள் மு கா எதிர்வாக்குகளாக தலைவரின் மறைவுக்கு பின் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. ( சில பழையன கழிதலும் புதிய சேர்தலும் இருந்த போதிலும்). இந்த வாக்குகள் முன்னாள் அமைச்சர்கள் பேரியலையும் அதாவுல்லா வையும் நோக்கியதாகவே இருந்தன. ஆனால் இம்முறை முன்னையவர் அரசியலில் இல்லாததாலும் பின்னையவர் கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை ஆதரித்தனாலுமே இத்தளம்பல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தளம்பல் நிலையை அ இ ம காங்கிரசுக்கு சாதகமாக மாற்றவேண்டும்; அடுத்த பொதுத்தேர்தலில் இன்ஷா அல்லாஹ் ஒரு ஆசனத்தையாவது பெறவேண்டும்; என்ற நோக்கில் கட்சியின் கட்டமைப்புக்களை ஒவ்வொரு ஊரிலும் நிறுவுகின்ற பணியில் மும்முரமாக ஈடுபட்டேன். அல்ஹம்துலில்லாஹ். இக்கட்டமைப்பை நிறுவுகின்ற பணிகள் அவை தொடர்பான நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தன. எந்த அளவு என்றால் இம்முறை அ இ ம காவிற்கு அம்பாறையில் ஒரு ஆசனம் கிடைக்கும் என்று உடகங்கள் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே ஆரூடம் கூறுமளவுக்கு இருந்தது. அப்பொழுது இன்று அம்பாறையில் கட்சிக்கு உரிமை கோருகின்ற எந்த பிரமுகர்களும் இருக்கவில்லை.

இந்நிலையில் ஒருநாள் திடீரென றிசாட் எனது வீட்டுக்கு வந்தார். வந்தவர் முக்கியமான விடயம் எதுவும் பேசவில்லை. சாதாரணமாக சில விசயங்களை சம்பாசித்து விட்டு, " அடுத்த பொதுத்தேர்தலில் நீங்கள் போட்டியிட வேண்டாம், தேசியப்பட்டியலில் வாருங்கள்; கட்சி இம்முறை எட்டு பத்து மாவட்டங்களில் போட்டியிட இருப்பதால் தேர்தலை ஒருங்கிணைப்பதற்கு ஒருவர் வேண்டும். அதனை ஒன்றில் நீங்கள் செய்யவேண்டும் அல்லது நான் செய்ய வேண்டும், அதனை செய்யக்கூடிய வேறு ஒருவர் நமது கட்சியில் இல்லை; எனவே நீங்கள் தேசியப்பட்டியலில் வாருங்கள்" என்றார். அதற்கு நான், " தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கின்றதுதானே, உரிய நேரம் வரும்போது பேசி ஒரு முடிவு எடுப்போமே" என்றேன். இவ்வாறு நான் கூறியதற்கான காரணம் எனது உள்ளத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும்; என்ற எண்ணம் இருந்ததாகும். எனது பதிலைக் கேட்டதும் சற்று ஆத்திரப்பட்டவராக, " அவ்வாறு நீங்கள் தேசியப்பட்டியலில் வராவிட்டால் நான்தான் தேசியப் பட்டியலை எடுத்துக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்ற பணியைச் செய்ய வேண்டும், என்றார்.

அதற்கு நான், " காலம் இருக்கின்றதுதானே உரிய நேரத்தில் பேசி முடிவெடுப்போமே" என்று மீண்டும் கூறினேன். அதன்பின் அவர் சென்று விட்டார். றிசாட் மீது நான் வைத்திருந்த அபரிமித நம்பிக்கையும் பாசமும் றிசாட்டை சந்தேகக் கோணத்தில் பார்ப்பதில் இருந்து என்னைத் தடுத்து விட்டது. இல்லையென்றால் அன்றைய நிகழ்வே றிசாட்டின் உள்ளத்தில் இருந்த சதித்திட்டத்தை கட்டியம் கூறுவதற்கு போதுமானதாக இருந்தது.

