அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா வைத்தியசாலையில் நிலவும் இடப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் பொருட்டு மருந்துகளை களஞ்சியப் படுத்த இரண்டு கண்டைனர்கள் கொள்வனவு செய்யும் பணிப்புரையை சுகாதாரப் பிரதியமைச்சர் பைசல் காசிம் இரு வாரங்களுக்கு முன் விடுத்திருந்தார். எனினும், இதுவரை அவை வைத்தியசாலைக்கு வந்து சேரவில்லை என கவலை தெரிவிக்கப் படுகின்றது.
டெங்கு காரணமாக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் படும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருந்தது. இதனால் அங்கு பாரிய இடப் பற்றாக்குறை நிலவியது. இதனை நிவர்த்திக்கும் பொருட்டு அங்குள்ள மருந்துக் களஞ்சியத்தையும் வாட்டாக பயன் படுத்துவதென்றும், மருந்துகளை களஞ்சியப் படுத்த குளிரூட்டப்பட்ட இரு கண்டைனர்கள் கொள்வனவு செய்வதென்றும் இரு வாரங்களுக்கு முன் பிரதி அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப் பட்டது.
இதற்கமைய பிரதி அமைச்சரும் உரிய கண்டைனர்களை விரைவான முறையில்கொள்வனவு செய்யும் பணிப்புரையை விடுத்தார். எனினும் இந்த கண்டைனர்கள் இதுவரை வந்து சேரவில்லை. இதனால் வைத்தியசாலையில் நிலவும் இடப் பற்றாக்குறையும் குறையவில்லை. நோயாளிகள் பெரும் சிரமங்களை அனுவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.