பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்து
உள்ள ஹோம் வேர்க் முடித்து விட்டு
உண்ணச் சொல்லும் அம்மா
காலை எழும்பி கணக்குக் கேட்டு
கறார் பண்ணும் அம்மா
மாலை டியூஷன் போக மறுத்தால்
தோலை உரிக்கும் அம்மா
எழுதி முடித்து எட்டிப் பார்த்தால்
இன்னும் எழுது என்பார்
அழுது படித்து அசதி என்றால்
அடிப்பேன் என்னும் அம்மா
பாப்பா மலர்ப் பாட்டை பிள்ளை
பாடி ஆடும் போது
வாப்பா வந்து நல்லா அடிக்கும்
வாய்ப்பாடு கேட்டு என்பார்
அள்ளிப் பணத்தை செலவு செய்து
அக்கறை காட்டும் அம்மா
பிள்ளைக் குறும்பை கொள்ளை அடித்து
முள்ளாய் வதைக்கும் கோலம்.
இறகை ஒடித்து சிறகை வெட்டும்
இந்தக் கல்வி எதற்கு
முறையாய்ப் பாசம் கொடுக்காக் கல்வி
மோசத்தையே வழங்கும்.