பாறுக் ஷிஹான்-
எமது பிரதேசங்களில் நாம் அவசரமாகவும் ஒருமித்த கட்டமைப்பிலும் டெங்கு நோய் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமீம் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நாட்டில் பரவி பருகின்ற டெங்கு ஆட்கொல்லி நோய் தொடர்பாகவும் அந்நோய் வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் பரவுவதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். டெங்கு நோய்க்கான பரவல் அதன் அடிப்படைகளை ஆராய்ந்து உடனடியாக செயற்பட வேண்டும் இதுவே இன்றைய சூழலில் உயிராபத்தை தடுப்பதற்க்கான செயற்பாடாகும்.
எமது சூழலில் மீதும் நாம் வாழுகின்ற பகுதிகளில் மீதும் நாம் அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும். சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் நீர் தேங்கி நிற்கின்ற நுளம்புகள் பெருகுகின்ற இடங்களை இல்லாதொழிக்க வேண்டும். இதற்காக பொதுமக்கள் அதி கூடிய சிரத்தையுடன் நடந்து கொள்வதுடன் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் இதுவே இன்றைய காலத்தின் தேவையாகும்.
கிண்ணியாவில் டெங்குத் தொற்று அதிகரித்தபோது டெங்கு ஒழிப்பு பணிகளில் சுகாதார அதிகாரிகளுடன் இளைஞர்களும் தொண்டர்களாக ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கியது பாராட்டத்தக்க விடயமாகும். டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் நீர் தேங்கி நிற்கக் கூடிய பொருட்களை சூழலுக்கு சேர்க்காது தென்னம் குரும்பை யோகட் கப் வெற்று போத்தல்கள் வெற்று டயர்கள் பொலிதீன் கழிவுகள் போன்ற கழிவுகளை முறையாக அகற்றி வாரத்துக்கு ஒரு தடவையாவது சுற்றுப் புறச் சூழலை சுத்தப்படுத்தி உயிர்கொல்லி டெங்கு நோயை இல்லாதொழிக்க பொதுமக்கள் பங்களிப்புசெய்யவேண்டும்.
நாம் நோய்கள் ஏற்படும் முன் கவனமாக இருப்பதும் வருமுன் காப்பதும் சிறந்த செயற்பாடாகும். பாடசாலைகள் கல்வி நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பிரசாரம் கருத்தரங்குகள் துண்டுப் பிரசுரங்கள் போன்ற முறைகளைப் பயன்படுத்தி டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி டெங்கு நோயின் விபரீதத்தை மக்களுக்கு தெரியப்படுத்தி சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்படுதல் காலத்தின் தேவையாகும்.
இது தொடர்பில் இளைஞர்கள் அதிக அக்கறை எடுப்பது நல்லது என்று நினைக்கின்றேன். 2017 புத்தாண்டு பிறந்து இரு வாரங்களில் 1200 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டதோடு அத்தொகை மார்ச் மாதமாகின்றபோது 17 ஆயிரத்தை அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல பாகங்களிலும் டெங்கு நோய்த்தொற்று பரவிவருகின்றமை பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதை அடுத்து எமது கட்சி கூட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட உள்ளது எனவே சகல தரப்பினரும் ஒன்றினைந்து குறித்த ஆட்கொல்லி நோயினை களைய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.
டெங்கு ஒரு ஆட்கொல்லி நோயாகும். சட்டத்தாலோ பொலிஸ் சுகாதார அதிகாரிகளாலோ வைத்தியர்களினாலோ மாத்திரம் இதனை ஒழித்துவிட முடியாது. டெங்கு நோயை இல்லாதொழிப்பதில் பொதுமக்கள் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்றாகும். ஒவ்வொருவரும் தமது வீட்டையும் சூழலையும் சுத்தமாக வைத்திருப்பது குறித்து அக்கறையோடு செயற்பட்டால் இந்த கொடிய நோயிலிருந்து மீட்சிபெற முடியும்.