வடக்கு மாகாணசபையின் 88வது அமர்வு இன்றைய தினம் (14-03-2017) ஐ.நா மனித உரிமைத் தீர்மானத்தின் மீதான பிரேரணை நிறைவேற்றுவதற்கான விஷேட அமர்வாக இடம்பெற்றது. இந்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அஸ்மின் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்.
வடக்கு மாகாணசபையிலே விவாதங்கள் இடம்பெறும்போது அமைதியின்மை நிலவுகின்றது இதுவே வழமை, ஆனால் கடந்த அமர்விலே தண்ணீர் தொடர்பிலான விவாதம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சபையிலே ஒருவித அமைதியான சூழல் நிலவியது. இதனை கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே அவையில் அறிமுகம் செய்தார், அமைதி நிலவும்போது கருத்துக்களை முன்வைக்கின்றவர்கள் கருத்துக்களைச் செவிமடுக்கின்றவர்கள் மத்தியில் ஒரு சுமூகமான நிலைமை இருக்கும், முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களை மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கான சரியான சூழ்நிலை இருக்கும், இதனையே இன்றைய அமர்விலும் நான் எதிர்பார்க்கின்றேன். ஐ.நா பிரேரணை தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கின்ற ஒரேயொரு சர்வதேச சந்தர்ப்பமாகும். இதனை சரியாகக் கையாளத்தவறினால் அந்த சந்தர்ப்பமும் இல்லாமல் போய்விடும்.
யாழ்ப்பாணத்திலே “கெட்டிக்காரன்” என்ற ஒரு சொற்பிரயோகம் இருக்கின்றது; சிறுவர்களாக இருக்கின்ற காலத்திலே கெட்டிக்காரன் என்று எவராவது எம்மைப் பாராட்டினால் எமக்கு பூரிப்பு ஏற்படும்; இப்போது ஐ.நா விவகாரத்தை வைத்து பலர் கெட்டிக்காரர்களாக முயற்சிக்கின்றார்கள், எனவே தம்முடைய மனதிற்குப் பட்டதையெல்லாம் அவர்கள் சொல்கின்றார்கள், ஆனால் அது பொறுத்தமானதா அல்லது சரியானதா, அல்லது மக்களுக்கு நன்மையளிக்குமா என்று அவர்கள் சிந்திப்பதில்லை; மக்களை ஒரு மாயைக்குள் வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றார்கள். தம்மைக் கெட்டிக்காரர்கள் என்று சொல்லவேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
மற்றுமொரு விடயமும் இருக்கின்றது: தியாகி, துரோகி என்கின்ற பட்டங்கள் சார்ந்ததுவே அந்த விடயமாகும். வடக்கிலே இடம்பெறுகின்ற நிகழ்வுகளைச் சூழ ஒரு மாயைக் கட்டியெழுப்புகின்றார்கள், அந்த மாயைக்குள் இரு அணிகள் தோன்றுகின்றன ஒன்று ஆதரிக்கும் அணி; அதனை தியாகிகள் என்பார்கள் அதனை எதிர்க்கும் அணி துரோகிகள் என்பார்கள். இதனை கடந்த காலங்களிலே தொடராக நாம் அவதானிக்கின்றோம். இப்போது ஐ.நா விடயத்திலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டிருக்கின்றது.
ஐ.நா தீர்மானம் என்ன, இராஜதந்திர நடைமுறைகள் என்ன, இலங்கையின் நிலைப்பாடு என்ன, சர்வதேசத்தின் நிலைப்பாடு என்ன என்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல்; கால அவகாசம் என்ற சொற்பதத்தை எவரோ ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்துவிட்டார், கால அவகாசத்தை எதிர்ப்போர் தியாகிகள் என்றும், கால அவகாசத்தை ஆதரிப்போர் துரோகிகள் என்றும் ஒரு மாயை இங்கும் உருவாக்கப்பட்டது. இப்போது முடிவுகளை எடுக்கின்ற அல்லது நிலைப்பாடுகளை எடுக்கின்ற கட்சிகள் அமைப்புகள் எல்லாம் இந்த மாயைக்குள் சிக்கிக்கொண்டு தம்மைத் தியாகிகளாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பிழையான நிலைப்பாடுகளை மேற்கொள்கின்றார்கள்.
முதலில் ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் கால அவகாசம் என்ற விடயத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான தொடர்பு என்ன என்ற அடிப்படை அறிவு பலருக்கு இருக்கவில்லை. கூட்டமைப்பு கால அவகாசம் கோரும் நிலையிலோ அல்லது கால அவகாசத்தை வழங்கும் நிலையிலே இல்லை என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. இலங்கை ஒரு நாடு என்ற ரீதியில் கால நீடிப்பைக் கோரியிருக்கின்றது, மனித உரிமைப் பேரவையில் இருக்கின்ற அங்கத்துவ நாடுகள் அதனை வழங்குவதா இல்லையா என்ற முடிவை எடுப்பார்கள்.
அந்த நாடுகள் இவ்விடயத்திலே தொடர்புபட்டிருக்கின்றவர்களின் நிலைகளை மதிப்பீடு செய்வார்கள், கேட்டறிவார்கள்; எனவே தமிழ் மக்களின் பொதுவான நிலைப்பாடு கால நீடிப்பு என்பதையும் தாண்டி “ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வில் 2015 செப்டமர் மாதத்தின் 30/1 தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படல் வேண்டும்” என்பதாகவே இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை வலியுறுத்தியது, தமிழ் சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தினர், எம்முடைய முதலமைச்சர் அவர்களும் அதனை வலியுறுத்தினார், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பல வலியுறுத்தின, இப்போது வடக்கு மாகாணசபையும் வலியுறுத்துகின்றது. முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும் என்று இருந்தால் அது இறந்தகாலத்திலா, அல்லது நிகழ்காலத்திலா அல்லது எதிர்காலத்திலே என்ற கேள்வி இருக்கின்றது. அறிவுடைய சமூகம் இதனைக் கண்டுகொள்வார்கள்.
ஜெனீவாவிலே கருத்துவெளியிட்டுள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்த சங்கரி அவர்கள் ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் விவகாரம் ஒரு நீண்ட தொடர் நடவடிக்கையாகும் இப்போது ஒரு தீர்க்கமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது; இதனை கச்சிதமாக நாம் பயன்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்” இவற்றை நாம் புரிந்துகொள்தல் அவசியமாகும்.
இந்த சந்தர்ப்பத்திலே வடக்கு மாகாண முஸ்லிம் மக்களும் சுயாதீனமாக குறித்த தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை முன்னெடுத்திருக்கின்றார்கள், அவர்கள் சார்பிலும் ஒரு குழு ஜெனீவா சென்று தம்முடைய நிலைப்பாடுகளை முன்வைக்க இருக்கின்றார்கள் என்ற தகவலையும் இங்கே முன்வைக்கின்றேன். இந்த சர்வதேச வாய்ப்பை வடக்கு மக்கள் எல்லோரும் இந்த நாட்டிற்கும், மக்களுக்கும் பயனுள்ளவிதத்திலே பயன்படுத்த முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
தகவல்: எம்.எல்.லாபிர்-