றிசாட்மீதிருந்த நம்பிக்கை காரணமாக அன்று நான் சிந்திக்கத் தவறியவை,
1) வழமையாக ஏதாவது முக்கியமான விடயம் இருந்தால்தான் அவர் என் வீடு வருவார். அன்று அவ்வாறு எந்தவொரு முக்கியமான விசயமும் பேசவில்லை. எனவே அவர் அன்று பேசவந்த முக்கிய விடயம் அந்த தேசியப்பட்டியல் பற்றியதுதான்; என்பது.

2) தேர்தலுக்கு காலம் இருந்த சூழலில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தேசியப்பட்டியல் விவகாரத்தை என்வீடு தேடிவந்து பேசவேண்டியது ஏன்?

3) நீங்கள் தேசியப்பட்டியலில் வரவிரும்பாவிட்டால், தான் தேசியப்பட்டியலில் வரவேண்டிவரும்; என்று கூறியதன் மூலம் இரண்டு விடயங்கள் வெளிப்படுத்துகின்றார். ஒன்று தேசியப்பட்டியலை நான் ஏற்றுக்கொள்ளவேண்டும்; என்ற ஓர் அழுத்தம். இரண்டு நான் தேசியப்பட்டியலை ஏற்றுக்கொள்வதற்கான சம்மதத்தை உடனடியாக எதிர்பார்த்து வந்து அப்பதில் கிடைக்காதினால் அவருக்குள் ஏற்பட்ட ஏமாற்றம்.

4) தேர்தலுக்கு கால அவகாசம் இருந்தபோது அவ்வளவு அவசரமாக தேசியப்பட்டியல் விடயத்தை என்னுடன் கதைத்து எனது சம்மதத்தைப் பெற அவரைத் தூண்டியது என்ன? வை எல் எஸ் ஹமீட் கட்சி நடவடிக்கைகளில் அம்பாறையில் மும்முரமாக ஈடுபடுகின்றார், சிலவேளை தேர்தல் மூலம் பாராளுமன்றம் செல்லக்கூடிய நிலை உருவானால்? அதனை அனுமதிக்க முடியுமா? எனவே தேசியப்பட்டியல் நம்பிக்கையை அவர்மீது திணித்து அம்பாறை மாவட்டத்தில் அவரது வேகத்தைக் குறைத்து இறுதியில் காலை வாருவதா? ஒரு ஆசனம் இழக்கப்பட்டாலும் பரவாயில்லை வை எல் எஸ் ஹமீட் பாராளுமன்றம் செல்லக் கூடாது; என்பதை 2010 ம் ஆண்டும் நிரூபித்தவர்தானே!

இவ்வாறான நியாயமான சந்தேகக் கோணத்தில் அன்று சிந்திக்கத் தவறிவிட்டேன். ஒருவர் மீது அளவுகடந்த நம்பிக்கை வைப்பது பிழை என்பதைப் புரிந்து கொண்டேன். என்ன செய்வது, எந்த நேரமும் அல்லாஹ்வின் பெயரையும் தொட்டதற்கெல்லாம் ' வல்லாஹி' என்றும் சொல்லிக்கொண்டு ஒரு அப்பாவியாக என்னிடம் வேசம் போட்ட ஒருவரை எப்படி சந்தேகிப்பது. இன்று அவரைப் பற்றி தெரிந்தவர்கள் கூறுகின்றார்கள் ' அவர் ஏதாவதொன்றுக்கு சத்தியம் செய்தால் அதற்குள் பொய் இருக்கின்றது என்று பொருளாம்; என்று.

தேசியப்பட்டியல் விடயத்தில் என்னை சம்மதிக்க வைக்கும் அவர் முயற்சியை அத்துடன் நிறுத்தவில்லை. ( தொடரும்)

வை எல் எஸ் ஹமீட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -